பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் நகரத்தில் வாழ்பவராக இருந்தாலும் கிராமத்தில் வாழ்பவராக இருந்தாலும் அனைவருக்கும் இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகிவிட்டது.
நிறைய பேர் தங்களுடைய பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடவில்லை என்றாலும் தங்களுடைய குழந்தைகளின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் பள்ளிக்கூட நண்பர்களுக்கும் ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து வாழ்த்துப் பெறுவது ஒருவித கொண்டாட்டம்.
பல லட்சம் செலவழித்து வீட்டிலோ ஐந்து நட்சத்திர உணவு விடுதியிலோ உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய விருந்து கொடுத்து கூடவே கவர்ச்சியான பரிசுப் பொருட்களும் கொடுத்து ஆர்ப்பாட்டமாய்க் கொண்டாடுவது இன்னொரு விதமான கொண்டாட்டம்.
எனது பிறந்தநாளை நான் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். உங்கள் பிறந்த நாளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம்.
இப்படித்தான் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அவரவர் விருப்பப்படி அனைவரும் கொண்டாடலாம். ஆனாலும் நான் சொல்வதைக் கொஞ்சம் யோசியுங்கள்.
நமது நாட்டில் திருமணம் போன்ற ஒரு சில விழாக்களைத் தவிர மற்ற விழாக்கள் அனைத்தும் இயற்கையையும் இறைவனையும் மையப்படுத்தியே இருக்கின்றன.
இந்த பொது விழாக்களில் நாம் நமது வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகக் கூடி மகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
பிறந்தநாள் விழா கொண்டாட்டம் போன்ற தனிமனித விழாக்களின் போது நம்மை அறியாமலேயே நாம் ஒப்பீடு செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.
நாம் நமது வீட்டில், கொண்டாடியதை விடச் சிறப்பாக அல்லது ஆடம்பரமாக மற்றவர்கள் கொண்டாடினால் இயல்பாகவே நம் மனதில் பொறாமை உணர்வு எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றது.
மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பிக்கிறோம். அவர்களைவிடச் சிறப்பாக நாம் அடுத்தமுறை எப்படிச் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
ஒவ்வொருவரும் இப்படி யோசிப்பதால் ஆடம்பரத்தின், ஆர்ப்பாட்டத்தின் எல்லை விரிந்து கொண்டே போகின்றது. நம் மகிழ்ச்சிக்காக விழா என்பதிலிருந்து பிறர் நம்மை வியந்து பாராட்டுவதற்காக நடத்தப்படுவதுதான் விழா என மாறிவிடுகிறது.
மனமகிழ்ச்சி என்ற நிலையிலிருந்து மாறி மனவேறுபாடு என்ற நிலைக்கும் மன அழுத்தம் என்ற நிலைக்கும் நாம் தள்ளப்படுகிறோம்.
எனவே நமது பிறந்தநாள் விழாவை நாம் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுவதை விட அமைதியாக அன்புடன் கொண்டாடுவதே சிறந்தது என்பது என் எண்ணம்.
பிறந்த நாளன்று காலையில் இறைவனை வணங்கலாம். அம்மா, அப்பா மற்றும் மூத்தோரிடம் வாழ்த்துக்கள் பெறலாம்.
நண்பர்களுக்கு இனிப்புகள் கொடுக்கலாம். கூடவே மரக்கன்றுகள் கொடுத்துக் கவனமாக அவற்றை வளர்க்க வேண்டும் என்று சொல்லலாம்.
நமது ஊரின் பொது நூலகத்திற்கும், நமது பள்ளி மற்றும் கல்லூரி நூலகத்திற்கும் புத்தகங்கள் பரிசாகக் கொடுக்கலாம்.
நமக்குப் பரிசு கொடுப்பவர்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுக்கச் சொல்லாம். கூடவே அவற்றைக் கவனமாகப் படிக்க வேண்டும்.
நம்மால் முடிந்த வரையில் நமது நகரில் இருக்கும் அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்ற பொது நல அமைப்புகளுக்கு பணமாகவோ பொருளாகவோ நன்கொடை கொடுக்கலாம். பெறுவதைவிடக் கொடுப்பதே மகிழ்ச்சி என்பதை உணர்வோம். நம்மைப் பார்த்து மற்றவர்களும் உணர்வார்கள்.
நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நம்மால் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே நம் பிறப்பின் நோக்கம் என்பதை நமது பிறந்த நாள் கொண்டாட்டம் பறை சாற்றட்டுமே.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!