பீன்ஸ் பொரியல் அருமையான தொட்டுக்கறி ஆகும். பீன்ஸ், முருங்கை பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
முருங்கை பீன்ஸ் உடலுக்குத் அவசியமான ஊட்டச்சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கை பீன்ஸ் – 250 கிராம்
காரட் – 50 கிராம்
பாசிப் பருப்பு – 25 கிராம்
தேங்காய் – ¼ மூடி (நடுத்தர அளவு)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3 எண்ணம் (நடுத்தர அளவு)
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
பீன்ஸ் பொரியல் செய்முறை
முருங்கை பீன்ஸை கழுவி நாரினை நீக்கி சுத்தம் செய்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
காரட்டை கழுவி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
பாசிப் பருப்பினை அலசிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி அதில் அலசிய பாசிப் பருப்பினைப் போட்டு வேக வைக்கவும்.
பாசிப் பருப்பு பாதி அளவு வெந்ததும் அதில் நறுக்கிய முருங்கை பீன்ஸ், காரட், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
தண்ணீர் வற்றி காய் கெட்டியானதும் இறக்கி விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும். அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதில் வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து சுருள வதக்கவும்.
பின்னர் அடுப்பினை அணைத்து விட்டு துருவிய தேங்காய் துருவல் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.
சுவையான பீன்ஸ் பொரியல் தயார்.
குறிப்பு
சிறுபருப்பு வேக வைக்கும் போது சரியான அளவு தண்ணீர் சேர்க்கவும். காய்கறிகள், சிறுபருப்பு வெந்த பிறகும் தண்ணீர் அதிகமாக இருந்தால் வடித்து விடலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!