புதிர் கணக்கு -1

ஒரு காட்டில் விலங்குகள் அனைத்தும் சிங்க ராஜாவின் அரண்மனையில் கூடி புதிர் கணக்கு போட்டு தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள முடிவு செய்தன. அதன்படி ஒன்று கூடியதும் நரி புதிர் கணக்கை ஆரம்பித்தது.
“இன்று இங்கு அதோ கூட்டமாக உள்ள உங்களது பெற்றோர்களை கண்டு கொள்ளுங்கள். இவர்களில் கால்களைக் கணக்கிட்டால் நூறு என்றும், தலைகளைக் கணக்கிட்டால் முப்பத்து ஆறு என்றும் வருகிறது. எனவே இங்கே நிற்பவர்களில் இரண்டு காலுடையவர்கள் எத்தனை பேர்? நான்கு காலுடையவர்கள் எத்தனை பேர்?” இது தான் இன்றைய கேள்வி.

 

நாளை பதில் கூறுங்கள். இன்று சென்று வாருங்கள் நாளை சந்திப்போம் என்று கூறி விடை கொடுத்தது.

அனைத்து விலங்குகளும் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டு இருந்த வேளையில் எலிக்குட்டி கண்ணன்  தாவி ஓடி நரியின் காதில் ஏதோ கூறியது.

அதெல்லாம் நாளைக்கு வந்து பதில் சொல் அப்பொழுது தான் சரியா? தவறா? என்று கூறுவேன். என்று கூறிய நரியார் அரண்மனையின் உட்பக்கம் சென்று விட்டார்.

மறுநாள் மாலைப் பொழுது வந்தது. நரியார் ஆசனத்தில் அமர்ந்தவுடன் அங்குள்ள குட்டிகளில் எலியைத் தேடினார். கண்களுக்கு புலப்படாததால் எலிக்கண்ணன் வரவில்லையா? என்று கேட்டார்.

இதோ இருக்கிறேன் ஐயா என்று யானைக்குட்டியின் அருகில் இருந்து பதில் வந்தது. யானையின் அருகில் உள்ளதால் உன் உருவம் என் கண்களுக்கு தெரியவில்லை என்று கேலி கூறிவிட்டு சரி உன் பதிலைக் கூறு என்று ஆணையிட்டது.

எலியின் பதிலை கேட்ட பின்பு மற்ற மிருகங்களைப் பார்த்து உங்களில் வேறு யாருக்காவது இதற்கான விடை தெரிந்தால் கூறுங்கள் என்றது நரியார்.

அனைவருமே மௌனம் சாதித்தனர் பூனை குட்டி கருப்பண்ணன் மட்டும் தனக்குள்ளாகவே முனுமுனுத்துக் கொண்டது.

யாருக்குமே தெரியவில்லையா? பரவாயில்லை எலித்தம்பி எலிக்கண்ணன் கூறிய பதிலே மிகவும் சரியானது தான். எனவே முதல் நாளில் சரியான பதிலை கூறிய எலிக்கண்ணன் பத்து மதிப்பெண்கள் பெற்று தனது வெற்றிக் கணக்கை துவங்கியுள்ளது. எலிக்கண்ணனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நரியார் முடிக்கவும் அங்கு கைத்தட்டல் ஒலி காட்டையே அதிர வைத்தது.

நூறு கால்களை கொண்ட கூட்டத்தில் பறவைகள் எத்தனை? விலங்குகள் எத்தனை? என்ற கேள்விக்கு சரியான பதிலைக் கூறியவர் எலிக்குட்டி எலிக்கண்ணன் என்றார்.
வாருங்கள் எலிக்கண்ணன் அவர்களே இங்கு வாருங்கள் என்று வெட்டுக்கிளியார் அழைத்தார்.

எலியார் வெட்கத்துடன் எழுந்து அங்கு வந்து நின்றதும் வெட்டுக்கிளியார் கேட்டார். “நீங்கள் எப்படி அந்த விடையை கண்டு பிடித்தீர்கள்?”.

 

அதற்கு எலி “ஐயா, அங்கு கூட்டமாக இருந்தவர்களில் இரு காலுடைய பறவைகளும் நான்கு காலுடைய விலங்குகளுமாக கலந்து நின்று இருந்தனர். ந‌ரியார் மொத்த கால்களின் எண்ணிக்கை 100 என்றதும், நான் மொத்த கால்களில் தோராயமாக‌ இரண்டில் ஒரு பங்காக பறவைகளின் கால்களாக இருக்க வேண்டுமென எண்ணினேன். அதற்கேற்ப 22 பறவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு 44 கால்கள் பறவைகள் உடையது என்றும், மீதமுள்ள 56 கால்களை விலங்களுடையது என்றும் கணக்கிட்டு 14 விலங்குள் என்றும், ஆக மொத்தம் 36 தலைகளுக்கு 22 பறவைகள், 14 விலங்குகள்” என்று பதில் கூறினேன்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)