பிளாஸ்டிக் தவிர்த்தல் என்பது காலத்தின் கட்டாயம். நமது சிறிய செயல்கள் இந்த உலகிற்குப் பெரிய நன்மைகள் தருகின்றன என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
துணிப்பை அல்ல; உன்னதப்பை
மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, துணிக்கடை, மருந்துக் கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது ஒரு துணிப்பையை வைத்துக் கொள்வோம்.
அது வெறும் துணிப்பை அல்ல; உயிர்களின் துயர் துடைக்கும் உன்னதப்பை.
உணவங்களில் சாம்பார், சட்னி, குழம்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கச் செல்லும் போது அதற்கு தேவையான பாத்திரங்கள் கொண்டு செல்வோம்.
சூடான டீ, காபி, சாம்பார் மற்றும் சால்னா போன்றவற்றை பிளாஸ்டிக் பைகளில் வாங்குவது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூன்யம்.
சூடான உணவுப் பொருட்களை நாம் கொண்டு செல்லும் பாத்திரங்களில் வாங்குவதுதான் நல்லது.
மற்ற உணவுகளையும் பாத்திரங்களில் வாங்குவதால் அவை நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
பாத்திரங்களைக் கழுவுவது என்பது நேரம் பிடிக்கும் வேலை என நாம் நினைக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் பயன்களை நினைத்தால் நாம் அனைவரும் பாத்திரங்களைக் கழுவுவது பற்றி வருத்தம் கொள்ள மாட்டோம்.
உங்களுக்குத் தெரியுமா? ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன் என்பது வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டும்தான். அது மக்க எடுத்துக் கொள்ளும் வருடங்கள் 100க்கு மேல்.
வெறும் 10 நிமிடம் நமக்கு நண்பனாக இருந்து விட்டு வாழ்க்கை முழுதும் நமக்கு எதிரியாய் இருக்கும் பிளாஸ்டிக் பை அவசியமா?
நாளை நம் குழந்தைகள் வாழ பிளாஸ்டிக் இல்லாத பூமியை உருவாக்குவோம் என நாம் ஒவ்வொருவரும் தனக்கென உறுதி மொழியை உண்டாக்கி அதனை செயல்படுத்துதல் அவசியம்.
போர்வீரன் / பாவ மூட்டை
துணிப்பை எடுத்துச் சென்றால் நம்மைப் பட்டிக்காட்டான் என்று பிறர் நினைக்கலாம் எனப் பயப்படாதீர்கள். எல்லையில் நின்று நம் நாட்டைக் காக்கும் போர்வீரன் போன்றவர்கள் நீங்கள்.
கோவிலுக்குச் செல்லும்போது துணிப்பை அல்லது கூடை கொண்டு செல்லுங்கள்.
நீங்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய புண்ணியம். நீங்கள் பொழுதெல்லாம் ஆன்மிகம் பேசிவிட்டுப் பாலித்தீன் பைகளை நிறையப் பயன்படுத்தினால் நீங்கள் பாவ மூட்டைகளைச் சுமக்கின்றீர்கள் என்றே அர்த்தம்.
மருத்துவம் போன்ற தவிர்க்க முடியாத துறைகளில் ஒரு தற்காலிக ஏற்பாடாக நாம் பிளாஸ்டிக்கை அனுமதிக்கலாம். ஆனால் நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் இல்லாமல் வாழப் பழகுவோம்.
வசதி என்றெண்ணிப் பிளாஸ்டிக் பை பயன்படுத்தினோம்; இயற்கையை நாசமாக்கி விட்டோம். இனி துணிப்பை பயன்படுத்துவோம்; வசந்தத்தை மீட்டெடுப்போம்.
பிளாஸ்டிக் தவிர்த்தல் கவிதை
பிளாஸ்டிக் / பாலிதீன் பைகளின் கொடுமைகள் பற்றியும் துணிப்பையின் மகத்துவம் பற்றியும் விளக்கும் ஒரு நல்ல கவிதை.
என்னைக் கவர்ந்த இந்தக் கவிதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.
துணிப் பைகளைப் பயன்படுத்துவோம்
பாலிதீன் பைகளைத் தவிர்ப்போம்.
பாலிதீன் பைகளில் பேக்கிங் செய்யாதீர்
புற்று நோய்களுக்கு ஆளாகாதீர்.
துணிப்பை என்பது எளிதானது
தூர எறிந்தால் உரமாகும்.
பாலிதீன் பை அழகானது
வீசி எறிந்தால் விசமாகும்.
நீ தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்குக் கயிறு
முற்றிலுமாக பிளாஸ்டிக்கை
முடக்க பழக வேண்டும்
நாளை நம் குழந்தைகள் வாழ
உலகம் வேண்டும்.
பாலிதீன் பை – எமனின்
பாசக் கயிறு போல
தவிர்த்திடுங்கள் தோழா – இனி
எம்தலைமுறைகள் உயிர் வாழ
மறுமொழி இடவும்