அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரம் இல்லம்.
சுந்தரம் பள்ளியிலும், வீட்டிலும் மிடுக்கான ஆசிரியர். அவரை கண்டால் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை.
கண்டிப்பான ஆசிரியர்; நேர்மையானவர். இவ்வளவு விளக்கமா இவரை பற்றி கூறுவது ஏன் ?
‘வாத்தியார் புள்ள மக்கு’ என்ற வரிகளை நிஜமாக்குற மாதிரி அவரின் பையன் கௌதம்.
கௌதமுக்கு அப்பா என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவனிடம் எப்போதுமே அவர் கண்டிப்புடன் இருப்பார்.
அவ்வளவு கண்டிப்பு இருந்தும் கௌதமை அவரால் தன் வழிக்கு கொண்டு வர முடியவில்லை.
அவனுக்கு படிப்பு சுத்தமாக வரலை. அப்பாவின் வற்புறுத்தலில் கல்லூரி வரை சென்று, வேறு வழியின்றி அரைகுறையாக படித்து விட்டு தற்போது , வேலை தேடுவதாக கூறி நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறான்.
சுந்தரத்தின் மனைவி மீனாட்சி. வெகுளி. தான் பெற்ற பிள்ளைக்காக கணவரிடம் அடிக்கடி சண்டை போட்டு பிறகு சமாதானம் செய்வாள்.
காலை சுப்ரபாதம்,
பாடலை முனுகியபடி , வாசலில் கோலமிட்டு, வீட்டினுள் நுழைந்தார் மீனாட்சி.
“ஏங்க! எந்திரிங்க! பேப்பர் வந்திருச்சு. காபியும் ரெடி” என்ற மீனாட்சியின் குரலை, கேட்டபடி கண் விழித்தார் சுந்தரம்.
அறையிலிருந்து வெளியே வந்து கை, கால், முகம் கழுவி விட்டு வராந்தாவை நோக்கி நகர்ந்தார் சுந்தரம்.
வராந்தாவில் இருந்த இருக்கையின் மீது இருந்த தினநாளிதழை வாசிக்க ஆரம்பித்தார்.
“என்ன மீனாட்சி! கௌதம் எந்திரிக்கலயா?” என கேட்டார்.
“ஏன்? இவ்ளோ சீக்கிரமா எந்திரிச்சு அவன் என்ன பண்ண போறான்?” என்றபடி சூடான காபியுடன் அவர் அருகே வந்து அமர்ந்தாள் மீனாட்சி.
“இல்லன்னாலும் லேட்டா எந்திரிச்சு கிழிச்சிருவான்” என்று நக்கலா பேசினார் சுந்தரம்.
“அட விடுங்க. நமக்கு ஒரே பிள்ளை. அவன எப்பவுமே குறை சொல்லிட்டே இருந்தா, அவனுக்கு கோவம் தான வரும். உங்கள பார்த்தாலே எரிச்சல் வர்ற மாதிரி பண்றீங்க” என வேதனையுடன் மீனாட்சி சொன்னார்.
சலிப்பாக தன் பேச்சை ஆரம்பித்தார் சுந்தரம், “அடப்போ! மீனாட்சி! எல்லா வீட்லயும் இப்படி அம்மாக்கள் இருக்க போயி தான், ஆம்பள புள்ளிங்க அப்பனை வில்லனா பார்க்கிறாங்க.
என்கிட்ட படித்த பசங்க இப்போ எத்தனையோ பேர் நல்லா இருக்காங்க. ஆனா நான் பெத்த பிள்ள, என் பேச்ச கேட்க மாட்டேங்கறா.
நாங்க அவங்க நல்லதுக்கு தான் சொல்றோம்னு ரொம்ப லேட்டா புரிஞ்சிகிறாங்க. அவங்க புரிஞ்சு வர்ற நேரத்தில பெரும்பாலான அப்பாக்கள் பையன் வாழ்க்கையை நினைச்சு கவலையுடன் மண்ணுக்கு உரமா போயிடுறாங்க” என்றார்.
“வாய மூடுங்க! தயவு செய்து காலையில கோபத்தை கிளப்பாதீங்க. நம்ம பையன் வேலைக்கு போய்ட்டா, உங்க பிரச்சினை தீர்ந்துரும் அவ்ளோதான. அதுக்கு தான முயற்சி பண்றான்” என்று மீனாட்சி பதில் தர, இவர்களின் பேச்சை கேட்ட படி அரை தூக்கத்தில் எழுந்து வந்தான் கௌதம்.
“என்னம்மா? இன்னிக்கு என் பிறந்த நாள். இன்னிக்கும் இப்படி பேசிகிட்டு இருந்தா எப்படி?” என மீனாட்சியை நோக்கி கோபமாக கேட்டான் கௌதம்.
“கௌதம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” என சுந்தரம் கூற, அதை அலட்சியபடுத்தியவாறு, மீனாட்சியிடம் பிறந்தநாள் பரிசா முத்தத்தை பெற்று கொண்டான் கௌதம்.
இதனை பார்த்து சிரித்தபடி சுந்தரம், “தம்பி கௌதம்! இங்க வா அப்பா பக்கத்தில் உட்காரு!” என்றார்.
அதனையும் கண்டு கொள்ளாதவனாய் தாய் மீனாட்சியின் அருகில் அமர்ந்தான் கௌதம்.
“தம்பி கௌதம்! காலையில நாம ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்ட்டு வந்திருவோம். சரியா! இனிமே நல்லதே நடக்கட்டும்னு கடவுளை வேண்டி கொள்வோம்” என சுந்தரம் தன் மகனை கேட்டார்.
“நான் தனியா கோவிலுக்கு போறேன்” என சட்டென யோசிக்காமல் பதில் அளித்தான் கௌதம்.
“கௌதம்! அப்பாவ தப்பா நினைக்காத. நான் சொல்றது உன் நல்லதுக்கு தான். நீ வேல பார்த்து தான் இந்த குடும்பம் சாப்பிடனும்னு இல்ல.
இருந்தாலும் நாலு பேர் மதிக்கிற மாதிரி இருக்கனும்னா நாம வேலைக்கு போகனும். கையில காசு இருக்கனும்.
வேலைக்கு போயி சம்பாதிக்கும்போது தான் காசோட அருமை தெரியும். அத சொன்னா நீ கோப பட்ற.
அந்த உருப்புடாத பசங்ககூட, சேர்ந்து பைக் ரேஸ் (பந்தயம்) விட்டு விளையாட்றீங்க. நம்ம காலனியில இருக்க எல்லாரும் வையுறாங்க.
வண்டியில வேகமாக போறாங்க பொறுக்கி பயலுகன்னு. அத கேட்க நல்லாவா இருக்கு?” என சுந்தரம் கேள்வி கேட்டார்.
“இந்த வயசுல ரேஸ் விடாம, உங்க வயசுலயா ரேஸ் விடுவாங்க. நாங்க ரேஸ் விடும்போது ஓரமா போக வேண்டியது தான. ரேஸ் விட்ரதுக்குன்னு தனியா இடம் வாங்கி கொடுக்க சொல்லுங்க, இந்த காலனிகாரங்கள.
காலனிகார பொம்பளங்களுக்கு ஒருநாள் கச்சேரி இருக்கு. ரேஸ்னா சும்மாவா, காசு காசுப்பா. பத்தாயிரம் ரூபா” என கொந்தளித்தான் கௌதம்.
“ரேஸ் (பந்தயம்) விடுங்க தப்பில்ல. அதுக்கு தகுந்த பயிற்சி வேணும். அதுக்கான இடமும் இருக்கு, அங்க முயற்சி பண்ணுங்க அடுத்த லெவலுக்கு போங்க. பெத்தவங்க உதவி பண்ணுவாங்க.
அத விட்டுட்டு எந்த பாதுகாப்பும் இல்லாம பொது இடத்தில, மக்களுக்கு இடஞ்சல் பண்ணா, போலிசுக்கு தகவல கொடுத்திருவாங்க பார்த்துக்கங்க” என எச்சரிக்கை விடுத்தார் சுந்தரம்.
“போலிஸா! பயந்திருவோம்! அட போங்க பா!” நக்கலாக கௌதம் கூற,
“சரிடா அந்த பந்தயத்திலாவது ஜெயிச்சிருக்கியா, அதுவும் இல்ல” என சுந்தரம் தன் பாணியில் கேட்க, கோபமாய் எழுந்து சென்றான் கௌதம்.
காலை 8 மணி.
“அம்மா நான் கோயிலுக்கு போயிட்டு வந்திரேன்” என மீனாட்சியிடம் கூறியபடி கிளம்ப தயாரானான் கௌதம்.
“கௌதம், பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு தான் உங்க அப்பா போயிருக்கார். சீக்கிரம் போ. அப்பா கோவில்ல உன் பேர்ல அபிஷேகம் பண்ணி பிரசாதம் கொடுக்க ஏற்பாடு பண்ணிருக்காரு. உன்ன வர சொல்லிட்டு தான் போயிருக்கார்” என மீனாட்சி கூறினார்.
“நான் அந்த கோவிலுக்கு போகல. இங்கிட்டு போயிக்கிறேன். ஆள விடு. அங்க போனா நாலு பேர் முன்னாடி பாடம் நடத்துவார். வேணாம். அவரு அந்த கோவில்ல சாமி கும்பிடட்டும். நான் வேற கோயிலுக்கு நிம்மதியா போய்ட்டு வர்றேன்” என கூறி விட்டு வண்டியை வேகமாக இயக்கினான்.
கணவன், மகன் இருவரையும் நினைத்து தன் தலையில் அடித்தபடி வீட்டினுள் நுழைந்தாள் மீனாட்சி.
சாலையோரம் நின்று கொண்டிருந்த தன் ரேஸ் நண்பர்களிடம் வாகனத்தை நிறுத்தினான் கௌதம்.
“வா மாப்ள கௌதம்! பிறந்த நாள் ரேஸ் விடுவோமா? பத்தாயிரம் பிளஸ் டிராபி” என்று ஒருநண்பன் கூற,
அதற்கு சலிப்பாக கௌதம் “வேணாம்டா மாப்ள. இப்ப தான் எங்க அப்புக்கும் எனக்கும் இந்த ரேஸ் விஷயத்தில் பேச்சு வந்திச்சு. காலணியில இருக்கிற எல்லா பெருசுகளும் நம்மள வையுதுங்களாம். அதா நான் வரலடா” என்றான்.
“கௌதம்! எல்லார் வூட்லயும் அப்பாக்கள் இப்படி தான் பேசுவாங்க. அதுக்கு நாம யோசனை பண்ண ஆரம்பிச்சா அவ்ளோதான். அவங்க கடமைய சொல்றாங்க. நாம நம்ம வேலய பார்த்துட்டு போயிட்டே இருப்போம். காலணியில ரேஸ் விடும் போது பெரிசுகள ஒரு தட்டு தட்டிவிட்டு கீழ தள்ளிட்டோம்னாதான் பயம் இருக்கும். அப்புறம் நம்பள பத்தி பேச யோசிப்பாங்க” என்ற நண்பனின் பேச்சு கௌதம் மனதை மாற்றியது.
‘இன்னிக்கு பந்தயத்தில எப்படியாவது ஜெயிச்சு அப்பா மூஞ்சில கரிய பூசணும். காலணிகார பெரிசுகளுக்கும் பாடத்த புகட்டனும்’ என தன் மனதில் நினைத்தபடி கௌதம் பந்தயத்துக்கு ஒப்பு கொண்டான்.
பந்தயம் தயார். ஆறு பேர் கலந்து கொள்கின்றனர்.
இரு பிரிவாக எதிர் எதிர் திசையில் மூன்று பேராக சென்று தற்போது இருக்கும் இடத்தை (மைய புள்ளி) முதலில் அடைவது தான் போட்டி. போட்டிக்கான தூரம் 6 கி.மீ
இதுவரை 3 முறை போட்டியிட்டு, ஒருமுறைகூட கௌதம் வென்றதில்லை.
போட்டி துவங்கியது.
இரு பிரிவுகளாக பிரிந்து வாகனம் நகர்ந்தது. வாகனங்கள் மெது மெதுவாக வேகம் எடுக்க ஆரம்பித்தன. மக்களின் தினசரி நகர்வுகளுக்குள் இந்த வாகனங்களின் சப்தம் காதை கிழித்தது.
மக்களிடம் திட்டுகளை வாங்கியபடி, வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு, சாலையில் செல்பவர்களை பற்றி எந்த கவலையின்றி, வாகனங்களை வேகமாக இயக்கி கொண்டிருந்தனர்.
“நாசமா போறவங்களா!” என பெண் ஒருத்தி வசை பாட, அதை காதில் கேட்ட அந்த பந்தயக்காரன், அவளை திரும்பி பார்த்து முறைத்தபடி வாகனத்தை செலுத்த, சற்று தடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதினான்.
அந்த மோதலில் பந்தயக்காரன் கீழே விழாமல் தப்பித்து கொண்டு, எதிரில் வந்தவர் தூக்கி வீசப்பட்டார். அதனை கண்டு பயமின்றி மீண்டும் வாகனத்தை மின்னல் வேகத்தில் இயக்கினான்.
பந்தயத்தில் கௌதம் சிறப்பாக செயல்பட்டு முதலாவதாக வந்தான். அவனை தொடர்ந்து அடுத்து அடுத்த பந்தயக்காரர்கள் மையப் புள்ளிக்கு வந்தனர். முதலாவதாக கெளதம் வந்திருந்தான்.
“என்னடா மாப்ள! எப்பவுமே நீ தான் முத ஆளா வருவ. இன்னிக்கு கடைசியா வந்திருக்க” என கௌதம் கேட்டான்.
“ஆமாம்டா மாப்ள! நான் முத ஆளா வந்திருப்பேன். ஒரு பெரிசு இடையில வந்து விழிந்திருச்சு. அதான் தோத்துட்டேன்” என கடைசியா வந்த பந்தயகாரன் கூறினான்.
“பெரிசு இருக்கா? இல்ல ஊஊஊ சங்கா?” என சிரித்தபடி கௌதம் கேட்டான்.
“தெரியலடா மாப்ள. நான் வந்துட்டேன். நான் மோதினதுல பெருசு அந்த ரோட்டு பிளாட்பாரத்துல தலையில நல்ல அடி விழுந்திருச்சு. பிழைக்கிறது கஷ்டம் தான்னு நினைக்கிறேன்” என்றான்.
அவனின் பதிலால் காலணிகாரர்களை பழி வாங்கிய சந்தோஷமும் தன் வெற்றியின் மூலம் தந்தையின் முகத்தில் கரி பூசுனும்ன்னு நினைச்சது நடந்தேறியதாக கௌதம் சந்தோசப்பட்டான்.
அவனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்த மகிழ்ச்சி. நண்பர்கள் கௌதமை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர்.
கௌதமின் மொபைல் சினுங்கியது.
வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த வண்ணம் மொபைலை எடுத்து பார்த்தான் கௌதம். அம்மா அழைப்பு.
“அடடா! கோவிலுக்கு போக சொன்னாங்க; மறந்துட்டேன். போச்சு அப்பா வீட்டுக்கு வந்திருப்பாரு. அந்த ஆளு வேற கத்துவாரே!” என கூறியபடி அழைப்பை துண்டித்தான்.
“மாப்ள கௌதம்! நீ முத தடவ ஜெயிச்சிருக்க! ரொம்ப சந்தோஷம்டா! அதுவும் உன் பிறந்த நாள் அன்னிக்கு. உன் பிறந்த நாள் பரிசு கிடைச்சிருச்சு” என்று நண்பர்கள் அவனை புகழ்பாடி கொண்டிருந்தனர்.
மீண்டும் மொபைலில் அம்மாவின் அழைப்பு. கடுப்பானான் கௌதம்.
“அம்மா நீயும் அவர மாதிரி உயிர வாங்க ஆரம்பிச்சிட்ட. வீட்டுக்கு வருவேன்ல. அதுக்குள்ள இத்தனை போனா?” என கடுப்பாகி அம்மாவிடம் கத்தினான்.
“தம்பி கௌதமு…” என்று அம்மாவின் அழுகுரல்.
கௌதம் கையில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வெற்றி பரிசான ரூபாய் பத்தாயிரம் பிளஸ் டிராபியை கொடுத்தனர்.
அதனை பெற்று கொண்டு மகிழ்வதற்குள் அம்மாவின் அழுகுரல்.
“தம்பி கௌதமு… கோவிலுக்கு போயிட்டு வர்ற வழியில உங்க அப்பாவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிருச்சாம். ஏதோ ஒரு டூவிலர் காரன் மோதிட்டு வேகமா போய்ட்டானாம்.
உங்க அப்பாக்கு நல்ல பலத்த அடியாம். ஜி.எச்.ல சேர்த்து இருக்காங்களாம். ரொம்ப சீரியசா இருக்காருன்னு போன் வந்துச்சு” என்று மீனாட்சி கதறியபடி கூறினார்.
தடுமாறினான் கௌதம். கண்களில் நீர் பொங்கியது. பேச்சில்லாமல் தடுமாறி ஓட துவங்கினான் கையில் பரிசுடன்.
‘தந்தையின் நிலைமைக்கு தன் பந்தயமே முக்கியமான காரணமாகி விட்டதே! இப்படி ஒரு நிகழ்வு யாருக்காவது நிகழந்து விடும் என்று அவர் கூறும் போது கண்டு கொள்ளவில்லை’ என்ற வேதனையுடன் தன் தந்தையை காண வேகமாக ஓடினான் கௌதம் பிறந்த நாள் வெற்றி பரிசுடன்.
பந்தயங்களை முறையாக கற்று கொண்டு, தகுந்த இடங்களில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பங்கேற்பது நல்லது.
பொது வெளியில் வாகனம் பயணிக்க மட்டுமே; பந்தயதிற்கு அல்ல.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104