பிரெட் சாண்ட்விச் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு.தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை, பூரி, பொங்கல்னு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா? ஒரு மாற்றத்துக்காக ஏதாவது சாப்பிடனும்னு நினைப்போம் இல்லையா? அதுக்கு பிரெட் சாண்ட்விச் நல்ல சாய்ஸ். இந்த பிரெட் சாண்ட்விச்சை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை பிரெட் – 1 பாக்கெட்
வெண்ணெய் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
உருளைக்கிழங்கு – 4
சீரகத்தூள் – ¼ டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ¼ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – 2 சிட்டிகை அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளியை மிக்சியில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
கடாயில் 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரளவுக்கு வதங்கியதும் அதனோடு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் ஒரு நிமிடம் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி கொதிக்கும் தருவாயில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்கவும். தக்காளி சுண்டி வரும் நேரத்தில் கரம் மசாலா சேர்த்து ஒரு கிண்டு கிண்டி வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்று சேரக் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் தடவிய பிரெட் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை பிரெட்டின் ஒரு பகுதியில் பரப்பி வைத்து இன்னொரு பிரெட் துண்டினால் மூடி ஒரு சிறிய அழுத்து அழுத்தவும்.
உள்ளே வைத்த கலவை வெளியே உதிராமல் இருக்கும். அதைக் கத்தியால் இரு துண்டுகளாக்கவும். சுவையான பிரெட் சாண்ட்விச் தயார்.
இதனை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக இன்னொன்று கேட்பார்கள்.
குறிப்பு
உருளைக் கிழங்குக்குப் பதிலாக கேரட், பீன்ஸ், கோஸ் முதலியவற்றை பொடியாக அரிந்தும் சேர்த்துச் செய்யலாம்.
வெங்காயம், தக்காளி மட்டும் சேர்த்துச் செய்தாலும் சுவையாக இருக்கும்.
பிரெட் துண்டுகள் மென்மையாக இருப்பதால் வெண்ணெய்யை அதன் இருபுறமும் தடவுவது சிறிது சிரமமானதே. அதனால் வெண்ணெய்யை தோசைக் கல்லில் போட்டு முழுவதும் பரப்பி விட்டு உடனடியாக 2 பிரெட் துண்டுகளை வைத்து முழுவதும் தேய்த்து விடவும். மறுபுறமும் இதே போல் செய்யவும்.
– பிரதிபா செந்தில்