பீர்க்கங்காய் சட்னி அருமையான தொட்டுக் கறி ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம்.
நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமான உணவுப் பொருள் ஆகும்.
பீர்க்கங்காயைக் கொண்டு பொரியல், கூட்டு, சாம்பார், சட்னி என பலவித உணவுகள் தயார் செய்யலாம். இனி பீர்க்கங்காய் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் – 3 எண்ணம் (நடுத்தர அளவு)
சின்ன வெங்காயம் – 10 எண்ணம் (நடுத்தர அளவு)
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பல் (பெரியது)
இஞ்சி – சுண்டு விரல் அளவு
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
செய்முறை
முதலில் பீர்க்கங்காயை கழுவி மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும். பின் பீர்க்கங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.


சின்ன வெங்காயத்தை தோலுரித்து நேராக கீறிக் கொள்ளவும். வெள்ளைப் பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி கீறிக் கொள்ளவும்.
புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு, சதுரங்களாக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் அதனுடன் பீர்க்கங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும். மூன்று நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.


பீர்க்கங்காய்க் கலவை ஆறியதும் மிக்ஸியில் பீர்க்கங்காய் கலவை, தேவையான உப்பு, ஊற வைத்த புளி, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.


இதனை இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கறியாக உபயோகிக்கலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் காய்ந்த மிளகாயைப் பயன்படுத்தி பீர்க்கங்காய் சட்னி செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!