பீடபூமி

பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்

பீடபூமி என்பது மேட்டுநில வகை ஆகும். கடல் மட்டத்தைவிட உயரமான சமநிலப்பரப்பு பீடபூமி என்று அழைக்கப்படுகிறது.

இது நிலவகைகளுள் முக்கியமானது. உலகின் மொத்த நிலப்பரப்பில் 18 சதவீதத்தை இது கொண்டுள்ளது. இது எல்லா கண்டங்களிலும் காணப்படுகிறது.

பூமியின் மேற்பரப்பில் சுற்றியுள்ள பகுதிக்கு மேலாக உயர்ந்த உயரமான நிலப்பரப்பு பீடபூமி என புவியியலில் வரையறுக்கப்படுகிறது.

இது மலைகளைப் போல் சிகரத்தினைக் கொண்டிருப்பதில்லை. இதனுடைய மேற்பரப்பு சமதளமாகவும், பக்கங்கள் சரிவாகவும் காணப்படுகிறது. இவை உயர்சமவெளிகள் அல்லது மேசை நிலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய பீடபூமி திபெத் பீடபூமி ஆகும். இது திபெத், சீனா, இந்தியா வரை பரவிக் காணப்படுகிறது. இது 2.5 மில்லியன் சதுர கிமீ பரப்பினைக் கொண்டுள்ளது.

 

பீடபூமிகளின் உருவாக்கம்

பீடபூமிகளின் உருவாக்கமானது புவியோட்டின் மோதலால் உருவாதல் மற்றும் எரிமலை வெடிப்பினால் உருவாதல் என இருவகைகளில் ஏற்படுகிறது.

புவியோட்டின் மோதலால் உருவாதல்

புவியின் மேற்பரப்பு உயர்வதால் இவ்வகை ஏற்படுகிறது. புவியின் மேற்பரப்பு உயர்தல் டெக்டோனிக் தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் உண்டாகிறது.

 

திபெத்பீடபூமி
திபெத்பீடபூமி

 

வடக்கு ஆப்பிரிக்கா, துருக்கி, ஈரான் மற்றும் திபெத் போன்ற இடங்களில் உள்ள பீடபூமிகள் ஆப்பிரிக்கா, அரேபிய மற்றும் இந்திய புவியோட்டு தட்டுகள் யூரேசிய புவியோட்டு தட்டின் மீது மோதுவதால் உண்டானவை ஆகும்.

 

எரிமலை வெடிப்பினால் உருவாதல்

எரிமலை வெடிப்பினால் உண்டாகும் லாவாக்கள் பரந்து விரிந்து சேகரமாகி நாளடைவில் பீடபூமிகளை உருவாக்குகின்றன. இந்தியாவில் உள்ள தக்காண பீடபூமி இவ்வகையைச் சார்ந்தது.

 

தக்காணபீடபூமி
தக்காணபீடபூமி

 

ஆறுகள் மற்றும் நீரோடைகள் பீடபூமிகளில் அரிப்பினை உண்டாக்கி பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன.

 

பீடபூமியில் உள்ள பள்ளத்தாக்கு
பீடபூமியில் உள்ள பள்ளத்தாக்கு

 

சிலஇடங்களில் காற்று மற்றும் நீரோட்டங்களின் அரிப்பினால் மேற்புறத்தில் இருக்கும் மென்மையான பாறைகளை அரித்து பீடபூமிகளின் உயரமானது குறைக்கப்படுகிறது.

 

பீடபூமிகளின் வகைகள்

பீடபூமிகள் இன்டர் மான்டென்ட், பிட்மான்ட், கான்டினென்டல் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

இன்டர்மான்டென்ட் என்பது மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இவ்வகை பீடபூமி உலகின் உயர்ந்தவைகள் ஆகும். இமயமலை, கரகோரம் மற்றும் குல்குல் மலைகளால் சூழப்பட்ட திபெத் பீடபூமி இவ்வகையைச் சார்ந்தது.

பிட்மான்ட் இவ்வகையில் பீடபூமியானது மலையின் அடிவாரத்தில் காணப்படுகிறது. ஒருபுறம் மலையாலும் மற்றொருபுறம் கடல் அல்லது சமவெளிகளால் சூழப்பட்டிருக்கும்.

 

மாளவபீடபூமி
மாளவபீடபூமி

 

பிட்மான்ட் என்பதற்கு மலையின் அடிவாரம் என்பது பொருளாகும். இந்தியாவில் உள்ள மாளவபீடபூமி இவ்வகையைச் சார்ந்தது.

கான்டினென்டல் கடல்கள் அல்லது சமவெளிகளால் சூழப்பட்ட பீடபூமிப் பகுதி காண்டினென்டல் என்று அழைக்கப்படுகிறது. இது குவிப்பு பீடபூமிகள் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் பீடபூமிகள் இவ்வகையைச் சார்ந்தவை.

 

பீடபூமிகளின் முக்கியத்துவம்

பீடபூமிகள் கனிமங்களின் குவியலாக உள்ளது. உலகில் உள்ள மொத்த கனிமங்களில் பெரும்பான்மையானவை பீடபூமிகளில் காணப்படுகின்றன.

இரும்பு, செம்பு, தங்கம், வைரம், மாங்கனீசு, நிலக்கரி ஆகியவை பீடபூமிகளில் அதிகளவு கிடைக்கின்றன.

பீடபூமிகளிலிருந்து அருவிகள், நீரோடைகள் ஆகியவை உற்பத்தியாகின்றன. ஆதலால் இவை புவியின் நீராதாரம் பெருக முக்கியத்தும் வாய்ந்தவைகளாக உள்ளன.

 

பீடபூமியில் உருவாகும் நீர்வீழ்ச்சி
பீடபூமியில் உருவாகும் நீர்வீழ்ச்சி

 

லார்வா குழம்புகளால் உருவான பீடபூமிகள் வளமானவைகளாக இருக்கின்றன. ஆதலால் இவ்வகை பீடபூமியில் வேளாண்மை செய்ய சிறந்ததாக உள்ளது.

பீடபூமிகளில் உள்ள புல்வெளிகள் சிறந்த மேய்ச்சல் நிலங்களாக உள்ளன.

 

பீடபூமியில் உள்ள புல்வெளி
பீடபூமியில் உள்ள புல்வெளி

 

பல பீடபூமிகள் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யன் பீடபூமியைக் கூறலாம்.

வ.முனீஸ்வரன்