புதினா மருத்துவ பயன்கள் பல கொண்டுள்ளது. இதில் வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும்.
புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும்.
புதினா எண்ணெய் தலைவலி, வாதம் மற்றும் பிற வலிகள் போன்றவற்றிற்காக தடவுகின்ற களிம்பு, வயிற்றுக் கோளாறு மருந்துகள், இருமல் மருந்துகள், வாய் கொப்பளிக்கும் தைலம் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகின்றது.
புதினா செடி வகையைச் சார்ந்தது. செங்குத்தாக 60 செமீ வரை வளரக் கூடியவை. வாசனை நிறைந்த தாவரமாகும். புதினா இலைகள் 5 செமீ வரை நீளமானவை.
இலைக் காம்புகள் சிறியதாகவோ, காம்புகள் இல்லாமலோ இருக்கும் இலைகளின் ஓரங்கள் பற்களுடன் காணப்படும்.
புதினா பூக்கள் சிறியவை. இளஞ்சிவப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். 1500 முதல் 3000மீ வரை உயரமுள்ள மலைப் பகுதிகளில் இயற்கையாகவும், பயிர் செய்யவும் படுகின்றன.
ஈயெச்சக் கீரை, புதியன் மூலி, பொதிரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
புதினா அதன் மெந்தால் மற்றும் பெப்பர்மின்ட் எண்ணெய்க்காக பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானிலிருந்து பெறப்பட்ட ஒரு வகை புதினா தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அதிகமாகப் பயிர் செய்யப்படுகின்றது.
இதிலிருந்து ஜப்பான் புதினா எண்ணெய் அல்லது ஜப்பான் வாசனை எண்ணெய் பெறப்பட்டு நமது நாட்டு புதினா எண்ணெய்க்கு மாற்றாக உபயோகிக்கப்படுகின்றது.
மற்றொரு முக்கியமான வகை மென்தா பெப்பரிட்டா எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படுவதாகும். இது மைசூர், சென்னை போன்ற பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. இந்தச் செடியின் உலர்ந்த இலைகள் மற்றும் பூக்களின் மேற்பகுதியில் இருந்து பெப்பர்மின்ட் தயாரிக்கப்படுகின்றது.
புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன தீரும்.
புதினா எண்ணெய் 2 மிலி அளவு 1 அல்லது 1 ½ டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்று வலி அஜீரணம் குணமாகும்.
தலைவலி குணமாக புதினா எண்ணெய் வலியுள்ள பகுதியில் மேல் பூச்சாக பூச வேண்டும். இரவில் படுக்கும் போது தடவிக் கொண்டு உறங்க மிகுந்த பலன் தரும்.
புதினா இலையை நிழலில் காயவைத்து, ஒரு பிடி அளவு 1 அல்லது 1 ½ லிட்டர் நீரில் காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 50 மிலி வரை குடிக்க காய்ச்சல் குணமாகும்.