பிள்ளையார் வழிபாட்டுப் பாடல்கள்

பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். எல்லாத் தெருக்களிலும் அவரைக் காணலாம். அவரை வணங்க சில பாடல்கள்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணி விப்பான் – விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து

 

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை

ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

 

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கரும மாதலால்

கணபதி என்றிடக் கவலை தீருமே

 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா

 

பிள்ளையார் வணக்கம்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் அருளைத் தரும் பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே

வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

 

ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்

நேரும் துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்

மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்

அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்

 

அவல்பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்

கவலையின்றி உண்ணுவார் கண்ணைமூடித் தூங்குவார்

கலியுகத்தின் விந்தையைக் காண வேண்டி அனுதினம்

எலியின் மீது ஏறியே இஷ்டம் போல சுற்றுவார்

 

தொந்தி கணபதி

தொந்தி கணபதி வா வா

வந்தே ஒரு வரம் தா தா தா

 

கந்தனின் அண்ணா வா வா வா

கனிவுடன் ஒரு வரம் தா தா தா

பானை வயிற்றுடன் வா வா வா

பணிந்தேன் ஒரு வரம் தா தா தா      (தொந்தி)

 

குள்ள குள்ளனே வா வா வா

குண்டு வயிறனே வா வா வா

ஆனை முகத்துடன் வா வா வா

அவசியம் ஒரு வரம் தா தா தா      (தொந்தி)

 

எல்லாம் அறிந்த கணபதியே

எவ் வரம் கேட்பேன் தெரியாதா

நல்லவன் என்னும் ஒரு பெயரை

நான் பெறவே வரம் தா தா தா      (தொந்தி)

 

கணேச சரணம்

கணேச சரணம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

கதியென அருள்வாய் சரணம் கணேசா

கருணையின் வடிவே சரணம் கணேசா

சக்தியின் மைந்தா சரணம் கணேசா

சாஸ்தா குருவே சரணம் கணேசா

முதல்வனும் நீயே சரணம் கணேசா

முனிதொழும் தேவா சரணம் கணேசா

மூத்தவன் நீயே சரணம் கணேசா

மூசிக வாகனா சரணம் கணேசா

அகந்தையை அழித்திடும் சரணம் கணேசா

அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா

கஜமுகன் நீயே சரணம் கணேசா

அடியார்க் கருள்வாய் சரணம் கணேசா

ஐந்து கரத்தோனே சரணம் கணேசா

வேழ முகத்தோனே சரணம் கணேசா

பார்வதி பாலகனே சரணம் கணேசா

பக்தருக் கருள்வாய் சரணம் கணேசா

 

பிள்ளையார்பட்டி வளர் பெருநிதியே கற்பகமே

பிள்ளையார்பட்டி வளர் பெருநிதியே கற்பகமே!

அள்ளி அள்ளித் தருகின்ற அருள் நிதியே அற்புதமே!

உள்ளமார் அன்புக்கு உவந்திடுவாய் பொற்பதமே!

வள்ளல் உன்னை நாடிவந்தோம் வாழ்த்திடுவாய் சிற்பரமே!

 

கல்லிலே முளைத்து வந்த கவின்தழிழே கலையழகே!

கையிலே சிவனை வைத்து களிகூரும் சிலையழகே!

புல்லிலே மாலையிட்டால் பொலிவுதரும் மலையழகே!

பொய்யெல்லாம் போயகல பொங்குமருள் தருவாயே!

 

காலையிலே உனைத் தொழுதால் கவலை யெல்லாம் ஓடிவிடும்!

மதியத்தில் தொழுதேத்த மதி எல்லாம் குளிர்ந்து விடும்!

மாலையிலே தொழுதவர்க்கு மனமெல்லாம் மகிழ்வு தரும்!

இரவினிலே வணங்கி வந்தால் இனிய நித்திரை கொள்ளும்!

 

சொக்கனையும் அம்மையையும் சொகுசாக வலம் வந்து

பக்குவ மாங்கனி பெற்றாய் பாரேத்தும் தந்தமுகா!

எக்காலும் உனைத் தொழுது ஏத்தி வந்த பேர்களுக்கு

மிக்க புகழ் தான்தந்து மிடுக்கோடு வாழவைப்பாய்!

 

பாலாலும் தேனாலும் பக்குவமாய்த் தயிராலும்

பன்னீரும் இளநீரும் பழவகையும் கலந்துவைத்து

ஐயனுக்கு அபிஷேகம் சென்னியிலே பூவைத்து

செய்தன்பால் போற்றினார்க்குச் செய்தொழிலைச் சிறக்கவைப்பாய்!

 

ஆவணியின் சதுர்த்தியிலே ஆனைமுகன் திருவிழா

ஆவலுடன் மக்களெல்லாம் அணிதிரளும் பெருவிழா!

பாவணிகள் பாடிவரும் பெரும்புலவர் வரும்விழா

பாவையர்கள் நோன்பேற்க பலன்மிகவே தரும்விழா!

 

உருவத்தில் முழுவதுமாய் உயர்சந்தனக் காப்பினிலே

வருடத்தில் ஒருமுறைதான் வந்தழகைக் காண்பீரே!

வருந்துன்பம் விலகவைத்து வாழ்கயினைச் சீராக்கும்

பெருமைகள் சொல்லரிய பேரருளைப் பெறுவீரே!

 

அற்புதக் கலைகளெல்லாம் அவையினிலே அரங்கேற்றம்

ஐயன்மேல் கவிபுனைந்தால் ஆனந்தப் பூந்தோட்டம்!

கற்பகத்தின் தனிப்பெருமை காணவரும் பெருங் கூட்டம்

கையெல்லாம் வடம்பிடிக்க கட்டழகுத் தேரோட்டம்!

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.