புதிர்கணக்கு – 05

“நம் காட்டில் சில நாட்களுக்கு முன் நடந்த சுவையான சம்பவமே இன்றைய புதிராக நான் கூற இருப்பது” என்று மந்திரியார் கூறினார்.

“காட்டில் நடந்த சுவையான சம்பவமா? போன வாரம் நடந்த குட்டி ஆட்டின் காது குத்து நிகழ்ச்சியா? அல்லது யானையார் தந்த விருந்தா? எதைப் பற்றி புதிர் போடப் போகிறார்?” என குட்டி மான் மீனுவிடம் சின்ன நரி சீனியப்பன் கேட்டது.

“அங்கென்ன முனுமுனுப்பு” மந்திரியார் சற்று அதட்டவும். “அதெல்லாம் ஒன்றுமில்லை” சடாரென பதில் கூறியது சின்ன நரி சீனியப்பன்.

 

சரி சரி கவனமாகக் கேளுங்கள். சில நாட்களுக்கு முன் அணில் ஆகாசன் ஒரு கொய்யாத் தோப்பினுள் றுழைந்து அங்கிருந்த சில கொய்யாப்பழங்களைப் பறித்து வந்தது.

வரும் வழியில் அவனுக்கு எதிரே குரங்கு குஞ்சப்பன் வந்தான். தனக்கு பாதிப் பழங்கள் வேண்டுமென கேட்க அணில் ஆகாசன் தான் கொண்டு வந்த பழங்களை இரண்டு பங்காக வைத்து பாதியைக் கொடுத்து விட்டு தனது பங்கு பழத்தில் ஒன்றை அங்கேயே தின்று விட்டு தொடர்ந்து நடந்து வந்தது.

சிறிது தூரம் சென்ற பின் எதிரில் வந்த மைனா மாசானன் தனக்கு பாதிப் பழங்கள் வேண்டுமெனக் கேட்டது.

அப்பொழுதும் அணில் ஆகாசன் தன்னிடம் இருந்த பழங்களை இரு பங்காக்கி ஒரு பங்கை மைனா மாசானிடம் கொடுத்துவிட்டு தன் பங்குப் பழத்தில் மீண்டும் ஒன்றைத் தின்று விட்டு மீதிப் பழங்களோடு நடந்து வந்தது.

சிறிது தூரம் சென்ற பின்பு அதன் எதிரே என் தந்தையாரான நரி நாகப்பன் வந்தது. அவரும் தனக்கு பாதிப் பழங்கள் வேண்டுமெனக் கேட்க அணில் ஆகாசன்தனது கையிலிருந்த பழங்களை இரு கூறாக்கி ஒன்றை எனது தந்தையிடம் அளித்து விட்டு தனது பங்கிலிருந்து ஒரு பழத்தை தின்று விட்டு நடந்து வந்தது.

சிறிது தொலைவில் கிளியக்கா கீதம்மாவும் எதிர்பட்டாள். அவளும் தனக்கு பாதிப் பழங்கள் வேண்டுமெனக் கேட்க அணில் ஆகாசன் தன்னிடமிருந்தவற்றை இரு பங்காக்கி ஒரு பங்கை தந்து விட்டு நடந்து வந்தது.

தனது பங்கிலிருந்து ஒரு பழத்தைத் தின்று விட்டு தன் வீட்டை அடைந்த போது அவனது மனைவியிடம் மீதமிருந்த ஒரே ஒரு பழத்தை மட்டுமே தர முடிந்தது.

அப்படியானால் அணில் ஆகாசன் பறித்த மொத்தப் பழங்கள் எத்தனை? இதுதான் இன்றைய கேள்வி. ஐந்தாவது புதிருக்கான விடையுடன் நாளை உங்களைச் சந்திக்கின்றேன்.” எனக் கூறிவிட்டு அரண்மனையினுள் சென்று விட்டார் மந்திரியார் நரியார்.

 

“என்ன நாளைக்கு முதல் விடையை அணில் அன்னாச்சாமி தான் சொல்லுவான்” காட்டெருமை கனகன் தனது கனத்த குரலில் கூறியது.

“கணக்கு என்றாலே எனக்கு பயம் அதிலும் மூளைக்கு வேலை என்றால் என்னால் கண்டிப்பாக செய்ய முடியாது. நான் அழகாக கத்துவேன். அங்குமிங்கும் ஓடி விளையாடுவேன். கணக்கு கட்டுபாடெல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனாலும் அரசரின் உத்தரவை மீறமுடியுமா? அதனால்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். பதில் சொல்லவில்லை என்றாலும் சிறிது புரிந்து கொள்ளலாம் அல்லவா? அதுதான் நான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்.” என்றது அணில்.

இவ்வாறாக பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஒவ்வொரு விலங்குகளும் தனது இல்லங்களுக்குச் சென்றன.

மறுநாள் சூரியன் தனது பணியை முடித்து விட்டு மலையிடையே புகுந்து ஓய்வெடுக்கச் செல்லும் இனிய மாலைப் பொழுதில் மீண்டும் அந்த இடம் கலகலப்பானது.

சற்று முன்னதாகவே அங்கு வந்து அமர்ந்த முயல் முத்தப்பனைப் பார்த்து சின்னநரி சீனியப்பன் தனது வழக்கமான கிண்டலை ஆரம்பித்தது.

“என்ன முயல் தம்பி என்ன யோசனை. உங்கள் தாத்தா சிங்கத்தை கிணற்றில் தள்ளி விட்டது போல ஏதாவது செய்யலாம் என்ற நினைப்போமா?”

“ஐயோ சிங்கத்தை கிணற்றில் நான் தள்ளுவதா? மகாராசா எவ்வளவு பெரியவர் நானோ சிறியவன் அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மகாராசா என்னை கொன்றுவிட மாட்டாரா?” என்ற பயத்துடன் பதில் கூறியது முயல் முத்து.

“உங்க தாத்தாவிடம் இருந்த வீரம் உனக்கு இல்லையே, சுத்த கோழையாக இருக்கின்றாய். இப்படியெல்லாம் இருந்தால் இங்கு வாழ்க்கை நடத்த முடியாது ஆமாம்” என்று முயல் முத்துவுக்கு புத்தி சொன்னது சின்னநரி சீனியப்பன்.

“உன் கூட சேர்ந்து இருப்பதே மிகவும் ஆபத்தானது” என கூறிய முயல் முத்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டது.

மந்திரியார் நரியார் அரண்மனையை விட்டு வெளியேறி மைதானத்தை நோக்கி வருவதை கண்டு அனைத்து மிருகங்களும் எழுந்து நின்று “வணக்கம் மந்திரியாரே” என்று ஒரே குரலில் கூறின.

“வணக்கம் உட்காருங்க உட்காருங்க” என்று கூறிய நரி தனது வழக்கமான செயலான கேள்விக்கு விடை கேட்கும் நிகழ்ச்சியை அதே கம்பீரத்துடன் ஆரம்பித்தது.

“ஐந்தாவது புதிருக்கான விடையை தெரிந்தவர்கள் கூறலாம்” என மந்திரியார் அறிவிப்பை வெளியிட்டு கொண்டிருந்த போதே அங்கு நின்றவாறு தூங்கிக் கொண்டிருந்த கொக்கு நெட்டைக் காகனைக் கண்டது.

மந்திரியாரின் அறிவிப்பை தொடர்ந்து குட்டி எலி எலிக்கண்ணனும் பின்னர் கொண்ட சேவலின் மகன் சங்கு நிறத்தானும் விடைகளைக் கூறினர். அவர்களை தொடர்ந்து சின்ன நரி சீனியப்பனும் அதே விடையை கூறியது.

“சீனியப்பா நீ எவ்வாறு விடை கண்டு பிடித்தாய் என்று அனைவருக்கும் விளக்கமாகச் சொல்” என மந்திரியார் கேட்க சீனியப்பனோ “திரு திரு” வென திருட்ட முழி முழித்தது.அதன் முகத்தை கண்ட மந்திரியார் உண்மையை உணர்ந்து கொண்டார். ஆனாலும் சற்று கடுமையான குரலில் அதட்டலானார்.

“நீ இது போன்று ஏமாற்று வேலைகளை என்னிடம் செய்யாதே. நான் உனக்கு தகப்பன் என்பதையும் மறந்து என்னிடமே பொய் கூறத் துணிந்தாய். எனவே நாளை காலை மகாராசாவிடம் போய் மன்னிப்பு கேட்டு விட்டு அதன் பின்புதான் நீ வேறு எங்கும் செல்ல வேண்டும்.” எனக் கட்டளையிட்டது.

சின்னநரியும் மனதிற்குள் வேறு ஒரு திட்டம் தீட்டியவாறே அமைதியாக அமர்ந்தது. மந்திரியார் மீண்டும் பேசலானார்.

“இப்பொழுது இங்கு விடைகளை கூறிய எலிக்கண்ணன் குட்டி எலியும், கொண்டை சேவலின் மகன் சங்கு நிறத்தானும் சரியான விடைகளைத்தான் கூறியுள்ளார்கள். அவர்களிடம் தனித்தனியே பின்னர் விளக்கம் கேட்டு சரியாக விளக்கமளித்தால் தலா பத்து மதிப்பெண்கள் அளிக்கலாம் என நினைக்கிறேன்” என்று கூறியவுடன்

குட்டியானை நுனிக்கொம்பன் “நீங்களும் அவர்களை பின்னர் விளக்கம் கேட்டு கொள்ளுங்கள். ஆனால் மதிப்பெண்களை இப்பொழுதே அளித்து விடுங்கள்” என்று கூறியது.

“அப்படியா உங்கள் அனைவரின் விருப்பப்படியே இருவருக்கும் தலா பத்து மதிப்பெண்கள் அளிக்கிறேன். அவர்கள் கூறும் விளக்கம் ஏற்றுக் கொள்ளதவாறு இருந்தால் மதிப்பெண்கள் வாபஸ் பெறப்படும்” என்று சத்தமாக அறிவித்தது.

“அணில் ஆகாசனை வைத்து சொல்லப்பட்ட ஐந்தாவது புதிருக்கு இருவர் சரியான விடைகளை கூறினார்கள்” என்று மந்திரியார் கூறினார்.

“இருவரா? யார் யார்?” என்று கேட்டார் வெட்டுக்கிளியார். “எலிக்கண்ணனும், சங்கு நிறத்தானும் தான்” என்று மந்திரியார் பதில் கூறினார்.

“அப்படியா? சங்கு நிறத்தான் வந்து பதில் கூறலாமே” என்றார் வெட்டுக்கிளியார்.

வேசல் சங்குநிறத்தானும் பறந்து வந்து மேடையில் அமர்ந்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தது.

 

“ஐயா அன்றையக் கணக்கின்படி அணில் ஆகாசன் தான் பறித்த பழங்களை குரங்காருக்கும், மைனாவிற்கும், நரிக்கும், கிளிக்குமாக கையிலிருந்த பாதி அளவு பழங்களை கொடுத்து விட்டு அவ்வப்போது தானும் தின்றுவிட மீதம் ஒன்று வருகிறது.

கடைசியாகத் தின்றது மற்றும் மனைவிக்குக் கொடுத்தது சேர்த்து இரண்டு. எனவே கிளிக்குக் கொடுத்தது இரண்டு. அதற்கு முன் அணில் கையில் நான்கு இருந்திருக்க வேண்டும்.

நரிக்குக் கொடுக்கும் முன் அணில் தின்றது ஒன்று. அதைச் சேர்த்தால் ஐந்து. எனவே நரிக்குக் கொடுத்தது ஐந்து. அதற்கு முன் அணில் கையில் பத்து இருந்திருக்க வேண்டும்.

மைனாவுக்குக் கொடுக்கும் முன் அணில் தின்றது ஒன்று. அதைச் சேர்த்தால் பதினொன்று. எனவே மைனாவுக்குக் கொடுத்தது பதினொன்று.அதற்கு முன் அணில் கையில் இருபத்து இரண்டு இருந்திருக்க வேண்டும்.

குரங்குக்குக் கொடுக்கும் முன் அணில் தின்றது ஒன்று. அதைச் சேர்த்தால் இருபத்து மூன்று. எனவே குரங்குக் கொடுத்தது இருபத்து மூன்று. அதற்கு முன் அணில் கையில் நாற்பத்து ஆறு இருந்திருக்க வேண்டும்.

எனவே அணில் பறித்தது நாற்பத்து ஆறு கொய்ய்யாப் பழங்கள் என்று விடை கூறினேன் என‌ சேவ‌ல் சங்குநிறத்தான் சொல்லவும் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)