புகைப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். புற்றுநோய் உலகின் மிகக்கொடிய நோயாகக் கருதப்படுகிறது.
புகைப்பதற்கு மூலகாரணம் புகையிலை. ஆகவேதான் ஒவ்வொரு வருடமும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் 1987-ம் ஆண்டில் இந்நாளை சிறப்பு நாளாக அறிவித்தது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை 2-வது இடத்தை வகிக்கிறது.
புகைப்பது கொடியது ஏன்?
புகைப்பது நமது உடலில் குறுகிய காலத்திலும், நீண்ட காலத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
புகைப்பதால் நம் உடலின் ரத்த அழுத்தம் உயர்வதோடு, ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடின் அளவு அதிகரித்து, நமது உடலில் உள்ள திசுக்கள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெறுவது கடினமாகிறது.
புகைப்பது புகைப்பவரையும் அவருடைய உடல்நலனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவரைச் சுற்றி இருப்பவர்களின் உடல்நலனிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
நீண்டகாலம் புகைப்பதால் உண்டாகும் விளைவுகள்
தொடர்ந்து புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட உடல்பாதிப்புகள் உண்டாகும்.
மேலும் இந்த விலையுயர்ந்த பழக்கத்தால் தொண்டை மற்றும் கண் எரிச்சல், சுவாசக்கோளாறு, மஞ்சள்நிறப் பற்கள் மற்றும் தொடர் இருமல் போன்ற பாதிப்புக்கள் பரிசாகக் கிடைக்கிறது.
புகைப்பதை நிறுத்துவதால் உண்டாகும் நன்மைகள்
புகைப்பதைக் கைவிடுவது அவ்வளவு எளிதல்ல. அதேநேரம் முயற்சி எடுத்துப் புகைப்பதைக் கைவிட்டால் அடுத்தடுத்துக் கிடைக்கும் பலன்கள் புகைப்பவருக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கக்கூடும்.
ஒருவர் புகைப்பதை நிறுத்திய நிமிடத்திலிருந்து உடல் எப்படி எல்லாம் மீட்டெடுக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
புகைப்பதை நிறுத்திய 20 நிமிடங்களில் ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் இயல்பாகும்.
8 மணி நேரத்தில் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன் மோனாக்ஸைடு உடலிலிருந்து வெளியேறும்.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்புக்குத் திரும்பும். அதனால் உடல் சக்தி முன்பைவிட மேம்பட்டிருக்கும்.
நரம்பு முனைகள் 2 நாட்களில் திரும்ப வளர ஆரம்பிக்கும். நாக்கின் சுவை மொட்டுகளும் மணங்களின் உணரும் தன்மையும் அதிகரிக்கும். அதனால் உணவின் சுவை முன்பைவிட மேம்பட்டிருக்கும்.
2 முதல் 12 வார இடைவெளியில் உடலில் மேல் தோல் மேம்படும். ரத்தவோட்டம் மேம்படும். சுவாசமும் நுரையீரல் செயல்பாடும் மேம்படும். நடை எளிதாகும்.
1 முதல் 9 மாத இடைவெளியில் இருமல், சைனஸ் இறுக்கம் தளரும்.
மூச்சிரைப்பு குறையும்.
உடல் சக்தி குறிப்பிட்டத்தக்க அளவு மேம்படும்.
நுரையீரலின் சுயசுத்தம் செய்து கொள்ளும் தன்மை மேம்படும்.
நோய்த் தொற்று ஏற்படும் தன்மை குறையும்.
ஒரு ஆண்டில் புகைப்பிடிக்கும்போது இதயக்கோளாறு ஏற்படுவதற்கு இருந்த ஆபத்து 50 சதவீதமாகக் குறையும்.
ஐந்து ஆண்டுகளில் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைப்பிடிக்காதவருக்கு உள்ள அளவுக்கே மாறிவிடும்.
வாய், தொண்டை, உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைப்பிடிப்பவரைவிட பாதியாகக் குறையும்.
பத்து ஆண்டுகளில் புகைப்பிடிக்காதவருக்கு உள்ள சராசரி ஆயுட்காலம் மீண்டும் கிடைக்கும்.
நுரையீரல் புற்றுநோயால் இறப்பதற்கு உள்ள சாத்தியம் 50 சதவீதம் குறையும்.
வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறுநீரகப்பை, சிறுநீரகம், கணையப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் குறையும்.
புற்றுநோயாக மாறும் செல்கள் இயல்பு செல்களாகப் பதிலிடப்படும்.
15 ஆண்டுகளில் இதயக்கோளாறு ஏற்படுவதற்கான ஆபத்து புகைப்பிடிக்காதவருக்கு இருப்பதைப் போலவே ஆகிவிடும்.
புகைப்பதை நிறுத்துவீர்!
சமுதாயத்தை உயர்த்துவீர்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!