நரி‍ - திராட்சை

புதிர் கணக்கு – 06

“எனது மகன் சீனியப்பன்” என்று மந்திரியார் தொடங்கும் போது சடாரென எழுந்த சீனியப்பன் ஆவேசமாக கூறினான்.

“மந்திரியாரே நீங்கள் செய்வது மிகவும் தவறான செயலாகும். என்னை கிண்டல் செய்வதும், நான் புதிருக்கு விடை கூறினால் மறுப்பதும் என்று என்னை அவமானப்படுத்துவது போதாது என்று இன்று புதிருக்குள்ளும் என்னை இழுப்பது சரியல்ல”

“நீ சரியான செயலை செய்தால் என்னைவிட சந்தோசப்படுபவர்கள் யார்? ஏமாற்று வேலை செய்வதும், பிறரை ஏமாற்ற நினைத்து ஏமாறுவதும் உனது தினசரி நடவடிக்கையாயிற்று. எனவேதான் கண்டித்தேன். உனது பெயரை புதிரில் பயன்படுத்தக் கூடாது அவ்வளவுதானே. சரி நீ சென்று உனது இருக்கையில் அமர்ந்து இன்றைய புதிரை கவனமாகக் கேள்” என்று மந்திரியார் பதில் கூற சின்னநரி சீனியப்பன் தனது இருப்பிடத்தில் அமர்ந்தது. மந்திரியார் மீண்டும் தொடர்ந்தார்.

 

“ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. அது நகரத்தின் அருகில் இருக்கும் ஒரு திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று தினசரி சில திராட்சைப் பழங்களை உண்டு வந்தது.

ஆனால் ஒரு விதிமுறையை அது தனக்குத்தானே விதித்துக் கொண்டது அதாவது அதுதான் முதல் நாள் எவ்வளவு பழங்களைத் தின்றதோ அதைப்போல இரு மடங்கு பழங்களை இரண்டாவது நாள் தின்னும்.

இவ்வாறாக தொடர்ந்து 5 நாட்களில் 62 பழங்களை தின்றது என்றால் அது முதல் நாளில் தின்ற பழங்கள் எத்தனை? என்பதுதான் இன்றைய கேள்வி. இது மிகவும் சுலபமானதுதான் அனேகமாக சின்ன நரி சீனியப்பனே பதில் கூறினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை” என்று மந்திரியார் கூறி முடித்தார்.

 

 

குட்டிப் பூனை கருப்பண்ணன் “ஆமாம் ஆமாம் திராட்சை என்றாலே நரிக்குத்தானே நாவில் நீர் ஊறும். ஆகவே சீனியப்பன்தான் சரியான பதிலைக் கூறி மதிப்பெண் பெறப் போகிறார்” என்றது.

“சரி அனைவரும் சென்று நாளை மாலை விடையுடன் வாருங்கள்” எனக் கூறிவிட்டு மந்திரியார் நரியார் தனது இருக்கையை விட்டு எழுந்து அரண்மனையின் உட்புறம் சென்று விட்டார். பின்னர் கூட்டம் கலைந்தது. அரண்மனையினுள் சென்று நரியார் நேராக மன்னரின் முன் சென்று நின்றது.

“வணக்கம் மகாராசா”

“வாருங்கள் மந்திரியாரே நம் குழந்தைகள் எந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். யார் மிகவும் திறமை படைத்தவர்கள். எந்த அளவு ஆர்வம் அவர்களிடம் உள்ளது?” என அடுக்கடுக்காக பல கேள்விக் கணைகளைத் தொடுத்;தது மகாரசாவான சிங்கம்.

“மன்னா நம் குழந்தைகளில் குட்டி எலி எலிக்கண்ணனும், கொண்டைச் சேவலின் மகன் சங்குநிறத்தானும் நல்ல புத்திசாலிகளாக இருக்கின்றனர். மேலும் புதிரைக் கூறும்போது சில குழந்தைகள் சோர்வு மிகுதியால் தூங்கி விடுகின்றனர். எனவே அவர்கள் தூங்காமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும்.

“என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்” என்றது சிங்கம்
“மகாராசா ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நமது அரண்மனையிலிருந்து சூடான சுண்டல் செய்து தின்னக் கொடுத்தால் அனைவரும் நன்றாக பதில் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று மந்திரியார் கூற
“உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்” என்று சிங்கராசா அனுமதி அளித்தது. பின்னர் மந்திரி நரியார் சென்று விட்டார்.

மறுநாள் காலைப் பொழுதில் மகாராசாவின் மந்திரி சபை கூடியது. மந்திரி நரியாரின் மகன் சின்ன நரி சீனியப்பன் கண்களை கசக்கியவாறே மகாராசாவின் முன்னால் வந்து நின்றது.
“என்ன சீனியப்பா என்ன ஆயிற்று” பரிவுடன் மகாராசா கேட்டார்.

“நேற்று அவன் ஒரு தவறைச் செய்தான். அதனால் உங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று நான் கட்டளையிட்டேன். அதுதான் வந்திருக்கிறான் என நினைக்கிறேன்.” என்றது சீனியப்பனின் தந்தையான மந்திரி நரி. அதற்குள் சீனியப்பன் கண்களில் நீர் தாரை தாரையாக வந்ததுடன் ஓவெனவும் அழத் தொடங்கியது.

“அழதே சீனியப்பா அழாதே வா என் அருகில”; என அழைத்து அதன் முதுகை மெதுவாகத் தடவியபடியே தன் மடியின் மீது அமரச் செய்தது சிங்கம்.

“என்ன நடந்தது ஏன் மந்திரியார் உன் மீது கோபமாக இருக்கிறார்?” என சிங்கராசா கேட்டவுடன்

“அவருக்கு என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை. நான் இந்தக் காட்டை விட்டு வேறு எங்காவது சென்று விடுகிறேன். அப்போதுதான் அவரது மனம் மகிழ்ச்சி அடையும் போலும்” என்றது சின்ன நரி சீனியப்பன்.

“சீச்சீ அப்படியெல்லாம் சொல்லாதே. மந்திரியார் உன்மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்று எனக்கல்லவா தெரியும். நீதான் விளையாட்டு தனமாக இருக்கின்றாயே என்றுதான் அவருக்கு சற்று வருத்தம் வேறொன்றுமில்லை” என்று சீனியப்பனுக்கு சமாதானம் கூறிவிட்டு

“நீதான் எவ்வளவு நல்ல பையன் வருங்கால இக்காட்டின் மந்திரி. புத்திசாலித்தனமாக இருந்து நல்ல பெயரை எடுக்க வேண்டாமா?” என்று புத்தி கூறிவிட்டு “சரி நீ போய்வா” என்று சீனியப்பசைன் செல்லுமாறு கூறியது மகாராசா சிங்கம்.

மாலைப் பொழுது வந்தது. மளமளவென மிருகங்கள் வந்து அவரவர் இடங்களில் அமர்ந்தன. சின்ன நரி சீனியப்பனை மட்டும் காணவில்லை.

“எங்கே மந்திரி குமாரனைக் காணவில்லை” என்று காடடெருமை கனகன் கேட்டது.

“திராட்சைக் கணக்கல்லவா தின்று பார்த்தே விடை கண்டுபிடித்த பின்புதான் சீனியப்பன் வருவான் என நினைக்கிறேன்” என்று அணில் அய்யாசாமி கூற அனைவரும் சிரித்தனர்.

சிரிப்பொலி அடங்குவதற்கும் மந்திரியார் வந்து அமருவதற்கும் மிகவும் சரியாக இருந்தது. அப்பொழுதுதான் அரக்க பரக்க வந்த சீனியப்பன் தனது இருக்கையில் அமர்ந்தது. அதனைக் கண்ட மந்திரியார் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

பின்பு அனைவரையும் பார்த்து “இன்று முதல் மாலை வேளையில் இங்கு வந்து கூடும் அனைவருக்கும் நமது மன்னர் இலவசமாக சுண்டல் தருவதாகக் கூறியுள்ளார்கள். எனவே இதனைப் பயன்படுத்தி அனைவரும் இங்கு கலந்து கொள்ள வேண்டும்.” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்து

“சரி இப்பொழுது ஆறாவது புதிருக்கான விடையைத் தெரிந்தவர்கள் கூறுங்கள்” என்று அறிவித்து முடிக்கவும் யானையின் பின்னாலிருந்து ஒரு குரல் விடையைக் கூறியது.

“யாரது மறைந்திருந்து விடையைக் கூறுவது” மந்திரி நரியார் கேட்க பதிலொன்றும் வரவில்லை.

“ஙாராக இருந்தாலும் நேரில் வந்து விடையைக் கூறுங்கள்” என்று மீண்டும் அழைத்தும் பயனில்லை.

“நீங்கள் சொன்ன விடை சரியானது தான். வெட்கப்பட வேண்டாம். வெளியே வந்து அனைவருக்கும் முன்பாகக் கூறுங்கள்” என்று இறுதியாக அழைத்தபின் யானையின் பின்பு இருந்து மெல்ல மெல்ல தலையைக் குனிந்தவாறே வந்து கொண்டிருந்தது சின்ன நரி சீனியப்பன்.

அதனைக் கண்ட மந்திரியாரோ சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார். சைகை மூலமாகவே அரண்மனையிலிருந்து வந்த சுண்டலை அனைவருக்கும் தருமாறு சொன்னார் மந்திரி நரியார்.
அனைவரும் சுண்டலைத் தின்று முடிக்க மீண்டும் பேச்சை ஆரம்பித்தது நரி.

“இன்று சீனியப்பன் கூறிய பதில் மிகவும் சரியானதுதான். அவனுக்கும் பத்து மதிப்பெண்கள் அளிக்கப்படும்” என்று அறிவித்ததைக் கேட்டு சின்ன நரி சீனியப்பன் சிறிது சந்தோசமடைந்தது.

“இந்த ஆறாவது புதிரான நரி தின்ற திராட்சைப் பழங்கள் எத்தனை என்பதற்கு நரி சீனியப்பனே விடை கூறினான்” என்று மந்திரியார் கூற
“வாருங்க சீனியப்பனே வந்து விளக்கம் தாருங்கள்” என்று வெட்டுக்கிளியார் அழைத்தார்.

 

“ஐயா நரி தின்ற திராட்சைப் பழங்கள் கணக்கில் ஒரு நாள் தின்றதைப் போல இருமடங்கு மறுநாள் என்றும் மொத்தம் 62 பழங்களை 5 நாட்களில் தின்று விட்டது என்றும் கூறப்பட்டது.

எனவே முதல் நாள் 2 என்றும், இரண்டாவது நாள் 4 ஆகவும், மூன்றாவது நாள் 8 ஆகவும், நான்காவது நாள் 16 ஆகவும், ஐந்தாவது நாள் 32 ஆகவும், கணக்கிட்டு மொத்தம் 62 வரவே சரியான விடையைக் கூற முடிந்தது” என்று சின்ன நரி சீனியப்பன் கூறியது.

 

“சபாஷ் சரியான கணக்குதான். பழங்களைச் ஜோடியாகத் தின்றே விடை கூறி இருக்கலாம். ஆனால் 5 நாட்கள் ஆகியிருக்கும்” என்று வெட்டுக்கிளியார் கேலி பேசினார்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)