புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு

தமிழ்

திருவடியாய் குறளடிகள் கொண்டமொழி அம்மே

சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே

இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே

இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே

புவிமகிழக் கவிபடைத்த கம்பன்மொழி அம்மே

புகழேந்தி நளன்கதையைச் சொன்னமொழி அம்மே

சுவையுடந்தெள் ளறிவுதரும் சித்தர்மொழி அம்மே

தோன்றுமத உண்மையெல்லாம் செப்புமொழி அம்மே

பாரதியின் பாட்டுயர்வால் பொலிந்தமொழி அம்மே

பாவேந்தர் புத்துலகைப் படைத்தமொழி அம்மே

பாருயர நீதிசொல்லும் புதுமைமொழி அம்மே

பழமைவளம் மாறாமல் செழிக்குமொழி அம்மே

பூத்திடும்நுண் கலைகள்பல பொங்குமொழி அம்மே

புலமையுடன் அறிவியலில் சிறக்குமொழி அம்மே

வாழ்த்துமன்பு நெஞ்சங்களை ஆளுமொழி அம்மே

வையம்புகழ் செம்மொழிதான் எங்கள்மொழி அம்மே

இமயவரம்பன்

Comments

“புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு” மீது ஒரு மறுமொழி

  1. Chandhra Mouleeswaran MK

    சந்திர மௌலீஸ்வரன் ம கி,
    16 அக்டோபர் 2021-சனிக்கிழமை.
    மனமார்ந்த பாராட்டுக்கள், திரு. இமய வரம்பன்!

    முதலடி கண்களில் பட்டதும் கவிதை உங்களுடையதாகத்தான் இருக்கும் என்றெண்ணினேன்! அவ்வாறே ஆயிற்று!
    “குறவஞ்சி” எனும் இசை நாடகப் பண்ணில் எழுதுவோர் மிகவும் குறைவு எனும் நிலையில் உங்கள் வஞ்சி மிகவும் மகிழ்ச்சி தருகிறது!

    மிக்க நன்றி, வணக்கம்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.