மூன்று நாளுக்கு பிறகு இன்று தான் பள்ளிக்கு மொட்டை போட்டு வந்தான் ராம்குமார்.
சுந்தரம் ஆசிரியர் அவனைப் பார்த்து “என்னடா ராம்குமார்! எதற்காக மொட்டை போட்டிருக்க?” என்று கேட்டார்.
“எங்க அப்பா இறந்துட்டாரு சார்!”
“எப்படி தம்பி இறந்தார்?”
“என்னுடைய அப்பாவிற்கு புகையிலை பழக்கம் இருந்ததால் வாயில் புற்றுநோய் ஏற்பட்டு இறந்து விட்டார் சார்!”
“சரி தம்பி நீ கவலைப்படாதே! நல்லா படிச்சு குடும்பத்தை நல்லா பார்த்துக்கோ” என்று ஆறுதல் கூறினார்.
காலைப் பிரார்த்தனைக்கு மணி ஒலித்தது.
காலை பிரார்த்தனையில் அன்று சுந்தரம் ஆசிரியருக்கு ‘இன்றைய அறிவுரை’ வழங்கப்பட்டிருந்தது.
“இன்றைய அறிவுரை வழங்கும்படி தமிழாசிரியர் சுந்தரம் ஐயாவை அழைக்கிறேன்” என்று பள்ளி மாணவத் தலைவன் கூறினான்.
“இன்று நம்முடைய பள்ளி மாணவர் ராம்குமாரின் அப்பா புகையிலை பழக்கத்தால் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
புகையிலை போடும் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் ராம்குமாரின் அப்பா நிலை தான்!
ஆகவே புகையிலையை எந்த ஒரு மாணவனும் தொடக்கூடாது
என்று எச்சரித்த பிறகு ராம்குமாரின் அப்பாவிற்காக ஒரு ஐந்து நிமிடம் நினைவஞ்சலி செலுத்துவோம்” என்று கூறி முடித்தார்.
புகையிலை போடும் மாணவர்கள் நாணப்பட்டு நின்று கொண்டிருந்தார்கள். பிறகு கூட்டம் கலைந்து அனைவரும் வகுப்பறைக்குச் சென்றனர்.
சுந்தரத்திற்கு மனது உறுத்தலாகவே இருந்தது. மதியம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.
மறுநாள் காலையில் சுந்தரம் ஆசிரியர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். பள்ளிக்கு சற்று தள்ளியிருந்த அந்த கடை அடைக்கப்பட்டு இருந்தது.
அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது “நேற்று காவல் துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்து, அவரிடம் இருந்த புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்து கைது செய்து, கடையை மூடி விட்டு சென்றார்கள்” என்று கூறினார்கள்.
சுந்தரம் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனார். மாதங்கள் உருண்டோடி காலங்கள் கடந்தன.
பள்ளி வளாகத்தில் புகையிலை பொட்டலங்கள் காலப்போக்கில் இல்லாமல் போய்விட்டன. சுந்தரத்திற்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருந்தது.
‘புகையிலை இல்லா வளாகம்’ என்ற பலகையை பள்ளியின் வெளிப்புறத்தில் மாட்டினார். அன்றுடன் அவருக்கு ஆசிரியர் பணி நிறைவுற்று ஓய்வு பெறச் சென்றார்.
பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com