சென்னை சென்று மகள் காவேரி வீட்டில் ஒரு வாரம் தங்கி விட்டு திருச்சி திரும்பி நான்கு நாட்கள் ஆகியும், அம்மா மகேஸ்வரியின் மனம் ஒருவித தத்தளிப்பிலேயே மூழ்கியிருந்தது.
இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டுப் போகும்படி காவேரி எவ்வளவோ வற்புறுத்தியும், கௌரவம் குறுக்கே நின்று தடுத்ததால் கிளம்பி வந்துவிட்டாள்.
என்னதான் பெற்ற மகள் வீடு என்றாலும், மாப்பிள்ளை வீட்டில் எவ்வளவு நாட்கள் தங்குவது?
மாப்பிள்ளை மறுப்பு ஏதும் கூறப் போவதில்லை. இருப்பினும் ஒருவித தர்மசங்கடம் உள்ளத்தை உறுத்தியதால், மகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை.
மாப்பிள்ளை ஒன்றும் பெரிய அரசாங்க அதிகாரியோ, நிலச் சுவான்தாரோ இல்லை.
காவேரிக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா? என அன்றாடம் குடும்பத்தில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் நடுவராக வந்து, ‘ஆகும்’ என்ற தீர்ப்பு மூலம் அனைவரது வயிற்றிலும் பாலை வார்த்து, காவேரி கழுத்தில் மூன்று முடிச்சுக்களைப் போட்டு அழைத்துச் சென்றவன் மாப்பிள்ளை சுந்தரம்.
சூளைமேடு பகுதியில் ஒண்டுக் குடித்தனம். காவேரி வீட்டிலேயே பலகாரங்கள் செய்து கொடுக்க, அவைகளை எடுத்துப்போய் ஒரு இடம் விடாமல் சுற்றி, விற்றுக் காசாக்கி இரவில் வீடு திரும்புவான் சுந்தரம். காவேரியின் கைபக்குவத் தயாரிப்பு அவர்களது வாழ்க்கைக்கு கைகொடுத்துக் கொண்டிருந்தது.
மகளுக்கு வாழ்வு கிடைத்தது பற்றி மகேஸ்வரி ஒருபுறம் மன அமைதி அடைந்தாலும், மகள் வீடு சென்றுவிட்டு வந்தால் மனதை பறிகொடுத்து விடுவாள்.
உதயம் முதல் அஸ்தமனம் வரை பிழைப்பிற்காக மகளும் மாப்பிள்ளையும் அல்லாடுவதைப் பார்க்கையில் அடிமனதில் ஏற்படும் வலியை, அவளால் உணராமல் இருக்க முடியவில்லை.
திருச்சியில் அவள் வீட்டு நிலைமையோ நேர் எதிர். மகன் சரவணன், மருமகள் தேவகி, இருபேரக் குழந்தைகள் என வசித்து வருபவளுக்கு, இங்குள்ள சூழ்நிலையுடன் மகளது சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனவலி அதிகரித்துவிடும்.
தந்தையின் மறைவிற்குப் பிறகு, தாயை தன்னுடனேயே வந்து இருந்துவிடும்படி பரந்த மனப்பான்மையுடன் சரவணன் கூறி, காப்பாற்றி வந்தாலும், தானும் ஒரு சராசரியான ஆள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் காலப்போக்கில் மாறிவிட்டிருந்தான்.
தான் பணிபுரியும் தனியார் நிறுவனத்திலேயே பணிபுரிந்துவந்த தேவகியை விரும்பி, தாயின் சம்மதத்துடன் அவளை அடைந்து, இருவரது சம்பாத்தியத்திலும் குடும்பம் கௌரவமாக, சீராக எவ்விதக் கஷ்டமுமின்றி ஓடிக்கொண்டிருந்தாலும், பிள்ளைப் பாசத்தையும், தாய்ப் பாசத்தையும் அதிகம் நெருங்கவிடாமல் தேவகி நடுவில் நின்று தன்னால் முடிந்த கைங்கர்யத்தை செய்து கொண்டிருந்தாள்.
சரவணன் நாளடைவில் தேவகியிடம் சரணடைந்திருந்தான்.
‘சரவணின் தாய்’ என்கிற ஸ்தானத்தில் மகேஸ்வரி வெளியே உலாவிக் கொண்டு, வீட்டிற்குள் சமையல்காரியாய், வேலைக்காரியாய், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவாய் காலத்தைத் தள்ளி வருகிறாள்.
இருவரது சம்பாத்தியம் என்பதால் வீடு செல்வச் செழிப்புடன் காணப்பட்டது. உடலை வருத்திக் கொள்ளாமல் வேலைகள் நடைபெற உதவும் அனைத்துச் சாதனங்களும் வீட்டில் இருந்தன.
இருபதே நிமிடங்களில் சமையலை ரெடி பண்ண குக்கர், காஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், காஃபி மேக்கர், சுடு தண்ணீருக்குக் கெய்ஸர், துணிகளைத் துவைக்க வாஷிங்மெஷின், வீடு சுத்தம் செய்ய வாக்வம் கிளீனர், பொழுது போக்கிற்கு கலர் டி.வி. என்றெல்லாம் எவ்வளவோ வசதிகள்.
மின் சாதனங்களின் உதவியுடன் யந்திரத்தனமாக ஓட்டி வரும் வாழ்க்கையில் மன அமைதியையும், ஆத்மார்த்தமான சந்தோஷத்தையும் பெற எந்தவித சாதனமும் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதுதான் பெருங்குறையாய் இருந்தது மகேஸ்வரிக்கு.
சென்னையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் காவேரிக்கு அவ்வப்போது ஏதாவது உதவிகள் செய்யச் சொல்லி மகேஸ்வரி, சரவணனிடம் தேவகி இல்லாத சமயம் கெஞ்சினாலும், சரவணனிடம் எதுவும் எடுபடவில்லை.
முழுக்க முழுக்க தேவகியிடம், அவள் வீட்டு நபர்களிடம் அடிமையாகி, அவர்களது தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதிலேயே முனைப்பாய் இருந்து வந்தான்.
நோய்க்கு மருந்து சாப்பிடப்போய் எதிர்மறை விளைவுகள் சமயத்தில் தோன்றிவிடுவதைப் போல, மனமாற்றத்திற்காக மகள் வீடு சென்றால், அங்கு அவள் படும் கஷ்டங்களைப் பார்த்து, மகன் மருமகளின் ராஜபோக வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க நேர்ந்தது.
ஆர்ப்பரிக்கும் கடல் கொந்தளிப்பாக மனம் ஆகிவிடுகிறது மகேஸ்வரிக்கு.
தனது ஆற்றாமையை மகளுடன் பகிர்ந்து கொள்ளும்போது மகேஸ்வரியைத் தன்னுடனேயே இருந்துவிடும்படி காவேரி கெஞ்சுவாள். தாயை தேற்றுவாள்.
மனமாற்றத்திற்காக தியேட்டர் சென்று இரண்டரை மணி நேரத்தைக் கழித்துவிட்டு மீண்டும் பழைய மனநிலையிலேயே வீடு திரும்புபவர்கள் போல, ஒரு சில நாட்களில் திருச்சி திரும்பி விடுவாள் மகேஸ்வரி.
நாட்கள் வாரங்களாய், மாதங்களாய், வருடங்களாய் உருப்பெற்று ஓடிக்கொண்டிருந்த நிலையில், தேவகியின் தாய் மாமன் சொத்து அவருக்கு வாரிசு எதுவும் இல்லாததால், அவரது மறைவிற்குப் பின் தேவகியை வந்தடைந்தது.
தேவகியும் பெற்றோருக்கு ஒரே மகள். கூடப் பிறந்தவர்கள் எவருமில்லை. தேவகியின் தாய்க்கும் ஒரே சகோதரர். எனவே சிக்கல் இன்றி அவரது சொத்து தேவகிக்கு வந்து சேர்ந்தது.
சரவணனின் வாழ்க்கை கார், பங்களா, வேலையாட்கள் என்று புதிய கோணத்தில் துவங்க ஆரம்பித்தது. மகேஸ்வரி சென்னை செல்ல விரும்பினாள். குதி போட்டுக் கொண்டு அனுப்பி வைத்தான்.
சென்னையிலேயே இருக்க விரும்பினால்கூட தனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை என சொல்ல ஆரம்பித்து, தாய் தன்னுடன் இருப்பதைத் தவிர்க்க ஆரம்பித்தான்.
மகேஸ்வரி இப்போதொல்லாம் சென்னை சென்றால் முன்போல் சென்ற வேகத்திலேயே திரும்பி விடுவதில்லை. மகள் காவேரியின் ஆசையை, விருப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நிறைவேற்ற ஆரம்பித்தாள்.
சரவணனுக்கு தாயின் ‘இல்லாமை’ ரொம்பவும் வசதியாக இருக்கவே, வாழ்க்கை வசதிகள் அவனது பழக்க வழக்கங்களை மாற்ற ஆரம்பித்தன. சகவாசங்கள் மாறி கணவன் மனைவிக்குள் பூகம்பம் எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்தது.
எரிமலையை ‘விவாகரத்து’ நீர் ஊற்றி அணைத்தார்கள். தேவகி தன் இருகுழந்தைகளுடன் பிரிந்து போக, சரவணன் வேலையையும் இழந்து நடைபிணமானான்.
விஷயம் அறிந்த சுந்தரம் திருச்சி வந்து சரவணனைப் பார்த்துப் பேசித் தேற்றினான். சென்னையில் தங்களுடன் வந்து கொஞ்ச நாட்கள் தங்கி வேறு வேலை தேடிக் கொள்ள ஆலோசனைகள் கூறி சமாதானப்படுத்தினான்.
சகோதரியின் கஷ்டத்தில் கொஞ்சமாகப் பங்கு கொள்ளாமல், இப்போது எப்படி அங்கு சென்று அவள் வீட்டில் இருப்பது? நினைக்கவே வெட்கமாக இருந்தது சரவணனுக்கு. கூடவே குற்ற உணர்வும் அவனை உலுக்கி எடுத்தது.
தாய் தன்னை விட்டுக் காவேரியுடன் சென்றதும், மகேஸ்வரியின் உழைப்பு மேலும் பன்மடங்கு மூலதனமாய் அமைய அவர்களது வாழ்க்கை நிலை படிப்படியாக உயர ஆரம்பித்து,
இன்று சுந்தரம் சென்னையில் ஒரு மிகப்பெரிய ஓட்டலுக்கு முதலாளி என்றும், டாக்ஸிகள் காவேரி பெயரில் ஓடுவதாகவும், தங்களுடன் சரவணன் வந்து இருப்பதால் எவ்வித ஆட்சேபனையுமில்லை என்பதையும் சுந்தரம் மூலம் மிகத் தெளிவாக அறிந்தான் சரவணன்.
‘முழு பௌர்ணமி’ நிலவாக மிகுந்த பிரகாசத்துடன் திகழ்ந்த தன் வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து தேய்பிறையாகிக் கடைசியில் அமாவாசை இருளாக மாறிவிட்டதையும்,
‘அமாவாசை இருளாக’ திகழ்ந்த காவேரியின் வாழ்க்கை, சிறிது சிறிதாக வளர்பிறையாகத் தோன்ற ஆரம்பித்து, இப்போது முழு பௌர்ணமி நிலவாகப் பிரகாசம் அடைந்திருப்பதையும் கண்கூடாகக் கண்டான் சரவணன்.
மகன் வாழ்க்கையுடன் மகளது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து, ஒருவித வேதனையில் தவித்துக் கொண்டிருந்த மகேஸ்வரியின் மனம், தற்போது மகள் விஷயத்தில் அமைதியடைந்திருந்தாலும், தற்போதைய மகனின் நிலை கண்டு மீண்டும் அமைதியின்மையைத் தழுவிக் கொண்டது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!