பிளம்ஸ்

பிளம்ஸ் பழம் பார்பதற்கு அழகாகவும், கவர்ந்திழுக்கும் வண்ணத்துடன் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் இருக்கும். இவை பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் நன்கு விளைகின்றன. இவை கொத்து கொத்தாக காய்க்கும்.
உலகத்தில் சுமார் 2000 வகை பிளம்ஸ் பழங்கள் உள்ளன. ஆயினும் இந்தியாவில் இவற்றின் பயன்பாடு குறைவே. இந்தியாவைப் பொறுத்தவரையில் மே முதல் செப்டம்பர் வரை இப்பழத்தின் சீசனாக உள்ளது.

இப்பழம் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் சீனாவில் வியாபார நோக்கில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் பஞ்சாப், ஹிமாசல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் இப்பழம் விளைவிக்கப்படுகிறது.

இப்பழம் வெளிப்புறத்தில் கவர்ச்சியான சிவப்பு, கருஞ்சிவப்பு, பச்சை, கருநீலம் வண்ணங்களில் தோலினையும், உட்பகுதியில் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும், சதைப்பகுதியனுள் ஒரு கடினமான விதையையும் கொண்டுள்ளது.

இப்பழத்தில் விதையைச் சுற்றிலும் கடினமான கல் போன்ற குழிப்பகுதி உள்ளதால் இப்பழம் ட்ருப் பழவகையைச் சேர்ந்தது.

இப்பழமானது மரவகை அல்லது குற்றுச்செடி வகையைச் சார்ந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இத்தாவரம் 10-15 உயரம் வளரக்கூடியது.

இப்பழம் சிறிய தக்காளி போன்ற தோற்றத்துடன் காணப்படும். இப்பழமானது 5-6 செமீ விட்டத்திலும், 50-70 கிராம் எடையிலும் இருக்கும். தனிப்பட்ட நல்ல மணத்துடன் கூடிய இப்பழத்தின் விதைகள் உண்ணத் தகுந்தவை அல்ல.

 

பிளம்ஸில் உள்ள சத்துக்கள்

இப்பழத்தில் விட்டமின்கள் ஏ,கே,இ,பி1(தயாமின்), பி2(ரிபோஃளேவின்), பி3(நியாஸின்) போன்றவைகளும், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், ஃப்ளுரைடு, துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும், ஃப்ளவனாய்டுகள், பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிஜென்ட்கள், பீட்டா கரோட்டின்கள், நார்சத்துகள், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

 

பிளம்ஸின் மருத்துவ பண்புகள்

கொலஸ்ராலின் அளவினைக் குறைக்க மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க

கொலஸ்ட்ரால் என்பது கல்லீரல் மற்றும் குடல்களிலிந்து உற்பத்தி செய்யப்படும் மெழுகு போன்ற உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு ஆகும்.

இந்த கொலஸ்ட்ரால், செல் சவ்வு உருவாக்கத்திற்கும், ஹார்மோன் உற்பத்திக்கும் அவசியமானது. மேலும் அது பாலூட்டிகளில் இரத்தத்தில் ஊடுருவிச் செல்லும் தன்மை உடையது.

இந்த கொலஸ்ராலின் அளவு கூடும்போது அது இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் நரம்புகளில் சேகரமாகி இரத்த ஓட்டத்தின் அளவு குறைக்கிறது.

இதனால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. நார்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது அவை கொலஸ்ரால் உருவாகும் அளவினைக் குறைக்கின்றன.

பிளம்ஸ் அதிக அளவு நார்ச்சத்து கொண்டது. இதனால் இதனை உண்டு கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கலாம். மேலும் இப்பழத்தில் உள்ள பீனாலிக்குகள் கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து நம்மை இதய நோயிலிருந்து பாதுகாக்கின்றன.

 

புற்றுநோய்

இப்பழத்தின் சாற்றில் புற்றுநோய்க்கான‌ சிகிச்சை  நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் உள்ள எபிக்கேட்சின் என்ற மூலக்கூறு வீரியமிக்க புற்றுச்செல்களின் வளர்ச்சி மற்றும் அதன் பெருக்கத்தைத் தடுக்கிறது. கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கிறது.

இப்பழத்தில் உள்ள குளோரோஜெனிக் மற்றும் நியோகுளோரோஜெனிக் போன்ற பீனால்கள், ஆன்டிஆக்ஸிஜென்ட்கள், பிளவானாய்டுகள் போன்றவை மார்பகப்புற்று நோய்க்கான புற்றுச் செல்களை மட்டும் அழிப்பதோடு நல்ல செல்களை அழிக்காமல் பாதுகாக்கின்றன.

 

செரிமான மண்டலப் பாதுகாப்பிற்கு

இப்பழம் அதிக நார்ச்சத்துக்களுடன் சார்பிட்டால் மற்றும் இஸாடின் என்ற மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவை செரிமான மண்டலத்தை நன்கு செயல்படச் செய்கின்றன.

சார்பிட்டால் மற்றும் இஸாடின் குடலில் செரிமான நீரினை நன்கு சுரக்கச் செய்வதோடு மலமிளக்கியாகச் செயல்பட்டு குடலில் இருந்து நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை நீக்குகிறது. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கேன்சர், குடல் கேன்சர் போன்றவை வராமல் இப்பழம் தடுக்கிறது.

 

கண்நோயிலிருந்து பாதுகாப்பு

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன்கள் ஆரோக்கியமான கண்பார்வையை அளிப்பதோடு வயதோதிகத்தால் ஏற்படும் ரெக்டினாவின் மையப்பகுதி தசை அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது.

புறஊதா கதிர்களால் கண்ணின் ரெக்டினா பகுதி பாதிக்கப்படுவதை இப்பழத்தில் உள்ள கரோடீனாய்டுகள் தடுக்கின்றன. இதனால் கண்ணின் பார்வை திறன் பாதுகாக்கப்படுகிறது.

 

நோய்எதிர்ப்பு சக்தியைப் பெற

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சியானது உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. இதனால் நம் உடல் பல்வேறு தொற்றுக்கள் மற்றும் வீக்கங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

மேலும் இந்த விட்டமின் சி-யானது உடல் உட்கிரகிக்கும் இரும்புச்சத்தின் அளவினை அதிகரிக்கிறது.

 

மூளையின் நலத்திற்கு

இப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள் வயதோதிகத்தால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பைட்டோ நியூட்ரியன்கள் நரம்புமண்டலத்தில் ஏற்படும் வீக்கங்களைச் சரிசெய்வதோடு நினைவுத்திறனை அதிகப்படுத்துகிறது.

பிளம்ஸை அடிக்கடி உண்பதினால் பார்கின்சன்ஸ், அல்சீமர்ஸ் போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் வராமல் நம்மைப் பாதுகாக்கின்றன.

 

மன அழுத்தம் மற்றும் சோர்வினை நீக்க

இப்பழத்தினை உண்ணும்போது அவை மன அழுத்தத்தையும் உடல் சோர்வினையும் நீக்கி புத்துணர்வு அடையச் செய்கிறது.

 

எலும்புகளின் நன்மைக்கு

இப்பழத்தில் உள்ள ஃப்ளவனாய்டுகள் எலும்புத் திசுக்கள் சிதைவுறுவதை தடுக்கிறது. எலும்புத்திசுக்கள் சிதைவுறுவதால் ஆஸ்ட்ரோபோரிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது.

இந்நோய் பெரும்பாலும் வயதான பெண்களையே பெரிதும் பாதிக்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு ஆஸ்ட்ரோபோரிஸ் நோயினைக் குணப்படுத்தலாம்.

இப்பழத்தில் உள்ள பாலிபீனால்கள் மற்றும் பொட்டாசியம் எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. வயதோதிகத்தால் பாதிக்கப்பட்ட எலும்புகளின் அடர்த்தியை இப்பழம் அதிகரிப்பதோடு அதனைப் பலம் பெறச் செய்கிறது.

 

கர்ப்பிணிகளின் நலத்திற்கு

இப்பழத்தில் உள்ள விட்டமின்கள் ஏ,சி,கே, குழந்தையின் செல் உருவாக்கத்திற்கும், கண் பார்வைக்கும், எலும்புகளின் பலத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றன. நார்ச்சத்துகள் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.

 

பிளம்ஸினை வாங்கும் முறை

இப்பழத்தினை கடையில் வாங்கும்போது பழமானது ஆழந்த நிறத்தோடு மேற்புறத்தில் பனி படர்ந்தது போன்ற வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். இப்பழம் பழுக்கும்போது மேற்புறம் மெதுவாகவும், தனிப்பட்ட மணத்துடனும் இருக்கும்.

இப்பழத்தின் மேற்பகுதி கடினமானதாகவோ, மிகவும் மெதுவாகவோ வெட்டுக்கள் மற்றும் காயங்கள் இருந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்த்து விடவேண்டும்.

பாதிப்பழுத்த பழங்களை வாங்க நேர்ந்தால் அவற்றை அறையின் வெப்பநிலையில் வைத்தால் அவை பழுத்து விடும். பழுத்த பழங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம்.

 

பிளம்ஸைப் பற்றிய எச்சரிக்கை

இப்பழத்தில் ஆக்ஸாலிக் அமிலம் காணப்படுவதால் இதனை அதிகம் உட்கொள்ளும்போது சிறுநீரகத்தில் கற்களை உருவாக்க வாய்ப்பு உண்டு. இதனால் சிறுநீரக கற்களினால் பாதிப்பு உள்ளோர் இப்பழத்தை அளவோடு உண்பதோடு நிறைய தண்ணீரையும் அருந்த வேண்டும்.

இப்பழம் அப்படியோவோ, மிட்டய்கள், இனிப்புகள், கேக்குகள் வடிவிலோ உண்ணப்படுகிறது. இப்பழத்தினை அப்படியே உண்ணும்போது அதை நன்கு கழுவி சதைப்பகுதியை மட்டும் உண்டு விதையை நீக்கிவிட வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பிளம்ஸை அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.