புதிர் கணக்கு – 08

“சரி இப்போது எட்டாவது புதிரைக் கூறப் போகிறேன்” என்று கூறிவிட்டு தொடர்ந்தார் நரியார்.

“நமது காட்டில் ஒரு சமயம் நம் மகாராசாவின் உத்தரவுப்படி விலங்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அப்போது காகம், கிளி, மைனா, குருவி ஆகிய நான்கு பறவையினங்களின் மொத்த எண்ணிக்கை நூறாக இருந்தது.

இதில் காகங்கள் குருவிகளைவிட 2 பேர் அதிகமாகவும், கிளிகள் மைனாக்களைவிட 2 பேர் அதிகமாகவும், குருவிகள் கிளிகளைவிட 2 பேர் அதிகமாகவும் என்ற எண்ணிக்கையில் இருந்தன.

அப்படியானால் ஒவ்வொரு இனத்திலும் எத்தனை பேர் இருந்தனர்? என்பதே இன்றைய கேள்வி” என்று புதிரைக் கூறிவிட்டு மிக அவசரமாக போவது போல உள்ளே சென்றார் மந்திரி நரியார்.

அரண்மனையினுள் சென்ற நரியார் அரசவையின் ஒற்றரான பருந்து பஞ்சமன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. “வணக்கம் மந்திரியாரே” என்றது பஞ்சமன்.

“வாரும் ஒற்றரே ஏதேனும் தகவல்கள் உள்ளனவா?” என்று பருந்தைப் பார்த்து மந்திரி நரியார் கேட்டது.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. தாங்கள் அவசரமாக அழைத்ததாக கழுதை காங்கேயன் கூறினான். அதுதான் வேகமாக வந்தேன்” என பதில் கூறியது பஞ்சமன்.

“வேறொருன்றுமில்லை பஞ்சமா” என்று ஆரம்பித்த மந்திரி சேவகனான காங்கேயன் நிற்பதை கண்டதும் “நீ போகலாம்” என்று கூறி கழுதையை அனுப்பிவிட்டுச் சொல்லத் தொடங்கியது.

“ஒற்றரே நமது மகாராசாவின் உத்தரவின் பேரில் நம் காட்டிலுள்ள எல்லா குழந்தைகளையும் அறிவாளியாக மாற்றுவதற்காக தினமும் மாலை வேளையில் புதிர்போட்டு அவர்கள் மறுநாள் விடை கூறி வருவதை தாங்களும் அறிந்திருப்பீர்கள் அல்லவா?” என்றது.

“ஆம் மந்திரியாரே நீங்கள் கூறும் புதிர்கள் மிகவும் கஷ்டமாக உள்ளதாக என் மகன் கூறுகின்றான். ஆனாலும் எலிக்குட்டி எலிக்கண்ணன் நன்றாக பதில் கூறி வருவதாகவும் சொன்னனான்” என்று பதில் கூறியது பருந்து பஞ்சமன்.

“ஆமாம் அதுதான் இப்பொழுது பிரச்சனையே. எலிக்கண்ணன் நன்றாக விடை கூறி பாராட்டு பெறுவதை சகித்துக் கொள்ள பலரால் இயலவில்லை. குறிப்பாக என் மகன் சீனியப்பனும், சின்னக்காளியும் சேர்ந்து எலிக்கண்ணனுக்கு எதிராக ஏதோ சதி செய்வதாக தெரிகிறது. நீர் அதை துப்பறிந்து சீனியப்பன் மற்றும் சின்னகாளியிடமிருந்து எலிக்கண்ணனை காப்பாற்ற வேண்டும்” என்று மந்திரி நரியார் கூறினார்.

“நீங்களும் சந்தேகப்படுவதும் சரிதான் மந்திரியாரே. நேற்று மாலை சின்னகாளி மெதுவாக பறந்தவாறே எலிக்கண்ணனை பின் தொடர்ந்து சென்றது. அதனைக் கண்ட நானும் சின்னக்காளியை அவனை அறியாமல் தொடர்ந்து சென்றேன். எலிக்கண்ணன் வளைக்குள் சென்ற பின்பு காக்கையை விசாரித்து மீண்டும் கையோடு கூட்டி வந்து அதன் வீட்டில் விட்டுவிட்டுத்தான் நான் சென்றேன்.” என முதல் நாள் நடந்தவற்றை மந்திரியாரிடம் விளக்கமாகக் கூறியது பஞ்சமன் பருந்து.
“நல்ல காரியம் செய்தீர் ஒற்றரே நீர் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் கண்காணித்து எனக்கும் அவ்வப்போது தகவல் கொடுங்கள்” என்று கூறிவிட்டு பருந்து பஞ்சமனை அனுப்பி வைத்தது மந்திரி நரியார்.

கூட்டத்திலிருந்து மெதுவாக நடந்து வந்த சின்னநரி சீனியப்பனை சின்னக்காளியும் மெதுவாக பின்தொடர்ந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் இருவரும் தங்களது திட்டங்களைப் பற்றி பேசலானார்கள்.

“இந்த எலிப்பயலை நீ தூக்கிக் கொண்டு போய் திரும்பி வர முடியாத இடத்துல விட்டுவிட்டு வந்து விட்டேன் காளி” என்று கேட்டது சீனியப்பன்.

“அவனைத் தூக்கிட்டு போகும்போது யாராவது பார்த்திட்டா? என்ன செய்வது?” காக்கை சின்னக்காளி பதில் கூறியது.

“ஆமாம் அப்படி ஒன்று இருக்குல்ல சும்மாவே பருந்து பஞ்சமன் நம்மள சுத்தி வருதுன்னு நேத்தே சொன்னயில்ல”

“பேசாம யானையை விட்டு மிதிக்கச் சொல்லுவோமா? நீயும் நானும் சேர்ந்து சொன்னா யானை தட்டாம செய்யும்” என்றது சின்னக்காளி.

“மாட்டேன்னு சொல்லிடும் ஏன்னா எலிக்கண்ணன் அதோட நண்பன்ல்ல, அதோட நம்ம திட்டம் தெரிஞ்சா உடனே எங்கப்பாகிட்ட சொல்லி நம்மள காட்டி கொடுத்துவிடும்.” என வருத்தத்துடன் கூறியது. பின்னர் சிறிது நேரம் இருவரும் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தன.

“சரி சரி நாளைக்கு சந்திப்போம். நேரமாயிருச்சு. எங்கப்பா வீட்டுக்கு வந்தா தேடுவாரு” என்று சின்னக்காக்கை சின்னக்காளிக்கு விடைகொடுத்து விட்டு சின்னநரி சீனியப்பன் மெதுவாக தனது வீட்டை நோக்கி நடந்தது.

எதிரில் மெதுவாக தலையை தொங்கவிட்டு கொண்டு வந்த நரியைக் கண்ட பஞ்சமன் ஒரு முடிவும் செய்ய இயலவில்லை போலும் என மனதிற்குள் நினைத்தவாறு சத்தமின்றி பறந்து சீனியப்பனைக் கடந்து சென்றது.

மறுநாள் மாலைப்பொழுது அனைத்து மிருகங்களும் வந்து அவரவர் இடங்களில் அமர்ந்தனர்.

“பூனை கருப்பண்ணன் தினம் வருகிறதா?” என்று அமைச்சர் கேட்டார்.

“தவறாது வருகிறேன் மந்திரியாரே நேற்று கூட வந்து சூடான சுண்டல் தின்றுவிட்டு தானே போனேன்” என்று பதில் கூறியது பூனை கருப்பண்ணன்.

தின்பது மட்டுமே மனதில் இருந்தால் கணக்கு எப்படி புரியும் என்று நினைத்த மந்திரி நரியார் “சரிதான் நேற்றைய எட்டாவது புதிருக்கான விடையை தெரிந்தவர்கள் கூறுங்கள்” என்று கேட்க அணில் அன்னாச்சாமி எழுந்து “ஒவ்வொன்றும் இருப்பந்தைந்து இருந்தன” என்று கூறியது.

“வேறு யாராவது விடை தெரிந்தவர்கள் இருக்கின்றார்களா?” என்று மந்திரி நரியார் கேட்டதும் வழக்கம் போல குட்டிஎலி எலிக்கண்ணன் எழுந்து தனது விடையை கூறியது. மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்.

“அணில் அன்னாசாமி கூறிய விடை மிகவும்” என்று நிறுத்தி பின்னர் “சரியானதல்ல” என்று மந்திரியார் அறிவிக்கவும், அனைத்து மிருகங்களும் அணிலைக் கேலி செய்தன.

கேலி செய்த மிருகங்களை பார்த்து யாரும் கேலி செய்யாதீர்கள். அவனாவது ஏதோ ஒரு விடையை கூற முயன்றான் அல்லவா?. ஆனால் நீங்கள் வாய்மூடி ஊமைகளாகத்தானே இருக்கின்றீர்கள். விடை தவறு என்று அடுத்த முறை வெற்றி பெற ஒரு உந்துதல்தானே. ஆகவே அணிலை அனைவரும் பாராட்ட வேண்டும் யாரும் கேலி செய்யக் கூடாது” என்று கூறியது மந்திரி நரியார்.

“எப்போதும் போல எலிக்கண்ணன் கூறிய விடை மிகவும் சரியானதுதான். இத்தோடு மொத்தம் நாற்பது மதிப்பெண்களோடு எலிக்குட்டி எலிக்கண்ணன் முதலிடத்திலும், கொண்டை சேவலின் மகன் சங்குநிறத்தான் இருபது மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்திலும், சீனியப்பன் பத்து மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.” என்று கூறிவிட்டு அமர்ந்தது.

சலசலவென பேச்சொல்லியுடன் அனைவரும் அவரவருக்குத் தரபட்ட உணவினை தின்றுவிட்டு அவரவர் இடங்களில் வந்து அமர்ந்தனர். ஆனால் சின்னநரி சீனியப்பனும், சின்னக்காக்கை சின்னக்காளியும் சற்று தாமதமாகவே வந்து அருகருகே அமர்ந்து கொண்டனர்.

அங்கு நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் சற்று கவனமாக கவனித்துவரும் மந்திரி நரியாருக்கு காகத்துடன் தன் மகனின் நட்பு தொடர்வது குறித்து பயம் ஏற்பட்டது.

“எட்டாவது புதிரையும் எலிக்கண்ணனே கூறியது” மந்திரி நரியார் கூறினார். எலி மீண்டும் ஆரம்பித்தது.

“எட்டாவது புதிரில் மொத்தமுள்ள பறவைகளில் காகம், கிளி, குருவி, மைனா ஆகியவை மொத்தம் 100 எனவும் அதில் ஒன்றுக்கொன்று அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

அதன்படி மைனாக்கள் 22 எனவும், அதைவிட 2 அதிகமான கிளி 24 எனவும், அதைவிட 2 அதிகமான குருவி 26 எனவும், அதைவிட 2 அதிகமான காக்கை 28 எனவும் மொத்தம் 100 எனக் கணக்கிட்டு விடை கூறினேன்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)