பிறந்த வீடா? புகுந்த வீடா?

பிறந்த வீடா? புகுந்த வீடா?

பிறந்த வீட்டின் சீராட்டும் தாலாட்டும் ஒருபெண்ணுக்குத் திருமணமாகும் வரைதான்.

புகுந்த வீடு சென்றதுமே பிறந்த வீட்டு மவுசு கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து விடுகிறது.

கடமை முடிந்தது என்கிற ஆத்ம திருப்தியுடன் பெண்ணைப் பெற்றவர்கள் ஒதுங்கி விடுகின்றனர். ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவே பிரியப்படுகின்றனர்.

பெண்ணுடன் ரொம்பவும் ஒட்டி உறவாடினால் எங்கே தங்கள் மகிழ்ச்சியான வாழ்வுக்குப் பங்கம் வந்து விடுமோ என்கிற அச்சம் தலைதூக்கப் பெற்றோர்கள் எட்டியே நிற்கின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்குப் பிறந்த வீட்டு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான். நிரந்தர மகிழ்ச்சியாய் நிச்சயம் இருக்க முடியாது.

அதே சமயம், புகுந்த வீட்டை எடுத்துக் கொண்டால், ஒரு பெண்ணுக்குத் திருமணமான புதிதில், புகுந்த வீட்டின் புதிய உறவு முறைகள், பழக்க வழக்கங்கள் வித்தியாசமாகவும், பரிச்சயப்படாத ஒரு புதிய அனுபவமாகவும் இருக்கலாம்.

நாளடைவில் தன்னுடைய வாழ்வு முழுவதும் இனி இவர்களுடன்தான் என்பதை முற்றிலும் உணர்ந்து அதற்கு தகுந்த மாதிரி தன்னைத் தயார் செய்து கொண்டு விடுகிறாள்.

இன்ப துன்பங்களில் புகுந்த வீட்டினருடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுகிறாள். பிறந்த வீட்டிலிருந்து, தான் அந்நியப்பட்டு விட்டதைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பல்வேறு நிகழ்ச்சிகள், அனுபவங்கள் மூலமாகத் தெள்ள தெளிவாக உணர்ந்து கொண்டு விடுகிறாள்.

உரிமையுடன் போராட, உரிமையுடன் வாதாட, உரிமையுடன் கோபம் கொள்ள, உரிமையுடன் கொஞ்ச கெஞ்ச, இப்படி எண்ணற்ற செயல்களை முழு உரிமையுடன் புகுந்த வீட்டில் மட்டுமே அவளால் செய்ய முடிகிறது.

கஷ்டமோ நஷ்டமோ, இன்பமோ துன்பமோ எதையும் சமாளித்துப் போராடி நிரந்தரமாக இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தேடிக் கொள்கிறாள்.

மாமியார், நாத்தனார் கொடுமைகள் மற்றும் ஏனையக் கொடுமைகள், துன்பங்களால் சிலர் வாழ்க்கை விதிவிலக்காக அமைந்திருக்கலாம். அதற்கு பல அடிப்படைக் காரணங்கள் இருக்கலாம்.

சிறந்த பண்பாடு, நாகரீகம், நல்ல குணங்கள் போன்றவைகளை சிகரமாகக் கொண்டுள்ள குடும்பத்தை மனதில் கொண்டு பொதுவாக ஆராய்வோமானால் பெண்களின் மகிழ்ச்சி புகுந்த வீட்டில்தான் அதிகம்.

இராமன் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தி. அதுபோல் தான் பெண்களின் மகிழ்ச்சி விஷயமும்.

கண் நிறைந்த கணவனைத் தந்திருக்கும் புகுந்த வீடே அவளுக்கு மகிழ்ச்சியான இடம்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998