புதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை

புதிய பிளாஸ்திரி ‍என்ற‌ அறிவியல் குறுங்கதை, மருத்துவத் துறையில் ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி விளக்குகிறது.‌

 

“கணி, வேல இருக்காப்பா?”

“சொல்லுங்கம்மா.”

“மரத்துல முருங்கை காயெல்லாம் முத்துன மாதிரி இருக்கு. அப்படியே விட்டா வீணாப் போயிடும்”

“சரிம்மா… கொஞ்ச நேரத்துல போய் பறிச்சிட்டு வரேன்.”

“பாத்துப்பா, உயரத்துல இருக்குற காயெல்லாம் பறிக்கிறேன்னு மதில் சுவர் மேல ஏறிடாத.”

“சரிம்மா நா பாத்துக்கிறேன்.”

மீண்டும், “ஜாக்கிரதையா காய்கள பறிப்பா” என்றபடி

சமையலறைக்குள் நுழைந்தார் அம்மா தேநீர் தயாரிப்பதற்காக.

சில மணித்துளிகள் ஓடின.

 

 

வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்திற்குச் சென்றார் கணிதநேசன். மதில் சுவரின் அருகில் இருந்த முருங்கை மரத்தை ஒருமுறை நோட்டம் விட்டார்.

கொத்துக் கொத்தாய் முருங்கை காய்கள் சற்று உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் நாற்காலி போட்டலும் எட்டாது.

சிறிய யோசனைக்கு பிறகு, உடனே ஒரு மரநாற்காலியை பயன்படுத்தி மதில் சுவரில் ஏறினார்.

அந்த உயரத்தில் காய்களை பறிப்பது சற்று சுலபமாகத்தான் இருந்தது. மடமடவெனெ காய்களை பறித்துப் போட்டார்.

அதற்கிடையில் அம்மாவும் அங்கு வந்துவிட்டார். “ஜாக்கிரத, கணி” என்று எச்சரித்தபடியே இருந்தார் அம்மா.

“சரிம்மா” என்றபடி காய்களை பறித்துக் கொடுத்தார். இன்னும் சில காய்கள் உயரத்தில் இருந்தன.

அவற்றை பறிக்க, பருத்த மரக்கிளையில் மெல்ல கால்வைத்து மேலும் உயரத்தில் ஏறினார். முருங்கை மரம் என்பதால் கவனமுடனே ஏறினார்.

ஒருவழியாக முருங்கை காய்களை எல்லாம் பறித்து கீழே போட்டார். அவற்றையெல்லாம் அம்மா சேகரிக்க, மெதுவாக மரத்திலிருந்து மதில் சுவற்றை அடைந்தார்.

மரத்தில் இருந்த ஏதோ ஒரு கூர்மையான செதில் அவரது இடது ஆள்காட்டி விரலை கிழித்து விட்டது. சுருக்கென வலி உண்டாக, அதை பொருத்துக் கொண்டு மதில் சுவரிலிருந்து கவனமுடன் கீழிறங்கினார்.

அடிபட்ட விரலில் இருந்து இரத்தம் வழிந்து சொட்டியது. அம்மா அதை பார்த்ததும் சற்று பதறிவிட்டார்.

“என்னப்பா ஆச்சு? இரத்தம் இப்படி ஒழுகுது.”

“ஒன்னும் இல்லம்மா, லேசான காயம் தான்” என்றபடி அம்மாவின் பதற்றத்தை தணிக்க முற்பட்டார் கணிதநேசன்.

“இதுக்குத்தான் பாத்துப்பான்னு சொன்னேன்” என்றபடி மேலும் பதற்றம் அடைந்தார் அம்மா.

“ஒன்னும் இல்லம்மா… காயம் சின்னது தான். நா கழுவிட்டு பிளாஸ்திரி (Band Aid) போட்டுக்கிறேன். நீங்க உள்ள போங்க” என்று அம்மாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

பின்னர் அடிபட்ட விரலை, பருத்திப் பஞ்சியினால் சிறிது நேரம் அழுத்தி பிடிக்க, இரத்தம் கசிவது நின்றது. பின்னர், பிளாஸ்திரி ஒன்றை எடுத்துச் சுற்றிக் கொண்டார்.

சிறிது நேரம் கழிந்தது. தான் கொண்டு வந்த தேநீரை கணிதநேசனிடம் கொடுத்தபடியே “இப்ப பரவாயில்லையா” என்றார் அம்மா.

“ஒன்னும் இல்லம்மா.”

அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

“என்னம்மா… முருங்கைக் காயெல்லாம் பக்கத்து வீட்டுகாரங்களுக்கு கொடுத்திட்டீங்களா?”

“கொடுத்திட்டேன் கணி… இன்னும் கொஞ்சம் இருக்கு, வேதி தம்பிக்கு கொடுத்திட்டு வந்துடேன்”

“ஆமாம்… நான் மறந்துட்டேன். நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க. உடனே போய்ட்டு வந்திடுரேன்”

“சரிப்பா. ஆனா கைவிரல்ல காயம் பட்டிருக்கே… வண்டியில போக முடியுமா?” என்றார் அம்மா.

“ஒன்னும் பிரச்சினை இல்லம்மா… இருந்தாலும் நான் நடந்துதான் போகப் போறேன். அரைமணிநேரத்துல போயிடலாமே. நான் டீ குடிச்சிட்டு கிளம்புறேன். நீங்க கொடுக்க வேண்டிய காய்களை மட்டும் எடுத்து வைங்க.”

காய்களை எடுத்து வைப்பதற்காக அங்கிருந்து சென்றார் அம்மா.

 

 

ஒருமணி நேரத்திற்கு பிறகு, வேதிவாசன் வீட்டை அடைந்தார் கணிதநேசன். அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் வேதிவாசன்.

“கணி, என்ன இவ்வளவு முருங்கை காய்கள்?”

“மரத்துல நிறைய இருந்துச்சு… இன்னிக்கு பறிச்சோம். அதான் உங்களுக்கு, அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க” என்று சொல்லி, கொண்டு வந்திருந்த காய்களை வேதிவாசனிடம் கொடுத்தார் கணிதநேசன்.

“நன்றி கணி”

“இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி” என்று கூறினார் கணிதநேசன்.

அப்பொழுது கணிநேசனின் கைவிரலில் இருந்த பிளாஸ்திரியை கண்டார் வேதிவாசன்.

“என்னாச்சு கணி, விரல்ல பிளாஸ்திரி.”

“காயெல்லாம் பறிச்சிட்டு இறங்கும் போது, மரத்துல இருந்த ஏதோ கூர்பகுதியில விரல கிழிச்சிக்கிட்டேன். அதான் வேதி”

“அடடா… இப்ப பரவாயில்லையா.”

“ஒன்னும் பெருசா காயம் இல்லப்பா.”

“கணி, இப்பதான் ஞாபகத்திற்கு வருது.சமீபத்துல ஒரு புதிய பிளாஸ்திரி (காயக் கட்டுத் துணி)ய சிங்கப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்காங்க. அதுப்பத்தி தெரியுமா?”

“அப்படியா? என்ன அது சொல்லுங்க வேதி.”

 

 

“ஊம்ம்.. ஆராய்ச்சியாளர்கள் என்ன பண்ணாங்கன்னா, கார்பன் நானோ இழைத்துகள,‌ டைட்டானியம் வலை மற்றும் வழக்கமா பயன்படுத்தும் பருத்தி துணியில மெல்லிய படலமா பூசிட்டாங்க. அதனால, இரத்தமும் சீக்கிரத்துல உறைஞ்சிடுமாம்.”

“ஓஓ… கார்பன் நானோ இழைத்துகளுக்கு இரத்தம் உறைய வைக்கும் பண்பும் இருக்கா?”

“ஆமாம்பா… இது ஃபைப்ரின் புரத இழைகள் உற்பத்திய அதிகரிக்கிறது. இந்த ஃபைப்ரின் புரதம் தான் இரத்தத்த உறைய வைக்குது.

அடுத்து கார்பன் நானோ இழைத்துகள்களால‌ டைட்டானியம் வலைக்கும், பருத்தி துணிக்கும் மகா நீர் வெறுப்புத் தன்மை கிடைக்குதாம்.”

“ஆஆ… வேதி, மகா நீர் வெறுப்புத் தன்மைன்னா?”

“நீர் ஒட்டாத தன்மை. தாமரை இலைல நீர் ஒட்டறது இல்லைல, அதுக்கு தான் நீர் வெறுப்பு தன்மைன்னு சொல்லுவாங்க. ஆங்கிலத்துல Super hydrophobic property –ன்னு சொல்லுவாங்க.”

“இப்ப புரியுது வேதி.”

“நல்லது கணி. மகா நீர் வெறுப்பு பண்புனால, காயத்துல இருந்து வெளிவரும் இரத்தம், கட்டு துணியில ஒட்டாது. அதனால காயத்துல இருக்கும் உறைஞ்ச இரத்தக் கட்டிகள்கூட புதிய பிளாஸ்திரி (கட்டு துணியி)ல ஒட்டறதில்லை. இதனால நன்மை இருக்கு கணி.”

“எப்படி வேதி?”

“உம்.. பொதுவா… காயம் பட்ட இடத்துல பருத்தி பஞ்ச வைச்சு அழுத்தி பிடிச்சா இரத்தம் உறைஞ்சிடும் இல்லையா?”

“ஆமாம் வேதி, என்னோட விரல்ல பட்ட காயத்தையும் பருத்தி பஞ்சால சுத்தம் செய்துட்டு தான் பிளாஸ்திரிய போட்டேன்.”

“உம்… ஆனா… ரொம்ப நேரம் பஞ்சுத் துணிய காயத்தோட ஒட்டி வைச்ச என்னவாகும்.”

“பஞ்சுத் துணி காயத்தோடு ஒட்டிக்கும். அப்புறம் பஞ்சு துணிய எடுக்கும்போது கொஞ்சம் சிரமமா தான் இருக்கும்.”

“சரியா சொன்னீங்க. இதுவே பெரிய காயமா இருந்துச்சுன்னா கொஞ்சம் கஷ்டம் தான்.

சில சமயங்கள்ல‌ பழைய கட்டு துணிய பிரிக்கும்போது துணி காயத்தோடு ஒட்டிக்கறதால, மறுபடியும் இரத்தக் கசிவு கூட ஏற்படலாம்.

ஆனா இந்த புதிய பிளாஸ்திரி அப்படியிருக்காது. காரணம், இரத்தக் கட்டியோட பிளாஸ்திரி ஒட்டாது. அதனால் சுலபமா கட்டு துணிய பிரிச்சிடலாம்.  அதனால் காயத்திலிருந்து கட்டு துணிய பிரிக்கும் போது வலியும் உண்டாகிறதில்ல.”

“நல்ல செய்திதான் வேதி.”

 

“இன்னும் ஒரு செய்தி இருக்குப்பா. இந்த புதிய கார்பன் நானோ இழைக்கட்டு துணியில நுண்ணியிர்களும் ஒட்டாதாம்.

அதனால் பாதிக்கபட்டவருக்கு வேற எந்த நோய் தொற்றும் ஏற்படாம இருக்குமாம். அதோட மனித தோல் மீது பயன்படுத்தவும் உகந்ததா இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காங்க.”

“நல்லது வேதி. இந்த புதிய பிளாஸ்திரி சீக்கிரம் பயன்பாட்டுக்கு வந்த நல்லா இருக்கும்.”

“உம்… அதுக்காக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து உழைச்சிக்கிட்டு இருக்காங்க. பார்ப்போம்.”

“சரி வேதி. நான் கிளம்புறேன். நேரமாயிடுச்சு.”

“அட… டீ  குடிச்சுட்டு போங்க.”

“இருக்கட்டும் வேதி. இப்பதான் வீட்டுல டீ குடிச்சிட்டு வந்தேன்” என்றபடி எழுந்தார் கணிதநேசன்.

“உக்காருங்க கணி” என்றபடி எழுந்து சமையலைறைக்குச் செல்ல முற்பட்டார் வேதிவாசன்.

அப்பொழுது, வேதிவாசனின் அம்மா இருவருக்கும் முருங்கை கீரை சூப் கொண்டு வந்து கொடுக்க, இருவரும் வாங்கி பருகத் தொடங்கினர்.

அப்பொழுது, கணிதநேசன் விரலில் இருந்த பிளாஸ்திரிய பார்த்தவுடன், “கணி என்னப்பா ஆச்சு? விரல்ல பிளாஸ்திரி.” என்று பதற்றத்துடன் வேதிவாசனின் அம்மா கேட்டார்.

“ஒன்னும் இல்லம்மா, சின்ன காயம் தான்.” என்று சொல்லி அம்மாவின் பதற்றத்தை தனித்தார் கணிதநேசன்.

கனிமவாசன்
சென்னை
அலைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

 

One Reply to “புதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.