பிளாஸ்டிக் எனும் வரம்!

தன் தவறுகளை
பிறர் மீது பழிபோட்டே
பழகியவன் மனிதன்!

நெருப்பை
பயன்படுத்தத் தெரியாதவன்
தீமை என்றான்

பயன்படுத்தத் தெரிந்தவன்
திரியில் அடக்கி
தீபம் என்றான்

சரி…

கொஞ்சம் சுடச் சுட
யோசிப்போமா?

பிளாஸ்டிக் தவிர்த்து
ஒருநாளை கடத்த முடியுமா?

விழித்து எழுந்து
பல் துலக்குவது முதல்
களைத்து விழுந்து
தூங்கும் வரை
பிளாஸ்டிக்!
பிளாஸ்டிக்!
பிளாஸ்டிக்!!

பிளாஸ்டிக் ஒழிப்பது லட்சியம்
தவிர்ப்பது நிச்சயம்
என்று வார்த்தை அலங்காரத்திற்கு பேசும்
அரசியல்வாதிகளே!
பிளாஸ்டிக் இல்லாமல்
உங்களால் ஒரு தேர்தலை சந்திக்க முடியுமா?
இல்லை ஒரு மாநாடு தான் நடத்த முடியுமா?

யோசிக்க தெரியாதவனை
மன்னிக்கலாம்
யோசிக்க விரும்பாதவனை?

யோசி!

ஓடிக் கொண்டிருக்கும்
நீரில் தான் ஆக்ஸிஸன் அதிகம்…

மரங்களை வெட்டி
மலைகளை மொட்டை அடித்து விட்டு பிறகு
மழைக்கு இயற்கையிடம் மனு கொடுக்க வேண்டாம் என்று
மரத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டதுதான்
பிளாஸ்டிக் என்பதை மறந்தான் மனிதன்!

பிளாஸ்டிக் அறிவியியல் தந்தவரம்
அதை ஒழிப்போம் எனும் அரசியல் நமது சாபம்

வரமா?
சாபமா?

யோசி…

ஒன்று மட்டும்
அடித்து சொல்கிறேன்…

தன்னை புதுப்பித்து கொள்ளாத
எந்த இனமும் மொழியும் நாடும்
அழிந்து போகும் என்பது உலக மொழி

இதனை மனதில் கொண்டு
வரும்காலங்களில் பொதுமக்களிடமும்
பள்ளிக் குழந்தைகளிடமும்
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
என்று எடுத்துரையாமல்
பிளாஸ்டிக்கை சீரமைப்போம்
என சொல்லிக் கொடுப்போம்

ஜெபகுமார்
பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், மதுரை