பீட்ரூட் வேரின் மேற்புறப் பகுதியிலிருந்து கிடைக்கக்கூடிய கிழங்கு வகை காயாகும்.காய்கறிகளில் இது அதிக இனிப்பு சுவையினை உடையது.
இக்காயானது ரோமானியர்களால் முதலில் முறையாக பயிர் செய்யப்பட்டது.
இக்காயின் தனித்துவமான சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துகள் ஆகியவை இக்காயினை உணவில் சேர்க்கத் தூண்டுகின்றன.
பீட்ரூட்டிலிருந்து சர்க்கரை தயார் செய்ய முடியும் என்பது 19-ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
அது முதல் இது பெரிய வர்த்தக மதிப்பைப் பெற்றது. இன்றைக்கும் சர்க்கரை தயாரிப்பின் மூலப்பொருளாக பீட்ரூட் பயன்படுத்தப்படுகிறது.
பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, போலந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வர்த்த நோக்கில் பீட்ரூட்டினை அதிகளவு பயிர் செய்கின்றன.
பீட்ரூட் செனோபாடிசியஸ் என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. பீட்ரூட்டின் அறிவியல் பெயர் பீட்டா வல்கர்ரிஸ் என்பதாகும். இக்காயானது தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.
பீட்ரூட் படர்ந்த பச்சை இலைகளைக் கொண்ட சிறிய செடி வகைத் தாவரம் ஆகும்.
இதன் இலைகள் மற்றும் கிழங்குகள் உண்ணத் தக்கவை.
பீட்ரூட் தாவரம் நடப்பட்ட 50-60 நாட்களில் கிழங்கானது உணவுக்காக அறுவடை செய்யப்படுகிறது.
பீட்ரூட் காயானது பொதுவாக 100 முதல் 150 கிராம் எடையளவில் காணப்படுகிறது.
பொதுவாக இக்காயானது அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களிலும் இக்காய் காணப்படுகிறது.
சிவப்பு நிற பீட்ரூட்டில் பீடான் மற்றும் பீட்டானானின் போன்ற வெண்கல நிறமிகள் தனித்த சிவப்பு நிறத்தை உண்டாக்குகின்றன.
மஞ்சள் நிற பீட்ரூட்டில் பீட்டா சாந்தைன் என்ற நிறமி காணப்படுகிறது.
பீட்ரூட் ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய காயாக இருந்தாலும் ஜூன் முதல் அக்டோபர் வரை அதிக சுவையுடன் அதிகளவில் கிடைக்கிறது.
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பீட்ரூட்டில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன.மேலும் இதில் விட்டமின் ஏ, இ போன்றவையும் உள்ளன.
இக்காயில் தாதுஉப்புக்களான காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்றவை அதிகளவு காணப்படுகின்றன.
இதில் துத்தநாகம், கால்சியம், சோடியம் போன்ற தாதுஉப்புக்களும் உள்ளன.
மேலும் இக்காயானது குறைந்தளவு எரிசக்தி, அதிக அளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இக்காயில் பைட்டோநியூட்ரியன்களான பீட்டா கரோடீன்கள், பீட்டைன், லுடீன் ஸீஸாத்தைன் போன்றவை காணப்படுகின்றன.
பீட்ரூட்டின் மருத்துவப் பண்புகள்
இதய நலத்திற்கு
பீட்ரூட்டில் உள்ள நார்சத்தானது கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைட்களின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கச் செய்கிறது.
டிரைகிளிசரைட்களின் அளவு அதிகரிக்கும்போது இதய நோய்கள் தோன்றுகின்றன.
மேலும் இக்காயில் உள்ள நார்சத்தானது கெட்ட கொழுப்பினை இதயசுவர்களிலிருந்து அகற்றி உடலை விட்டு வெளியேற்றுகிறது.
இரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்யும் ஹோமோசைட்டோசைனின் அளவினை பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் ஊட்டச்சத்து குறைக்கிறது.
இவ்வாறாக பீட்ரூட் பல்வேறு வழிகளில் இதய நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பிறப்பு குறைபாடுகள் நீங்க
பீட்ரூட்டில் விட்டமின் பி தொகுதிகள் மற்றும் ஃபோலேட்டுக்கள் அதிகளவு காணப்படுகின்றன.
இவை கருவில் இருக்கும் குழந்தையின் முதுதண்டு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மேலும் விட்டமின் பி தொகுதிகள் மற்றும் ஃபோலேட்டுக்கள் கருவளர்ச்சி மிகவும் அவசியமானவைகள் ஆகும்.
எனவே இவற்றை கர்ப்பிணிகள் உண்டு பிறப்பு குறைபாடுகள் இன்றி ஆரோக்கிய குழந்தைகளைப் பெறலாம்.
புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க
பீட்ரூட்டில் உள்ள பீட்டாசைனஸிஸ் நிறமியானது தோல், நுரையீரல், குடல் ஆகிய இடங்களில் புற்றுசெல்களின் வளர்ச்சியினைத் தடைசெய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
விலங்குகளின் கறியை பதப்படுத்த நைட்ரேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நைட்ரேட்டுகள் புற்றுநோயை உருவாக்கும் நைட்ரோசோமைன் கூட்டுப்பொருளை உற்பத்தி செய்கின்றன.
பீட்ரூட் சாறானது நைட்ரோசோமைன் கூட்டுப்பொருளால் ஏற்படும் செல்லின் மரபணு மாற்றத்தை தடைசெய்கிறது.
இதனால் புற்றுநோய் உருவாக்கம் தடுக்கப்படுகிறது. பீட்ரூட் சாறுகள் மற்றும் பொடிகள் டியூமர் உருவாக்கத்தை தடைசெய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பீட்ரூட்டினை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது உடலினை நீண்ட நாட்கள் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கண்களின் பாதுகாப்பிற்கு
பீட்ரூட்டில் பீட்டா கரோடீன் அதிகளவு உள்ளது. இந்த பீட்டா கரோடீன் விட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது.
விட்டமின் ஏ-வானது வயதோதிகத்தால் ஏற்படும் கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் ஏற்படாமல் தடைசெய்கிறது.
மேலும் விட்டமின் ஏ-வானது உடலின் இயக்கத்திற்கு அவசியமான ஒன்றாகவும் உள்ளது.
எனவே பீட்ரூட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து நாம் கண்களைப் பாதுகாக்கலாம்.
நோய் எதிர்ப்பாற்றலைப் பெற
பீட்ரூட்டில் விட்டமின் சி அதிகளவு காணப்படுகிறது. இந்த விட்டமின் சி-யானது இரத்த வெள்ளை அணுக்களை உற்பத்திக்கு முக்கிய காரணியாகும்.
இரத்த வெள்ளை அணுக்கள் உடலினை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன.
மேலும் விட்டமின் சி-யானது சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகளையும் தடுக்கிறது. எனவே பீட்ரூட்டினை உண்டு நோய் தடுப்பாற்றலைப் பெறலாம்.
கல்லீரல் நலத்திற்கு
பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் கல்லீரலில் உள்ள நச்சினை நீக்கி கல்லீரல் செல்கள் நன்கு செயல்பட தூண்டுகிறது.
மேலும் பீட்ரூட் சாறானது போதை நீக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.எனவே பீட்ரூட்டினை உண்டு கல்லீரல் நலத்தினைப் பேணலாம்.
தமனிகளின் கட்டமைப்பிற்கு
பீட்ரூட்டில் உள்ள ஃப்ளவனாய்டுகள் மற்றும் விட்டமின் சி ஆகியவை தமனிகளின் கட்டமைப்பிற்கு உதவுகின்றன.
இனப்பெருக்க ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கு
பீட்ரூட்டில் உள்ள போரான் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பினை சரிவர செயல்படச் செய்கிறது.
எனவே பீட்ரூட்டினை உண்டு இனப்பெருக்க ஹார்மோன் சுரப்பு குறைபாட்டினை சரி செய்யலாம்.
ஆற்றலின் அளவினை அதிகரிக்க
பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்டானது ஆற்றலினை வழங்கும் எரிசக்தியாக உள்ளது.
இந்த எரிசக்தியானது நீடித்த விளையாட்டிற்கு மிகவும் அவசியமாகும். எனவே விளையாட்டு வீரர்கள் இதனை உண்டு தேவையான சக்தியினை பெறலாம்.
பீட்ரூட் சாற்றினை அருந்தும்போது பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் உட்ளிழுக்கும் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரிக்கிறது.
இதனால் உடலின் ஸ்டாமினா (திண்மை) அதிகரிக்கிறது. இதனால் விளையாட்டு வீரர்களின் உற்சாக பானமாக பீட்ரூட் சாறு உள்ளது.
பீட்ரூட் பற்றிய எச்சரிக்கை
பீட்ருட் கிழங்கு மற்றும் அதன் இலைகளை உண்ணும்போது சிலருக்கு சிறுநீரானது சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறத்தில் வெளியேறுகிறது.
இந்நோய்க்கு பீட்டூரியா என்று பெயர். இந்நோயானது பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாசையனின் என்ற நிறமியை பகுக்க முடியாததால் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.
இந்நோய் 10-15 சதவீத மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.
பீட்ரூட்டில் ஆக்ஸாலிக் அமிலம் காணப்படுகிறது.
இதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதையில் பாதிப்புள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நலம்.
பீட்ரூட்டினை வாங்கும் முறை
பீட்ருட்டினை வாங்கும்போது புதிதான, பிரகாசமான, உறுதியான, ஒரே அளவில் உள்ளவற்றைத் தேர்வு செய்யவும்.
மென்மையான, முதிர்ந்த மற்றும் மேற்புறத்தில் வெட்டுக்காயங்கள் கொண்டவற்றைத் தவிர்க்கவும்.
இலைகளுடன் வாங்க நேர்ந்தால் இலைகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்தலாம்.
இலைகளை நீக்கும்போது சிறிதளவு தண்டுப்பகுதியினை கிழங்கில் விட்டுவிட்டு அகற்றவும்.
பீட்ரூட் கிழங்கினை குளிர்பதனப் பெட்டியில் மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
அறையின் வெப்பநிலையில் ஒரு வாரம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பீட்ரூட்டினை உபயோகிக்கும்போது மேற்புறத் தோலினை நீக்கிவிட்டு பயன்படுத்தவும்.
பீட்ரூட்டானது அப்படியேவோ, சாறாகவோ, சமைத்தோ உண்ணப்படுகிறது.
ஊறுகாய், சாலட்டுகள், நிறமூட்டிகள், ஜாம்கள், இனிப்புகள், ஜெல்லிகள், ஐஸ்கிரீம்கள் ஆகியவை தயார் செய்யவும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.
உடலுக்கு அவசியான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள பீட்ரூட்டினை உண்டு உடல்நலம் காத்து நல்வாழ்வு வாழ்வோம்.
-வ.முனீஸ்வரன்