புகழ்த்துணை நாயனார் – படிக்காசு பெற்றவர்

புகழ்த்துணை நாயனார் கொடிய பஞ்சம் உண்டான போதும் இறைவனை நீங்காமல் தொடர்ந்து வழிபாடு மேற்கொண்டு, இறையருளால் பஞ்சம் நீங்கும்வரை தினமும் பொற்காசு பெற்ற வேதியர்.

இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

கும்பகோணத்திற்கு அருகே செருவிலிபுத்தூர் என்னும் திருத்தலம் ஒன்று இருந்தது. அத்தலம் அரிசிற்கரைபுத்தூர் எனவும் வழங்கப்பட்டது. அத்திருத்தலத்தின் தற்போதைய பெயர் அழகாபுத்தூர் என்பதாகும். இது கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தொலைவில் திருநறையூர் செல்லும் வழியில் உள்ளது.

அவ்வூரில் இறைவனான சிவனாருக்கு ஆலய வழிபாட்டுத் தொண்டு மேற்கொள்ளும் வழியில் புகழ்த்துணை நாயனார் என்பவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தம் மனதால் இறைவனை தியானித்து, வாயால் அர்ச்சித்து, உடலால் வழிபாடு மேற்கொள்வதை பெரும் தவப்பேறாக எண்ணி அதனை தவறாது கடைப்பித்து வந்தார்.

தினமும் சிவாலயத்திற்குச் சென்று சிவாகம விதிப்படி பூசனைகள் செய்து மனம் உருகி வழிபட்டு வந்தார்.

படிக்காசு பெறுதல்

அவ்வாறு இருக்கையில் ஒருசமயம் நீண்ட நாட்கள் மழை இல்லாமல் விளைச்சல் குறைந்து பெரும் பஞ்சம் தலைவிரித்து ஆடியது.

இதனால் மக்கள் உணவினைத் தேடி வேறு இடங்களுங்கு புலம் பெயர்ந்தனர். உணவினைத் தேடுவதிலேயே பெரும்பான்மையான நேரத்தை மக்கள் கழித்தனர். இதனால் சிவாலயத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

ஆனால் புகழ்த்துணை நாயனார் தம்முடைய சிவழிபாடு என்னும் கடமையில் இருந்து தவறவில்லை. எங்கேனும் சென்று பூவினையும் தண்ணீரையும் கொண்டு வந்து முறைப்படி சிவவழிபாட்டினை மேற்கொண்டு வந்தார்.

ஒருநாள் அவர் இறைவனின் திருமஞ்சனத்திற்காக தண்ணீரைக் குடத்தில் எடுத்துக் கொண்டு வந்தார். சிவலிங்கத்தின் மீது தண்ணீரை ஊற்றும்போது கை தவறி குடத்தினைத் தவற விட்டு விட்டார்.

இறைவனின் மீது குடம் விழுந்து விட்டதால் பதற்றமடைந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார். அப்போது இறைவனார் அவரிடம் “இந்த பஞ்ச காலம் நீங்கும்வரை தினமும் ஒரு பொற்காசினை உமக்குத் தந்தருளுவோம்” என்று அருளினார்.

மயக்கம் நீங்கி கண் விழித்ததும் இறைவனின் அருளை நினைத்து வியந்தார். இறைவனின் பீடத்தின் அருகே பொற்காசு ஒன்று இருந்தது.

இதனைப் படிக்காசு என்றும் வழங்குவர். படிக்காசு வழங்கியதால் இறைவனார் படிக்காசு நாதர் என்று அழைக்கப்பட்டார்.

‘படி’ என்பதற்கு முன்னேறிச் செல்ல வழி செய்வது, வாழ வழி செய்வது என்பது பொருளாகும்.

புகழ்த்துணையார் தமக்குக் கிடைத்த படிக்காசினைக் கொண்டு தம்முடைய வறுமையையும் மக்களின் வறுமையையும் போக்கினார். சிவாலயத்தில் முறைப்படி வழிபாடு மேற்கொள்ள தேவையானவற்றை செய்து கொண்டார்.

முறைப்படி சிவவழிபாடு மேற்கொள்வதை தவமாக எண்ணி செயல்பட்ட புகழ்த்துணையார் இறுதியில் சிவப்பேறு பெற்றார்.

பஞ்சம் காலம் நீங்கும் வரை இறையருளால் பொற்காசு கிடைக்கப் பெற்ற புகழ்த்துணை நாயனார், 63 நாயன்மார்களுள் ஒருவராக திகழும் பாக்கியம் பெற்றார்.

புகழ்த்துணை நாயனார் குருபூஜை ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

புகழ்த்துணை நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ‘புடைசூழ்ந்த புலியதன் மேல் அரவாடச் சூடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு அடியேன்’ என்று புகழ்கிறார்.