பீர்க்கங்காய் பொரியல் செய்வது எப்படி?

பீர்க்கங்காயைக் கொண்டு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் பீர்க்கங்காய் பொரியல் செய்யலாம்.

பீர்க்கங்காய் நீர் சத்தினை அதிகம் கொண்ட சத்து மிக்க காய் ஆகும்.  இது உடலுக்குக் குளிர்ச்சி தரும் காய் ஆகும்.

பீர்க்கங்காயைக் கொண்டு எளிதான முறையில் அதே நேரத்தில் சுவையானதாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் – ½ கிலோ கிராம்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)

மிளகாய் வற்றல் – 4 எண்ணம்

 

தாளிக்க

சின்ன வெங்காயம் – 4 எண்ணம்

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

 

செய்முறை

பீர்க்காய் தோலினைச் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

நறுக்கிய‌ பீர்க்கங்காய் துண்டுகள்
நறுக்கிய‌ பீர்க்கங்காய் துண்டுகள்

 

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உறுவிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.

தாளிக்கும் போது
தாளிக்கும் போது

 

பின் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய பீர்க்கங்காய், தேவையான உப்பு சேர்த்து கிளறி விடவும்.

மிளகாய் வற்றலை ஒன்றிரண்டாக ஒடித்து பீர்க்கங்காய் கலவையுடன் சேர்த்து அடுப்பை மிதமான தணலில் வைத்து வாணலியை தட்டினால் மூடி விடவும்.

அடுப்பில் வைத்தவுடன்
அடுப்பில் வைத்தவுடன்

 

அவ்வப்போது கலவையை கிளறி விடவும்.

சற்று வதங்கியதும்
சற்று வதங்கியதும்

 

நன்கு வதங்கியதும்
நன்கு வதங்கியதும்

 

பீர்க்கங்காய் வெந்து நிறம் மாறி சுருண்டு வரும் போது தணலை அணைத்து விடவும்.

அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

சுவையான பீர்க்கங்காய் பொரியல் தயார்.

சுவையான பீர்க்கங்காய் பொரியல்
சுவையான பீர்க்கங்காய் பொரியல்

 

இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.

 

குறிப்பு

பீர்க்கங்காயை வேக வைக்கும் போது தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் பீர்க்கங்காய் அதில் உள்ள தண்ணீரிலிலேயே வெந்து விடும்.

பீர்க்கங்காயை சீவும் போதே சிறு வாயில் வைத்து சுவைக்கவும். கசந்தால் அக்காயைத் தவிர்த்து விடவும்.

விருப்பமுள்ளவர்கள் பொரிகடலையைத் தூள் செய்து தேங்காய்க்கு பதில் பொரியல் இறக்கும் தருவாயில் சேர்த்து கிளறி பொரியல் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.