புடலங்காய்

புடலங்காய் நம் நாட்டில் அதிகமாகவும், பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய காய்வகைகளுள் ஒன்று. இக்காய் பார்ப்பதற்கு பாம்பு போல் தோற்றம் அளிக்கும்.

புடலங்காயின் அறிவியல் பெயர் ட்ரிகோஸன்டிஸ் குக்குமினினா என்பதாகும்.

புடலங்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகையாகும். இக்காய் கொடியில் காய்கிறது. இதனுடைய தாயகம் இந்தியா ஆகும்.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புடலங்கொடியானது வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் நன்கு செழித்து வளரும்.

இத்தாவரக் கொடியானது பந்தல் அமைத்தோ, மரங்களின் மீது படரவிட்டோ வளர்க்கப்படுகிறது.

புடலங்காய் பூ
புடலங்காய் பூ

 

புடலங்காய்கள் சுமார் 1.5 மீ நீளம்வரை வளரக் கூடியவை. பொதுவாக இக்காய் 50 செமீலிருந்து 75 செமீ நீளமுடையவையாகக் காணப்படுகின்றன.

இக்காயானது வெள்ளை கலந்த இளம் பச்சை நிறத்திலிருந்து அடர் பச்சை நிறம் வரை காணப்படுகிறது.

இக்காயினை வெட்டும்போது பச்சைநிற சதைப்பகுதியையும், பஞ்சில் பொதிந்தது போன்ற விதைகளையும் கொண்டுள்ளது. இக்காயானது அதிக அளவு தண்ணீர் சத்தினைக் கொண்டுள்ளது.

 

புடலங்காயில் உள்ள சத்துக்கள்

புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன.

மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

புடலங்காயின் மருத்துவப் பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

புடலங்காய் அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.

மேலும் நார்சத்தானது உடலானது ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க தூண்டுகிறது. மேலும் இக்காய் மலச்சிக்கலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

 

காய்ச்சலிருந்து நிவாரணம் பெற

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்காயை கசாயம் வைத்து இரவில் குடிக்க காய்ச்சல் சரியாகும். இம்முறையானது தெற்காசியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

சுவாச மண்டல சீரமைப்பிற்கு

புடலங்காயானது சுவாச பாதையில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீரமைக்க உதவுகிறது. மேலும் இக்காய் சளி அழற்சி எதிர்ப்பு பண்பினைப் பெற்றுள்ளது. எனவே இயற்கையான ஆன்டிபயாடிகாகச் செயல்படுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்பினைப் பெற்றுள்ள இக்காயினை உணவில் சேர்ப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதோடு சுவாச சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.

 

இதய நலத்திற்கு

புடலங்காயானது அதிக அளவு பொட்டாசியத்தைக் கொண்டுள்ளது. இப்பொட்டாசியமானது இதய தசைகள் மற்றும் அதன் செயல்பாட்டினை சீராக்குகிறது. இக்காய் இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படுவதை தடை செய்கிறது.

 

கேச நலத்திற்கு

அலோப்பியா என்பது உச்சந்தலையில் உள்ள கேசமானது கொத்து கொத்தாக உதிரும் நோய் ஆகும். இந்நோய் ஏற்பட்ட சில மாதங்களில் தலை முழுவதும் உள்ள கேசமானது கொட்டிவிடும்.

புடலங்காய் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர்தலை ஊக்குவிக்கிறது. மேலும் இக்காய் முடி இழப்பினால் ஏற்பட்ட இடத்தினைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது. பொடுகு தொந்தரவிலிருந்தும் இக்காய் பாதுகாப்பளிக்கிறது.

இக்காயில் உள்ள விட்டமின்கள், தாதுஉப்புகள், கரோடீனாய்டுகள் கேசம் மற்றும் சருமப் பாதுகாப்பில் அதிகம் பங்கு வகிக்கின்றன. எனவே இக்காயினை உண்டு சருமம் மற்றும் கேசத்தினைப் பராமரிக்கலாம்.

 

உடலில் உள்ள நச்சினை நீக்க

புடலங்காயில் உள்ள நீர்சத்தானது சிறுநீரின் அளவினைப் பெருக்கி உடலில் உள்ள கழிவினை நீக்க உதவுகிறது. மேலும் இக்காய் உடலின் வறட்சி மற்றும் நீரிழப்பினை தடுக்கவும் செய்கிறது. எனவே இக்காயினை உண்டு உடலில் உள்ள நச்சினை நீக்கலாம்.

 

உடலின் எடையினைக் குறைக்க

புடலங்காயானது குறைந்த அளவு எரிசக்தியுடன் அதிக அளவு நீர்சத்து மற்றும் ஊட்டச்சத்தினையும் கொண்டுள்ளது. மேலும் இக்காயினை உண்ணும்போது இதில் உள்ள நார்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இதனை உண்டு பலன் பெறலாம்.

 

மூட்டுகள் பலம் பெற

புடலங்காயில் காணப்படும் சிலிக்காவானது மூட்டுகளை பலப்படுத்துவதோடு இணைப்பு திசுக்களையும் வலுப்படுத்துகிறது. புடலங்காய் மற்றும் காரட் சாற்றினை கலந்து அருந்தி கீல்வாதத்தினால் ஏற்படும் மூட்டுவலி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

 

புடலங்காயினை வாங்கும் முறை

புடலங்காயினை வாங்கும்போது உறுதியான வெளிர் பச்சை முதல் அடர் பச்சை வரையிலான காயினை தேர்வு செய்யவும். ஈரமான மேற்புறத்தில் கீறல்கள் விழுந்த முனைகளில் சுருங்கிய புடலங்காயினை தவிர்த்து விடவும்.

புடலங்காயினை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

சத்துக்கள் நிறைந்த புடலங்காயினை பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.