புண்ணியம்!

பஞ்சாயத்து தலைவர் தங்கராஜ் வீட்டுக்கு வந்து “ஐயா!” என்று குரல் எழுப்பி அடக்கமாக நின்றார் ராமசாமி.

“என் வீடு குடிசையுங்க, வீட்டுக்குப் பின்புறம் ஒரு கழிவறை கட்டணும், அதுக்கு லோன் குடுங்க சார்!”

“அதுக்கெல்லாம் லோன் கிடைக்காது!” என்றார் தங்கராஜ்.

“என்ன சார் இது? ஒருத்தருக்கு வீடுகூட இல்லாம இருக்கலாம். ஆனா கழிவறை இல்லாம இருக்க முடியுமா? முதல்ல கழிவறை கட்ட லோன் குடுங்க!” விரக்தியாய் சொன்ன அவரது வார்த்தைகள் தங்கராஜின் மனதை ஒரு பிடி பிடித்தது.

“கொஞ்சம் இருங்க!” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று ஐம்பதாயிரம் பணம் எடுத்து வந்து அவரிடம் தந்தார்.

“இத நீங்க திரும்ப கட்ட வேண்டாம். போய் கழிவறை கட்டிக்குங்க!” அவரது வார்த்தைகளையும் பணத்தையும் கண்டு அசந்துபோய், “நீங்க மகராசனா இருக்கணும்!” என்று மனதார வாழ்த்திவிட்டு வெளியேறினார் ராமசாமி.

“என்னங்க, கோவில் கட்ட நன்கொடை தர்றதுக்கு வெச்சிருந்த பணத்த யாரோ வந்து கேட்டதும் உடனே தூக்கி குடுத்துட்டீங்களே! உங்களுக்கென்ன புத்தி, கித்தி கெட்டு போச்சா?” வார்த்தைகளை கோபமாய் உதிர்த்தபடி வெளியே வந்தாள் அவரது மனைவி.

“கோவில் கட்ட உதவி பண்ணுனா என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதைவிட பலமடங்கு புண்ணியம் ஒரு ஏழைக்கு கழிவறை கட்ட உதவினா கிடைக்கும்!”

அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவை என்பதை உணர்ந்து பதிலின்றி அடங்கிப் போனாள் அவரது மனைவி.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.