பி.வி.சிந்து

பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியதால் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை புரிந்த இறகு பந்தாட்ட வீரர்.

ரியோ ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வாங்கிய இரண்டு இந்திய விளையாட்டு வீரர்களில் ஒருவரான பி.வி.சிந்து இன்றைக்கு இந்தியாவில் அதிக அளவில் பேசப்படுகிறார். காரணம் அவரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு குணம், விடாமுயற்சி ஆகியவைகள் ஆகும்.

பி.வி.சிந்து என்பதன் விரிவாக்கம் புசார்லா வெங்கட சிந்து என்பதாகும்.

இவர் தனது 17 வயதில் உலக இறகுப்பந்தாட்டக் கூட்டமைப்பால் வெளியிடப்படும் முதல் இருபது வீரர்களின் தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்து உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தார்.

தற்போது இவர் உலகத் தரவரிசைப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். உலக இறகுப்பந்தாட்டக் கூட்டமைப்பால் இவர் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் 2013-ல் இறகுப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கத்தைக் கைபற்றினார்.

இதனால் இறகுப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் இறகுப்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டியில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் இவர் புரிந்துள்ளார்.

இவர் அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

 

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

இவர் ஹைதராபாத்தில் 05.04.1995-ல் பிறந்தார். இவருடைய பெற்றோர் பி.வி.ரமணா மற்றும் பி.விஜயா ஆவார். இவருடைய பெற்றோர் இருவரும் கைப்பந்து வீரர்களாவர். இவருடைய தந்தையார் அர்ஜூனா விருது பெற்றவர் ஆவார்.

 

இறகுப்பந்து வீரராக மாறுதல்

2001-ல் புல்லேலா கோபிசந்த் என்பவர் அனைத்து இங்கிலாந்து இறகுப்பந்தாட்ட சேம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிகழ்வு இவரை இவரின் பெற்றோரின் விளையாட்டான கைப்பந்திலிருந்து விலகி இறகுப்பந்தாட்டம் ஆட தூண்டுகோலாக அமைந்தது.

இவர் தனது எட்டாவது வயதிலேயே இறகுப்பந்தாட்டத்தை ஆடத் தொடங்கினார்.இவர் இறகுப்பந்தாட்டத்தின் ஆரம்பகால ஆட்ட நுணுக்கங்களை மெஹபூப் அலி என்பவரிடம் செகந்ராபாத்திலுள்ள இந்திய ரயில்வேக்குச் சொந்தமான சிக்னல் இன்ஜினியரிங் மற்றும் தொலைத் தொடர்பு இன்ஸ்டியூட்டில் உள்ள ஆடுகளத்தில் கற்றுக் கொண்டார்.

அதன் பின்பு அவர் புல்லேலா கோபிசந்த் நடத்தி வரும் இறகுப்பந்தாட்ட அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். கோபிசந்தின் பயிற்சி நிலையத்தில் சேர்ந்த பின் பல்வேறு பதக்கங்களைக் கைபற்றத் தொடங்கினார்.

 

உள்நாட்டுப்போட்டிகள்

இறகுப்பந்தாட்டத்தின் பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரட்டையர்களுக்கான பிரிவில் 5வது சர்வோ அகில இந்திய தரவரிசை சாம்பியன்ஷிப் மற்றும் அம்புஜா சிமிண்ட் அகில இந்திய தரவரிசை சாம்பியன்ஷிப் ஒற்றையர் பட்டத்தையும் கைபற்றினார்.

பதின்மூன்று வயதிற்குட்பட்டோர் பிரிவில் இவர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற சப்ஜூனியர் பிரிவில் ஒற்றையர் பட்டத்தைக் கைபற்றினார்.

அனைத்திந்திய கிருஷ்ண கைத்தான் போட்டி, ஐஓசி அகில இந்திய தரவரிசை போட்டி, தேசிய சப்ஜூனியர் மற்றும் அகில இந்திய புனே தரவரிசை போட்டி ஆகியவற்றில் இரட்டையர் பட்டத்தைக் கைபற்றினார். இவர் 51 தேசிய பள்ளிகளுக்கான போட்டியில் பதிநான்கு வயதிற்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கத்தைக் கைபற்றினார்.

 

சர்வதேசப் போட்டிகள்

2009-ல் கொழும்பில் நடைபெற்ற ஆசிய இறகுப்பந்தாட்ட சப்ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வெண்கலப்பதக்கத்தைக் கைபற்றினார். இதுவே இவரது முதல் சர்வதேசப் போட்டியாகும்.

2010-ல் ஈரான் பர்ஜ் சர்வதேச இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைக் கைபற்றினார்.

2010-ல் மெக்ஸிகோவில் நடைபெற்ற ஜூனியர் உலக இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி வரை சென்றார்.

2010 உப்பர் கோப்பையில் இந்திய தேசிய அணியில் இடம்பெற்றார்.

2012-ல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.

2013-ல் சிந்து தனது முதல் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பட்டத்தை மலேசிய ஓப்பன் போட்டியில் வென்றார்.

2013-ல் இறகுப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கத்தைக் கைபற்றினார்.

2013 இறுதியில் மக்காப் ஓப்பன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பட்டத்தை கைபற்றினார்.

2014-ல் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறினார்.

2014-ல் நடைபெற்ற உலக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதனால் அடுத்தடுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

2015-ல் டென்மார்க் ஓப்பனில் மூன்று முக்கிய வீரர்களான தை-சூ-யிங், வாங்-ஜி-கான், கரோலினா மாரின் ஆகியோர்களை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

2015-ல் மக்காப் ஓப்பன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பட்டத்தை கைபற்றினார்.

2016- ஜனவரியில் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பட்டத்தை கைபற்றினார்.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கைபற்றினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைச் செய்தார்.

 

விருதுகளும் பெருமைகளும்

2013-ல் இந்திய அரசு இவருக்கு விளையாட்டு வீரருக்கான அர்ஜூனா விருது வழங்கியுள்ளது.

2015-ல் இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்ம ஸ்ரீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியுள்ளது.

2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சிந்து வெற்றிக்கு காரணமாகச் சொல்லப்படுவது அவர் அதிகாலையில் விரைவாக எழுந்து பயிற்சி மேற்கொண்டதே ஆகும்.

சீரிய நோக்கத்துடன் கடினமாக உழைத்து உலக கவனத்தை ஈர்த்து வாழ்வின் உன்னத நிலையை அடைந்துள்ள சிந்துவின் வாழ்க்கை விடாமுயற்சியால் வெற்றி பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

– வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.