உணவுல தொடங்கி மருந்துவர பல பொருட்கள்ல நிறமிகள் பயன்படுத்தப்படுது. சிவப்பு, மஞ்சள் ஆரஞ்சு, நீலம் அப்படீன்னு பலவகையான நிறமிகள் இருக்குது. இவையெல்லாம் பெரும்பாலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட வேதிச்சேர்மங்கள் தான்.
செயற்கை நிறமிகள உடை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்ல பயன்படுத்தரப்ப பெரிய அளவுல அதன் விளைவுகள் பற்றி கேள்வி எழும்பறதில்ல.
ஆனா உணவுல நிறமிகள சேர்க்கும் போதுதான் நிறமியின் தன்மை மற்றும் விளைவுளின் மீது அதீத கவனத்த செலுத்த வேண்டியிருக்கு.
ஆமாங்க… உணவுல சேர்க்கற நிறமிகள் இயற்கையானதா இருந்தா, அது பாதுகாப்பானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்குமில.
ஆனா, நாம நினைக்கற மாதிரி செயல் திறன்மிக்க மற்றும் விலை மலிவான நிறமிகளை இயற்கையான பொருட்களில் இருந்து எடுப்பது கடினங்கறாங்க, இத்துறை நிபுணர்கள். குறிப்பா சொல்லனும்னா நீலநிறமிகள இயற்கைப் பொருட்களில் இருந்து பெறுவது ரொம்ப கடினமாம்.
‘அப்ப இயற்கையில நீல நிறமிகளே இல்லையான்னு?’ கேள்வி கேட்டா ‘இருக்குதுன்னு’ இத்துறை ஆராய்ச்சியாளர்கள் பதில் சொல்றாங்க. என்ன ஒரே குழப்பமா இருக்குதா? தொடர்ந்து படியுங்களேன்.
இயற்கையிலேயே நீலநிறமிகள் இருக்கு. நீலநிறமியான அல்ட்ராமெரைன் (Ultramarine) போன்ற கனிமச் சேர்மங்கள எடுத்துகாட்டா சொல்லலாம்.
ஆனா, இவை அதிக நிலைப்புத்தன்மை கொண்டவை. பெரும்பாலும் விலையும் அதிகம் இருக்கும். மேலும், இவற்றுல இருக்கும் உலோக அயனிகளால நச்சுத்தன்மை வெளிப்படும். இந்தக் காரணங்களால இயற்கையா கிடைச்சாலும் இவற்ற பரந்த அளவில பயன்படுத்த முடியாம போயிடுது.
உயிரற்ற சடப்பொருள் மட்டுமில்ல. சில உயிரினங்களும் நீலநிறத்தைப் பெற்றிருக்கு.
உதாரணமா, தென் அமெரிக்காவ தாயகமாகக் கொண்ட நீல அழகி (blue jay, Cyanocitta cristata) எனும் குருவியை சொல்லலாம்.
பெயருக்கு ஏத்தா மாதிரி இதன் மேற்புற இறகுகள் நீலநிறத்தில் காட்சியளிக்கும்.
இதேபோல சிலவகை பட்டாம்பூச்சி மற்றும் தும்பியின் இறகுகளும் நீலநிறத்தில் காட்சியளிக்கின்றன. ஆனா இவற்றின் நீலநிறத்திற்கு காரணம் நிறமிகள் கிடையாது.
மாறாக, வானம் எப்படி ஒளிச்சிதறலால் நீலநிறத்துல காட்சி தருதோ, அதேபோல இவற்றின் மீதிருக்கும் வேதிச்சேர்மங்களும் ஒளியை சிதறடிப்பதால இவை நீலநிறத்தில் காட்சி தருகின்றன.
அதாவது இந்த உயிரிகள்ல இருக்கும் நீலநிறத்துக்கு நிறமிகள் காரணம் இல்ல. அதனால நீல நிறமிகளை இவற்றிலிருந்து பிரிச்செடுக்க முடியாது.
‘சரி, ஏதாவது தாவரங்கள் நீலநிறத்துல இருக்குதா?’ அப்படீன்னு கேட்டா, ‘ஓஓ…. இருக்குதேன்னு’ ஒரு பதில் வருது. ‘அது எந்த தாவரம்னு கேக்குறீங்களா?’ சொல்றேன்.
அவுரிநெல்லிச் செடி. ஆமாங்க, ஆங்கிலத்துல Blueberries அப்படீன்னு சொல்லுவோமே, அந்த பழங்கள் நீலநிறத்துல தானே இருக்குது. இதுமட்டுமில்ல இன்னும் சில பூக்கும் தாவரங்கள்ல நீலநிறமி இருக்குதாம். அதற்கு காரணம் ‘அந்தோசயனின் நிறமி’ தான்.
ஆனா, இந்த நீலநிறமிய சுலபமா பிரித்தெடுத்து பயன்படுத்த முடியாதாம். ஏன்னா விரைவில இதன் நிறம் மங்கிடுமாம் அல்லது நிறம் மாறிடுமாம்.
இந்நிலையில தான், இயற்கையில கிடைக்கும் ஒரு நிறமி மூலக்கூற எடுத்து அதோட கட்டமைப்பில சிறுமாற்றம் செய்வதன் மூலம் நீலநிறமியை தயாரிக்க முடியும்னு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.
அதாவது பீட்ரூட் சாறுல இருந்து நீலநிறமிய தயாரிச்சிருக்காங்க.
குழப்பம் வேண்டாம்.
பீட்ரூட் சாறு சிவப்பு நிறத்தில தான் இருக்கும். இதுக்கு (சிவப்பு) காரணம் பெட்டாலின் (Betalain) எனும் நிறமி தான். பெட்டாலினின் ஒரு அங்கமான பீட்டாலமிக் அமில (betalamic acid) மூலக்கூறில் பை (π)-பிணைப்புகளை அதிகரிக்கும் வகையில் சிறுமாற்றத்த ஆராய்ச்சியாளர்கள் செஞ்சிருக்காங்க.
அதாவது பீட்டாலமிக் அமில மூலக்கூறை 2,4-டைமெத்தில் பிரோலுடன் (2,4-dimethylpyrrole) இணைச்சிருக்காங்க. இதன் விளைவாக உண்டான சேர்மத்திற்கு பீட்ப்ளூ (BeetBlue)-ன்னு பேரும் வச்சிருக்காங்க.
உருமாற்றப்பட்ட இயற்கை நிறமியான பீட்ப்ளு சேர்மத்த நீலநிறமியாக பயன்படுத்த முடியுங்கறது ஆய்வுகள் மூலமா தெரிய வந்திருக்கு.
அதாவது, பீட்ப்ளூ நிறமி துணி, தயிர் மற்றும் முடி போன்றவற்றில் சேர்க்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தி இருக்காங்க, ஆய்வாளர்கள். செயற்கை நிறமிகள போலவே பீட்ப்ளூ நிறமியும் சிறப்பா செயல்படுதாம்.
முக்கியமா, பீட்ப்ளூ நிறமி மனித கல்லீரல் மற்றும் விழித்திரை நிறமி எபித்தீலியச் செல்களுக்கு நச்சுத்தன்மையற்றதாக இருக்குதாம். வரிக்குதிரை மீனின் (Zebra Fish) கரு வளர்ச்சியையும் பீட்ப்ளூ நிறமி பாதிக்கலையாம்.
அதனால திடநிலையுலும், அமிலப்படுத்தப்பட்ட முனைவுக் கரைப்பான்களின் (polar solvents) கரைசலிலும் நீலநிறமா காட்சியளிக்கும் பீட்ப்ளூ, கனிம நீலநிறமிகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்னு நம்பறாங்க, இதனை தயாரிச்ச ஆராய்ச்சியாளர்கள்.
அதேசமயத்துல, பீட்ப்ளூ நிறமிய உணவுல கலந்து சாப்பிட முடியுமான்னு சொல்ல இன்னும் ஆய்வுகள் தேவைப்படுதுன்னும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com