புதினா லெமன் ஜூஸ் கொளுத்தும் கோடைக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம்.
இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால் தாகத்தைத் தணிகிறது. இப்பானத்தில் உள்ள புதினா புத்துணர்ச்சி அளிக்கிறது.
எலுமிச்சையும், புதினாவும் சரியான விகிதத்தில் கலப்பதால், இப்பானம் சுவையும் மணமும் மிக்கதாக இருக்கும்.
இரண்டில் ஏதேனும் ஒன்றின் அளவு மாறுபட்டாலும் சுவையிலும், மணத்திலும் மாற்றம் தெரியும்.
இதில் புதினாவை பச்சையாகக் கலப்பதால், புதினாவின் மணம் அதிகமாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம்.
சரியான விகிதத்தில் லெமனையும் புதினாவையும் சேர்த்தால் இப்பானம் சுவையை அள்ளும்.
புதினாவை நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது நமக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு செரிமானத்தையும் அதிகரிக்கிறது. உடலுக்கு நோய் தடுப்பாற்றலையும் வழங்குகிறது.
புதினாவை தனியாக உண்ண முடியாதவர்கள் எலுமிச்சையுடன் சேர்த்து ஜூஸ் செய்து உண்ணலாம்.
சில உணவகங்களில் இதனை வெல்கம் டிரிங்ஸ் எனப்படும் வரவேற்பு பானமாகத் தருவர்.
இனி எளிய முறையில் சுவையான புதினா லெமன் ஜூஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழச் சாறு – 1/2 கப்
புதினாக் கீரை – 1 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
வெள்ளைச் சர்க்கரை – 12 ஸ்பூன்
தண்ணீர் – 5 டம்ளர்
புதினா லெமன் ஜூஸ் செய்முறை
1/2 கப் எலுமிச்சைச் சாறு தயார் செய்ய 3 நடுத்தர எலுமிச்சை பழங்கள் போதுமானது.
1 கப் புதினா கீரைக்கு, புதினா இலைகளை அடர்த்தியாகக் கொண்ட 10 புதினாக் கம்புகள் தேவைப்படும்.
மிக்ஸியில் புதினா இலைகளைச் சேர்க்கவும்.
அதனுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு, வெள்ளைச் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் மீதமுள்ள நான்கு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
சிறிதளவு பானத்தை சுவைத்துப் பார்த்து தேவையெனில் வெள்ளைச் சர்க்கரை சேர்க்கவும்.
இப்பானத்தை சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் பரிமாறவும். சுவையான புதினா லெமன் ஜூஸ் தயார்.
உடனடியாக பானத்தை உட்கொள்ள விரும்புபவர்கள், ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு
ஜூஸ் செய்ய எலுமிச்சை பழத்தை தேர்வு செய்யும் போது சாறு நிறைந்த பழத்தை தேர்வு செய்யவும்.
எலுமிச்சையின் மேல் தோல் வாடியிருந்தால் சிறிது நேரம் குளிர்ந்த தண்ணீருக்குள் பழத்தினைப் போட்டு வைத்திருந்து பின்னர் பழத்தை உள்ளங்கைகளுக்குள் தேய்த்து உருட்டி சாறு பிழியவும்.
விருப்பமுள்ளவர்கள் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி அல்லது மண்டை வெல்லம் சேர்த்து இப்பானத்தைத் தயார் செய்யலாம்.