நார்ச்சத்து மிகுந்த பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் நம்ம வெள்ளரிக்காய்க்கு மிக நெருங்கிய உறவினர் என்று சொன்னால் நம்ம முடியுமா?. ஆனால் அதுதான் உண்மை.

பீர்க்கும், வெள்ளரியும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை. இக்காயும் வெள்ளரியைப் போன்ற அதிகளவு நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் இக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

தற்போது இக்காய் உலகெங்கும் பரவி அதன் ருசி மற்றும் மருத்துவ குணங்களுக்காக புகழ் பெற்றுள்ளது. தமிழ் சங்க இலக்கியங்களில் பீர்க்கங்காய் மற்றும் அதன் பூ பற்றி பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

இக்காயில் இனிப்பு மற்றும் கசப்பு சுவைகளைக் கொண்ட இரு பிரிவுகள் உள்ளன. இதில் இனிப்பு காயானது சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

இனிப்பு சுவையுடைய பீர்க்கு வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. கசப்பு சுவையுடைய காயானது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பீர்க்கங்காய் குகுர்பிட்டேசியே என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் லுஃப்பா அட்யூட்டங்குலா என்பதாகும். இக்காயின் தாயகம் மத்திய மற்றும் கிழக்கு ஆசிய பகுதிகளாகும்.

பீர்க்கங்காயின் அமைப்பு மற்றும் வளரியல்பு

பீர்க்கங்காய் கொடி வகையைச் சார்ந்த தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இக்கொடி ஐந்து கோண தண்டினைப் பெற்றுள்ளது.

 

பீர்க்கங் கொடி 1
பீர்க்கங் கொடி 

 

பீர்க்கங் கொடி அலங்காரம்
பீர்க்கங் கொடி அலங்காரம்

 

இக்கொடியில் அடர் பச்சைநிற இலைகள் காணப்படுகின்றன.
இக்கொடியில் 5-7.5 செமீ விட்டளவுள்ள பொன்மஞ்சள் நிறப் பூக்கள் தோன்றுகின்றன.

 

பீர்க்கம் பூ
பீர்க்கம் பூ

 

இப்பூக்களிலிருந்து உருளை வடிவக் காய்கள் தோன்றுகின்றன.
பீர்க்கங்காயின் வெளிப்புறம் அடர் பச்சை நிறத்தில் கரடுமுரடாக முகடு வடிவத்தில் காணப்படுகிறது.

 

பீர்க்கங்காய்
பீர்க்கங்காய்

 

இக்காயின் உட்புறம் வெள்ளைநிற சதைப்பற்றினைக் கொண்டுள்ளது. இதில் வெள்ளை நிற விதைகள் காணப்படுகின்றன.

பீர்க்கங்காயானது மிகவும் இளமையாக இருக்கும்போது பறித்து உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இக்காயானது முற்றிக் காய்ந்ததும் மீதமுள்ள நார்ப்பகுதி தேய்த்து குளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

 

காய்ந்த பீர்க்கங்காய்
காய்ந்த பீர்க்கங்காய்

 

பீர்க்கங்காய் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களில் வளரும் தன்மையைக் கொண்டுள்ளது.

நல்ல வடிகால் அமைப்புடைய வளமான மண் இத்தாவரம் செழித்து வளர அவசியமானது. இக்கொடியானது விரைவில் பூத்துக் காய்த்து விடும் தன்மையுடையது.

பீர்க்கங்காயில் உள்ள சத்துக்கள்

பீர்க்கங்காயில் ஆன்டிஆக்ஸிஜென்டுகள், லிப்பிடுகள், விட்டமின்கள், தாதுஉப்புக்கள் ஆகியவை காணப்படுகின்றன.

இக்காயில் விட்டமின் ஏ, விட்டமின் பி1(தயாமின்), விட்டமின் பி2(ரிஃபோஃப்ளோவின்),  பி3(நியாசின்), விட்டமின் பி5 (பான்டாதெனிக் அமிலம்), விட்டமின் பி6(பைரிடாக்ஸின்), விட்டமின் சி ஆகியவை உள்ளன.

இக்காயில் மாங்கனீசு, பொட்டாசியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகிய தாதுஉப்புகள் காணப்படுகின்றன.

இக்காயானது குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவற்றையும் பெற்றிருக்கிறது.

பீர்க்கங்காயின் மருத்துவப் பண்புகள்

பீர்க்கங்காயின் இலை, பூ, காய், தண்டு, வேர் என எல்லா தாவரப் பாகங்களும் மருந்துப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கண்களை நோய்களிலிருந்து பாதுகாக்க

விட்டமின் ஏ,இ,சி, செம்புச்சத்து, துத்தநாகம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது அடுத்த ஆறுவருடங்களுக்கு 25சதவீதம் கண்நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சத்துக்கள் பீர்க்கங்காயில் அதிகம் உள்ளன. எனவே இக்காயினை உண்டு கண் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

மேலும் பீர்க்கங்காயில் உள்ள பீட்டா கரோடீன்கள் பார்வைக் கோளாறுகளைத் தடுத்து பார்வைத்திறனை மேம்படுத்துகின்றன.

இரத்த சுத்திகரிப்புக்கு

பீர்க்கங்காயானது இரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

மேலும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மது உள்ளிட்ட போதைபொருட்களினால் பாதிக்கப்பட்ட கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

ஆரோக்கியமான உடல்எடை குறைப்பிற்கு

பீர்க்கங்காயானது அதிகளவு நார்ச்சத்தினையும், நீர்சத்தினையும், குறைந்தளவு எரிசக்தியினையும் கொண்டுள்ளது.

எனவே இக்காயினை உட்கொள்ளும்போது வயிறுநிரம்பிய உணர்வு ஏற்படுகிறது.

மேலும் இக்காயின் நார்ச்சத்து விரைவில் ஏற்படும் பசி உணர்வினைக் கட்டுப்படுத்துகிறது.

இக்காயானது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுஉப்புக்களையும், விட்டமின்களையும் கொண்டள்ளது.

எனவே பீர்க்கங்காயினை உண்டு ஆரோக்கியமான உடல்எடை குறைப்பினை மேற்கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

பீர்க்கங்காயில் பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் போன்ற‌ வேதிப்பொருட்கள் உள்ளன. இவை இயற்கையான இன்சுலினாகச் செயல்படுகின்றன.

எனவே இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவினைக் குறைக்கின்றன.

மேலும் இக்காயில் உள்ள மாங்கனீஸ் இன்சுலின் சுரப்பினை அதிகரிக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகிறது.

இதய நலத்திற்கு

இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை இக்காயில் உள்ள விட்டமின் பி3(நியாசின்) தடைசெய்கிறது.

இக்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடைசெய்கிறது.

மேலும் இக்காயில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

எனவே பீர்க்கங்காயினை உணவில் சேர்த்து சீரான இரத்த அழுத்தத்துடன் இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.

நல்ல செரிமானம் மற்றும் மலச்சிக்கல் நீங்க

பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்தானது செரிமானப் பாதையில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைத்து நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்கிறது.

இவை உணவினை நன்கு செரிக்கச் செய்கிறன. மேலும் இக்காயில் கரையாத நார்சத்துகள் காணப்படுகின்றன.

இவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களளை எளிதாக வெளியேற்றுகின்றன.

எனவே பீர்க்கங்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. மூலநோய்க்கும் இக்காய் தீர்வளிக்கிறது.

தசைவலி தீர

இக்காயில் உள்ள பொட்டாசியம் உடலின் திரவ அளவை சமநிலைப்படுத்தி தசைகளை தளர்த்துகிறது.

பொட்டாசியத்தின் அளவு குறையும்போது தசைப்பிடிப்பு, வலி ஆகியவை ஏற்படுகின்றன.

எனவே பொட்டாசியம் நிறைந்த பீர்க்கங்காயினை உண்டு தசைவலி ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

கீல்வாதம் குறைய

செம்புச்சத்து கீல்வாதத்தால் ஏற்படும் விறைப்பு மற்றும் வலி எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.

மேலும் இது இணைப்பு திசுக்களின் பழுதினைச் சரிசெய்து தசைகளுக்கு வலிமை அளிக்கிறது.

எனவே செம்புச்சத்து நிறைந்த பீர்க்கங்காயானது கீல்வாதத்தினை குறைக்க சரியான தேர்வாகும்.

இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க

பீர்க்கங்காயில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

இதனால் இரத்த சிவப்பு அணுக்களின் குறைவால் ஏற்படும் அனீமியா, சோர்வு ஆகியவற்றை போக்க பீர்க்கங்காய் சிறந்த தீர்வாகும்.

சரும பராமரிப்பிற்கு

விட்டமின் ஏ உள்ள உணவுப்பொருட்களை உண்ணும்போது சருமச்சுருக்கம், சரும வறட்சி, ஆகியவை தடுக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தசைகள், தோல், இரத்தநாளங்கள் மற்றும் தசைநார்கள் ஆகியவை உருவாகத் தேவையான புரத உற்பத்திக்கு விட்டமின் ஏ அவசியமானது.

காயங்கள் விரைந்து ஆறவும், வடுதிசுக்களின் உற்பத்தியிலும் பீர்க்கங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இக்காயின் நாரினைக் கொண்டு தேய்த்துக் குளிக்கும்போது இறந்த செல்கள் வெளியேற்றப்படுகிறது.

மேலும் பருக்கள், புண்கள் ஆகியவை சருமத்தில் ஏற்படுவதையும் இக்காயின் நார் தடைசெய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெற

பீர்க்கங்காயானது அதிகளவு விட்டமின் சி-யினைக் கொண்டுள்ளது. மேலும் பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் பண்பிணையும் இக்காய் கொண்டுள்ளது. எனவே இக்காயினை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெறலாம்.

பீர்க்கங்காயினை வாங்கும் முறை

பீர்க்கங்காயினை வாங்கும்போது மேல்தோல் கெட்டியாக ஒரே சீரான அடர் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும்.

காம்பு பகுதி உறுதியாகவும், கனமாகவும், பசுமையானதாகவும் இருக்க வேண்டும்.

மேற்தோலில் வெடிப்புகள், காயங்கள் இருக்கக்கூடாது.

பீர்க்கங்காய் நீர்சத்து மிகுந்த காயாதலால் அதனை வாங்கி மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

பீர்க்கங்காயானது பொரியலாகவும், கூட்டாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சாம்பார் செய்யவும் இக்காய் பயன்படுகிறது. சட்னி, துவையல், பஜ்ஜி, சூப் தயாரிக்கவும் இக்காய் உபயோகப்படுத்துகிறது.

 

நீர்ச்சத்து, நார்ச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து நிறைந்த இயற்கையின் அற்புதக் கொடையான பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்பெறுவோம்.

-வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.