புதிர் கணக்கு போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இன்றைய புதிரை கூறுகிறேன்; அனைவரும் விடை கூற முயற்சி செய்யுங்கள், என்றார் மந்திரி
“நம் காட்டில் வாழ்ந்த குரங்கு ஒன்று சற்று தூரத்தில் இருந்த ஒரு கொய்யா தோப்பினுள் நிறைய பழுத்த கொய்யா பழங்களை கண்டது. உடனே அவற்றை தின்ன வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ஆனால் அங்கேயே வைத்து தின்னும் போது காவல்காரன் பார்த்தால் அடித்து நொறுக்கி விடுவானே என்ற பயமும் எழுந்தது. எனவே குரங்கு வேலியை தாண்டி உள்ளே சென்றது. சிறு தூரத்தில் ஒரு நீர் நிரம்பிய குட்டை வந்தது. அதையும் தாண்டி சென்றது குரங்கு. வழியில் ஒரு வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சற்று அகலமான வாய்க்காலாக இருந்ததால் அதையும் தாண்டிச் சென்றது. அதன் பின் மரங்களில் ஏறி நல்ல பழுத்த பழங்களை பறித்து வைத்துக் கொண்டிருக்கும் போதே காவல்காரன் இதை கவனித்து விட்டான். அவனை கையில் கம்புடன் வருவதை கண்ட குரங்கார் பறித்தது போதும் என்று நினைத்தவாறு திரும்ப ஓடலானது. போனால் போகட்டும் என்று வேகமாக ஓடி வந்த குரங்கின் முன்பாக நீர் நிரம்பிய குட்டை வந்தது. குரங்கார் அதையும் தாண்டி ஓட நினைத்து குட்டையை தாண்டும் போது அதிலும் இருந்ததில் பாதிப் பழங்கள் விழுந்து விட்டன. போனால் போகட்டும் என்று விட்டு விட்டு தப்பியோடி வேலியை கடந்து அங்கு பாதியை தவறவிட்டு அதன்பின் உயரமான தென்னை மரத்தில் ஏறிக் கொண்டு பார்த்தால் அதன் கைகளில் இரண்டு கொய்யாப் பழங்கள் மட்டுமே இருந்தன. அப்படியானால் குரங்கார் பறித்த மொத்த பழங்கள் எத்தனை? இது தான் இன்றைய புதிர். நாளை அனைவருமே விடை கூறுமளவுக்கு சிந்தித்து வாருங்கள்” என்று கூறிவிட்டு மந்திரி நரியார் எழுந்து அரண்மனையின் நுழைவாயில் வரை சென்று மீண்டும் சடாரென திரும்பி சீனியப்பா! “ என்று அழைத்தது. |
“சீனியப்பன் நீங்கள் எழுந்து நடக்கத் தொடங்கியதுமே வேகமாக ஓடிவிட்டதே!” என்று பதில் கூறியது யானை.
“ஓடிவிட்டானா!” என்று கேட்டுவிட்டு அரண்மனையினுள் சென்று விட்டார் மந்திரியார்.
வேகமாக ஓடிய சின்ன நரி சீனியப்பன் அரண்மனை வாசலை கடந்து சற்று தூரம் தள்ளி குட்டி எலி எலிக்கண்ணன் தினசரி வரும் வழியில் இருந்த ஆலமரத்தை அடைந்தது.
“சின்னக்காளி சின்னக்காளி” என்று மரத்தின் கீழிருந்து குரல் கொடுத்த உடன் மரத்தின் மீது தனது கூட்டில் மறைந்திருந்த காக்கை சின்னக்காளி வெளியே தலையை நீட்டி யார் என்று பார்த்து விட்டு வெளியே வந்தது.
“நம்ம திட்டப்படி நீ இன்னைக்கே அந்த எலிப்பயலை தூக்கிட்டு போயி எங்காவது போட்டுட்டு வந்துரு. மீதிய நான் பார்த்துக்கிறேன்” என்று சின்ன நரி சீனியப்பன் கூற
“சரி சரி மெதுவா பேசு யாராவது கேட்டுற போறாங்க” என்று கூறிய காக்கை சின்னக்காளி “ அந்தப்பய இந்த வழியாத்தானே வரணும் வரட்டும்” என்றது.
காக்கை சின்னக்காளி மரத்தின் மேலே இலைகள் அடர்ந்த ஒரு கிளையில் மறைவாக அமர்ந்து கொண்டது. சின்ன நரி சீனியப்பனோ சற்று தள்ளி ஒரு செடியின் மறைவில் அமர்ந்து இருந்தது. இருவரும் எலிக்கண்ணனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
தினமும் பாடிக்கொண்டே வரும் குட்டி எலி எலிக்கண்ணன் அன்றும் பாடிக் கொண்டே வந்தது. ஆலமரத்தின் அருகில் வந்ததும் சிறிது தூரத்தில் வெள்ளையாக தெரிந்த ஒன்றைக் கண்டது.
அது என்னவாயிருக்கம் என்ற ஆவல் மேலிட அதனருகில் சென்று பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் யாரோ ஒருவரால் தூக்கிச் செல்வதை உணர முடிந்தது.
புதிரின் மறைவிலிருந்து வந்த சின்ன நரி சீனியப்பன் மிகவும் சந்தோசமடைந்து “எலிப்பய நான் கொண்டு வந்த வெள்ளை பணியாரத்த பார்த்து ஒரு நிமிசம் மதி மயங்கிட்டான் அத பயன்படுத்தி சின்னக்காளி தூக்கிட்டு போயிட்டான். இந்நேரம் அவன் எங்கேயாவது வீசி கொன்னு போட்டுறுப்பான் சின்னகாளி” என தனக்குள் கூறிக் கொண்டது.
அந்த மரத்தடியிலேயே அமர்ந்து சின்ன காளியின் வரவினை எதிர்நோக்கி காத்திருந்தது அந்த சின்ன நரி சீனியப்பன்.
எலியை தூக்கிக் கொண்டு பறந்த காகம் சின்னக்காளி சற்று தள்ளி இருந்த தாமரை தடாகத்தை நோக்கிச் சென்றது. தடாகத்தின் நேர் மேலே வந்த போது தனது கையில் சிக்கித் தவித்த எலிக்கண்ணனை தண்ணீரில் விழுமாறு போட்டு விட்டு விருட்டென பறந்து சென்று மறைந்து விட்டது.
வேகமாக பறந்து வந்த சின்னக்காளி ஆலமரத்தின் அடியில் காத்துக் கொண்டிருந்த சீனியப்பனிடம் நடத்ததை கூற சீனியப்பன் மிகவும் சந்தோசமடைந்தது.
“இன்னோடு நமது எதிரி ஒழிந்தான்” என்று கூறிவிட்டு “நாளைக்கு பார்ப்போம்” என்று விடை பெற்று ஆடிக் கொண்டே கிளம்பியது.
குளத்தில் எறியப்பட்ட குட்டி எலி எலிக்கண்ணன் தத்தளித்துக் கொண்டும் தடுமாறிக் கொண்டு உதவி உதவி” என்று கத்திக் கொண்டும் இருந்தது. வாயை திறந்தது கத்தியதால் தடாக நீரும் வாயினுள் சென்றது.
கரையோரம் வாழ்ந்த தவளை தங்கப்பன் எலியாரின் துயரத்தை புரிந்து கொண்டு தண்ணீரில் இறங்கி அதனை காப்பாற்ற நினைத்தது. உடனே “படக்கென தண்ணீரில் குதித்து நீந்தியவாறே எலிக்கண்ணனை நெருங்க எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து பஞ்சமன் “டபக்” கென எலிக்கண்ணனை தனது கால்களால் தூக்கி எடுத்து வந்து கரையில் போட்டது. வியப்பு மேலிட்ட தவளை தங்கப்பன் வேகமாக கரையை அடைந்தது.
“என்ன எலியாரே தண்ணீரிலா விளையாடுவது” உமக்குத்தான் நீந்தத் தெரியாதே! பிறக ஏன் தண்ணீரில் குதித்தீரோ! என்று தவளை தங்கப்பன் எலியைக் கேட்டது.
“யாரோ என்னை தூக்கிக் கொண்டு வந்து தண்ணீரில் போட்டு விட்டு போய்விட்டனர்” என நடுங்கிக் கொண்டே பதில் கூறியது எலிக்கண்ணன்.
“ஐயா தவளை தங்கப்பரே உம்மால் ஏதாவது முதலுதவி செய்ய முடியுமா என்று பாரும்; பாவம் நமது எலிக்கண்ணன்” என்று பருந்து பஞ்சமன் கேட்டது.
தனது குடிசையினுள் ஓடிய தவளை பைகளில் நிறைய துணிகளை கொண்டு வந்து எலியாரிடம் தந்து “ நன்றாக உடலைத் துடைத்துக் கொள்” என்று கூறிவிட்டு மீண்டும் குடிசையினுள் சென்று விட்டது.
சற்று நேரம் கழித்து ஒரு குவளை நிறைய சூடான பால் எடுத்துக் கொண்டு வந்து எலியாரிடம் கொடுத்து “இதை அருந்தும் உடலில் உண்டாகும் நடுக்கம் குறையும்” என்றது.
நன்றாக உடலை துடைத்து தவளையார் கொடுத்த பாலை அருந்திய எலியண்ணனுக்கு சற்று தெம்பாக இருந்தது.
“சரி இப்போ உன் வளைக்குப் போக ரொம்ப தூரம் போகணும் நீ நடந்தே வருகிறாயா? அல்லது என் மீது ஏறிக் கொண்டு என்னுடன் வருகின்றாயா? என்று எலிக் கண்ணனிடம் பருந்து கேட்டது.
ஐயா, நான் நடந்து போனால் மறுபடியும் யாராவது என்ன தூக்கி எதுலயாவது போட்டு கொன்று விடுவார்கள். பயமாக இருக்கின்றது” என்று கூறிய எலிக்கண்ணன் தொடர்ந்து கூறியது.
எனக்கு ரெண்டு நாளாகவே பயம்தான். யாரோ என்னை பின் தொடர்ந்து வர்ற மாதிரியே இருந்தது. நேத்து கூட யானையின் வீட்டிற்கு சென்றுவிட்டு யானையை துணைக்கு கூட்டிக் கொண்டு தான் வீடு வந்து சேர்ந்தேன்.
இன்னைக்கு கடவுள் அருளாலே நீங்களும் தங்கப்பனும் காப்பாத்திட்டீங்க? இதெல்லாம் ஏன்னு எனக்கு புரியல்ல. நான் யாருக்காது கெடுதல் செஞ்சிருக்கேனான்னும் தெரியல்ல. இத இப்படியே விட்டுட்டா நாளைக்கு என்ன வேணுமின்னாலும் நடக்கும். அதனால ……? என்று சற்று இடைவெளி விட்டது.
“அதனால் என்ன செய்யலாமுன்னு நெனைக்கிற” என்று பஞ்சமன் பருந்து கேட்டது.
“ஐயா அதனால தான் என்னைய தயவு செய்து நம்ம மகராசா கிட்ட கூட்டிட்டு போங்க. நான் அவருகிட்ட நடந்ததை சொல்லி எனக்கு பாதுகாப்பு கேட்கணும். ஞாயமா எல்லோரையுதட சமமா நெனச்சி ஆளுற நம்ம சிங்க ராசா இருக்கும் போதே இப்படி நடந்தா இதுக்கு எப்படி முடிவு கட்டுறது” என்று கூறிவிட்டு எலிக்கண்ணன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது.
“நல்ல புத்திசாலியா இருக்கானே யாரோ ஒருத்தரு தீங்கு செஞ்சா பதிலுக்கு செய்யணும்னு நெனைக்காம மகராசா கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்கணுமின்னு நெனக்கிறானே ரொம்ப நல்ல பயப்பா நீ” என்று தவளை தங்கப்பன் எலிக்கண்ணனை பாராட்டியது.
“ சரி என் முதுகிலே ஏறிக்கோ நேராக அரண்மனைக்கே போவோம்” என்று கூறிவிட்டு எலிக்கண்ணனை கீழே இறக்கி விட்டு பருந்து பஞ்சமன் சரி வா போகலாம் என்று எலி கண்ணனையும் அழைத்துக் கொண்டு நேராக மந்திரியின் அறைக்குச் சென்றனர்.
பஞ்சமனையும் எலிக்கண்ணனையும் கண்ட மந்திரியார் என்ன நடத்தது என்று பஞ்சமனை பார்த்துக் கேட்டது.
“யாரோ இவனை தூக்கிட்டுப் போயி தாமரை தடாகத்துல வீசிட்டு போய்ட்டாங்க. தற்செயலா போன நா இவனை காப்பாத்தி தவளை தங்கப்பன் கிட்ட சொல்லி முதலுதவியெல்லாம் செஞ்சு விட்டேன் இவன் மகாராசாவப் பார்த்து இத சொல்லணும்னு சொல்லுகிறான்” என்று சுருக்கமாக கூறியது பஞ்சமன் பருந்து.
இதை கேட்ட மந்திரியார் “அப்படியா சங்கதி” என்று கூறிவிட்டு தனது சேவகன் கழுதை காங்கேயனை அழைத்து “காங்கேயா இவனுக்கு திங்க ஏதாவது குடு என்னுடைய அறையிலே இவன் இருக்கட்டும் நான் போயி மகாராசா இருக்கரான்னு பாத்துட்டு வாரேன்” என்று காங்கேயனிடம் கூறிவிட்டு.
“ நீரும் வாரும் பஞ்சமரே” என்று பருந்தையும் அழைத்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றனர்.
கழுதை காங்கேயன் அரண்மனையினுள் சென்று அப்போதுதான் செய்து கொண்டிலுந்த சூடான பலகாரங்களை எடுத்து வந்து எலிக்கண்ணனின் முன் வைத்து “தின்று கொண்டிரு, மந்திரியார் வரட்டும்” என்று கூறிவிட்டு வாசலில் நின்று கொண்டது.
அரசரின் அறையை நோக்கிச் சென்ற மந்திரி நரியாரும் ஒற்றர் தலைவனான பஞ்சமன் பருந்தும் “வணக்கம் மகாராசா” என்று ஒரே குரலில் வணக்கம் தெரிவித்தன.
“வாருங்கள் மந்திரியாரே! வாருங்கள் ஒற்றர் தலைவரே?” என்று அழைத்து விட்டு “என்ன விஷயம் இருவரும் சேர்ந்து வந்திருப்பதை பார்த்தால் ஏதோ முக்கியமான விஷயம் என்று நினைக்கின்றேன்”என்றது.
“ஆமாம் அரசே மிகவும் முக்கியமான விஷயம் தான்” என்று மந்திரியார் பதில் கூறியது.
“என்ன விஷயம் விளக்கமாக சொல்லுங்கள்” என்றது மகாராசாவன சிங்கம்.
“வேறொன்றுமில்லை தாங்கள் கட்டளை இட்ட படியே நம் காட்டிலுள்ள எல்லா குழந்தைகளுக்கும் புதிர் போட்டி நடத்துகின்றேன் அல்லவா? அதில் இப்போது பொறாமை போட்டி நடந்து அந்த பொறாமை போட்டியால் எலிக் கண்ணன் பரிசும் பெற்றிருக்கிறது” என்றது மந்திரி நரி.
“என்னது பொறாமை போட்டியா? அதிலும் பரிசா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது சிங்கம்.
ஆமாம் புதிர் போட்டி இப்போது பொறாமை போட்டியாக மாறியுள்ளது. குட்டி எலி எலிக்கண்ணன் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு நல்ல முறையில் பதில் கூறி அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதை கண்ட என் மகன் சீனியப்பனும் காக்கை காளியின் மகன் சின்ன காளியும் எலிக்கண்ணனின் மீது பொறாமை கொண்டு அவனை பழிவாங்க திட்டம் போட்டனர்” என்று மந்திரி நரியார் சொல்லிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்ட பஞ்சமன் பருந்து “மீதியை நான் கூறுகின்றேன்” என்று கூறிவிட்டு தொடர்ந்தது.
“சீனியப்பனும் சின்னக்காளியும் சேர்த்து அலைவது கண்ட மந்திரியார் தனது மதியூகத்தால் ஏதோ சதி நடக்கிறது என்று புரிந்து கொண்டார். உடனே என்னை அழைத்து அவர்கள் இருவரையும் கண்காணிக்கச் சொன்னார்.
நானும் அவர்களின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணித்தேன். ஒரு நாள் சின்னக்காளி எலிக் கண்ணனை தொடர்ந்து சென்று கொண்டிருந்ததை கண்டு நானும் பின் தொடர்ந்து சென்றேன்” என்று தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டது.
“பிறகு என்னவாயிற்று” மகாராசாவான சிங்கம் பரபரப்பாக கேட்டது.
“எலிக்கண்ணன் தன் வளைக்குள் சென்றுவிட்டதால் அன்று அது தப்பிவிட்டது. வெளியே அதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த காக்கை சின்னகாளியை நானே கையோடு அழைத்துக் கொண்டு வந்து அதன் வீட்டில் விட்ட பின்பு தான் சென்றேன்” என்று பஞ்சமன் பருந்து கூறியது.
நரியார் மீண்டும் தொடர்ந்தார். “பிறகு இரண்டு நாட்களாக அந்த இரண்டு பயல்களும் சேர்ந்தே அலைந்தார்கள். அவ்வப்போது “குசு குசு” வென பேசிக் கொண்டனர். இதையெல்லாம் நான் சற்று கவனமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.
நேற்று மாலை வகுப்பிற்கு சின்னக்காளி மட்டும் வரவில்லை. நான் சீனியப்பனை உன் நண்பன் எங்கே? என்று கேட்டேன். அவனது மழுப்பலான பதில் எனக்கு மேலும் சந்தேகத்தை உண்டாக்கியது. வகுப்பு முடிந்தஉடன் அவனும் வேகமாக எங்கோ ஓடிவிட்டான்” நரியார் முடித்தார்.
“ பிறகு என்ன ஆச்சு? ஓடிப்போன சீனியப்பன் என்ன செய்தான்” மகாராசா சிங்கம் ஆவலுடன் கேட்டது.
“மீதிக்கதையை நேரில் பார்த்த நான் கூறுகிறேன் என்று பஞ்சமன் பருந்து தொடர்ந்தது” வேகமாகச் சென்ற சீனியப்பன் நேராக தன் நண்பனான காக்கை சின்னக்காளி வசிக்கும் ஆலமரத்தை அடைந்தது. அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சின்னக்காளிக்கு எலிக்கண்ணன் வருவதை கூறிவிட்டு சீனியப்பன் அருகிலிருந்த புதரில் மறைந்து கொண்டான்.
பின்னர் எப்போதும் போல அவ்வழியே வந்த எலிக்கண்ணனை அவனையறியாமல் “லபக்” கென தூக்கிக் கொண்டு வேகமாக பறந்த சின்னக்காளி எலிக்கண்ணனை ஒதுக்குப்புறமாக இருந்த தாமரைக்குளத்தின் நடுவில் வீசிவிட்டு பறந்து சென்றுவிட்டது”
ஐயோ எலிக்கண்ணன் என்ன ஆனான்? என்று கேட்டது சிங்க மகாராசா.
பிறகு சற்று இடைவெளி விட்டு பறந்து சென்ற நான் எலிக்கண்ணனை காப்பாற்றி அருகில் இருந்த தவளை தங்கப்பினடம் சொல்லி முதலுதவி செய்து சிறிது நேரங்கழித்து நானே எலிக்கண்ணனை எனது முதுகில் ஏற்றிக் கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன்” என்று கூறி முடித்தது பஞ்சமன் பருந்து.
“நல்ல வேளை எலிக்கண்ணன் தப்பித்தான்” என்று மனதை தேற்றிக் கொண்டது மகா ராசாவான சிங்கம்.
“இதற்கெல்லாம் காரணமாக அந்த ரெண்டு பயல்களையும் சும்மா விடக்கூடாது மன்னரே” என்று மந்திரி நரியார் கூறினார்.
“அவங்கள என்ன செய்ய” என்று இயலாமையுடன் கேட்ட சிங்கத்தை பார்த்து,
“மகாராசா நம்ம காட்டுலதான் உங்க ஆட்சியில்தான் எல்லா மிருகங்களும் ஒத்துமையா இருக்காங்க. அதே மாதிரி எல்லோரும் நல்லவங்களாகவும் இருக்காங்க. ஆனா இந்த ரெண்டு பயல்களும் சேர்த்து முத முதலா ஒரு தப்பு பண்ணிட்டாங்க. இத இப்படியே விட்டா காடே கெட்டுக் போயிடும். அப்புறம் நாடு மாதிரி ஆயிடும். அதனால இவங்க ரெண்டு பேரையும் எதாவது செஞ்சி அவங்களா திருந்துற மாதிரி செய்யணும்” என்று மந்திரியார் கூறினார்.
“ஒன்று உங்க மகன் ரெண்டாவது சின்னக்காளியோ சிறுபையன் அவங்களப்போயி” என்று இழுத்தது பஞ்சமன் பருந்து.
“சிறு வயதிலேயே திருந்தவில்லை என்றால் அது பெரும் விபரீதத்துலதான் முடியும். அதனால் தான் இப்பவே இவங்கள நாம ஏதாவது ஒரு வழியில தண்டனை கொடுத்து திருந்துறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்” என்றது மந்திரி நரி.
“சரி உம்ம திட்டம் தான் என்ன அத முதல்ல சொல்லும்” மகாராசா சிங்கம் கேட்டது.
“அந்த ரெண்டு பேரையும் ஒரு வாரம் மட்டும் நாட்டுப்பக்கம் போகவேண்டும் என்றும் காட்டுப் பக்கம் ஒரு வாரம் கழிச்சிதான் வரணும் என்றும் நீங்க தண்டனை கொடுக்கணும் மகாராசா” என்று தனது திட்டத்தை கூறியது மந்திரி நரி.
“என்னது ஒரு வாரம் நாட்டு பக்கமா காக்கை சின்னக்காளிக்கு பரவாயில்லை ஒரு இடைஞ்சலும் வராது. ஆனா உங்க மகன் சீனியப்பனை கண்டாலே மனிதர்கள் அடிச்சே கொன்று போடுவாங்களே!” என்று தனது கருத்தை சிங்கம் கூறியதுடன் தொடர்ந்து.
‘வேனமின்னா ஒரு ரெண்டுநாள் மட்டும் நீங்க இந்த தண்டனையை அவங்க ரெண்டு பேருக்கும் கொடுங்க. ஆனா அந்த ரெண்டு நாளைக்கும் புதிர் போட்டி எதுவும் நடத்தக்கூடாது ஏன்னா அவங்களுக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்கனும் அதான்” என்றது.
“அப்படியா” என்று ஒரு கணம் சிந்தித்த மந்திரியார் “சரி மகாராசா உங்க உத்தரவு படியே செய்வோம்” என்றார்.
“மந்திரியாரே இப்ப நடந்தது என்னவோ புதிர் போட்டியால பொறாமை உண்டாகி அதனால் வந்ததுதானே? இவங்க திருந்திட்டாலும் வேறொருவன் இது மாதிரி பொறாமைபட்டா என்ன செய்யிறது.
எல்லாரும் அறிவாளியாகவும் வரனும் ஆனா பொறாமை நோயும் இவங்களுக்கு பரவக்கூடாது அதுக்கு ஒரு வழி சொல்லும்” என்று மந்திரி நரியை கேட்டது மகாராசாவான சிங்கம்.
‘போட்டியை ஒரே நாளில் நடத்தி முடித்துவிட்டா பொறாமை நோய் வராது மகாராசா” பஞ்சமன் பருந்து கூறியது.
“இதுவும் நல்ல யோசனையா இருக்கே, சரிதான் மந்திரியாரே இனிமே போட்டியை ஒரே நாள்ல நடத்தி முடிச்சிருங்க அங்கேயே யோசிச்சு சொல்ற கேட்டிக்காரப்பய பரிசை வாங்கட்டுமே” என்று சிங்கம் கூற.
“உத்தரவு மகாராசா அப்படியே செய்வோம்” என்று கூறிவிட்டு “போய் வருகிறேன்” என்று விடைபெற்றது.
“நானும் போய் வருகிறேன் மகாராசா!” என்று பஞ்சமன் பருந்தும் மன்னரிடம் விடை பெற்றது.
இருவருமாக பேசிக்கொண்ட மந்திரியின் அறைக்கு வந்து அங்கு இருந்த எலிக் கண்ணனை பார்த்து “எலிக்கண்ணா உன் பிரச்சனையை மகாராசாகிட்ட விளக்கமா சொல்லிட்டோம். இனிமே இது மாதிரி நடக்காம நாங்க பாத்துக்கிறோம். மேலும் உன்ன இந்த நிலமைக்கு ஆளாக்கினவங்கள நிச்சயம் நம்ம அரசர் தண்டடிப்பார்; நீ நம்பிக்கையுடன் போய் வா!” என்று கூறி அனுப்பிவைத்தது.
வெளியே செல்ல பயந்த எலிக்கண்ணனின் தயக்கத்தை புரிந்து கொண்ட பஞ்சமன் பருந்து,
“இனி பயப்பட தேவையில்லை உன்னை பின் தொடர்ந்து உனக்கு தீங்கு செய்தவர்கள் யாரென்று எங்களுக்கு தெரியும் அப்படியும் உனக்கு வெளியே செல்ல பயமிருந்தால் இன்று மாலை வரை இங்கேயே இருந்து விட்டு புதிர் போட்டியிலும் கலந்து கொண்டு அதன்பின் உன்னுடைய வீட்டுக்குப் போகலாமே!” என்றது.
“ஆமாம், அதுவும் சரிதான். இன்று மாலை வரை இங்கேயே இரு இப்படியே போட்டிக்கு வா” என்று மந்திரியாரும் கூறினார்.
“சரி ஐயா” என்ற எலிக்கண்ணன் அங்கேயே தங்கிவிட்டது.
மாலைப் பொழுது வந்தது. எல்லா மிருகங்களும் வந்து அவரவர் இடங்களில் அமர்ந்தனர். சீனியப்பனும் சின்னக்காளியும் வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர்.
மந்திரியார் அரண்மனையிலிருந்து வந்தார். அவரது ஆசனத்தில் அமர்ந்த பின்புதான் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த எலிக்கண்ணனை அனைவரும் கண்டனர்.
“என்ன எலிக்கண்ணா மந்திரியோடு வருகின்றாய்” யானையார் கேட்டது.
“கேள்விக்கு பதில் கேட்க போயிருப்பான்” ஆந்தை கூறியது.
“சீச்சி அதெல்லாம் ஒன்றுமில்லை மந்திரியார் என்னை கூப்பிட்டு அனுப்பினார். அதுதான் சென்று வந்தேன்!” என்று சமாளித்தது எலிக் கண்ணன்.
எலிக்கண்ணனை கண்டு திகைத்து நின்ற சீனியப்பனையும் அவனது நண்பனையும் மந்திரியார் கவனிக்கத் தவறவில்லை.
மந்திரி எழுந்தார். “இன்று முதலில் விடைகளை தெரிந்தவர் கூறுங்கள் அதன்பின் ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை மன்னர் அறிவித்துள்ளார். அதை நான் கூறுவேன் அதன் பிறகே அனைவருக்கும் சிற்றுண்டி தரப்படும்” என்றார்.
பல இன்னல்களுக்கு ஆளான எலிக்கண்ணன் இன்று பதில் கூற எழுந்திருக்கவில்லை. ஆனால் முதன் முதலாக அணில் அண்ணாச்சாமி எழுந்து விடையை கூறியது.
“வேறு யாராவது தெரிந்தவர்கள் இருக்கின்றீர்களா?” என்று மந்திரியார் கேட்டார் யாரும் எழவில்லையாதலால் மீண்டும் மந்திரியார் எழுந்து பேசத் தொடங்கினார்.
“குழந்தைகளே நமது அரசர் இந்த புதுமையான நிகழ்ச்சிகளை நடத்துவதே நீங்கள் புத்திசாலிகளாக வளரவேண்டும் அதன் மூலம் நம் காட்டில் ஒற்றுமை ஓங்க வேண்டும் அமைதி நிலவ வேண்டும் என்பதே.”
“ஆனால் இந்த போட்டியில் மிகவும் திறமையாக பதில் கூறும் எலிக்கண்ணன் மீது பொறாமைபட்ட சிலர் அவனுக்கு தீங்கு செய்து அவனை அழிக்க நினைத்துள்ளனர். ஆனால் அவர்களது முயற்சியை தடுத்துவிட்டோம்.”
“இதை அறிந்த நமது அரசர் இனிவரும் காலங்களில் இது போன்று நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிர் போட்டிகளை ஒரேநாளில் காலை முதல் மாலை வரை நடத்தி அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்க்கு பரிசளித்து வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றார்” என்றார் மந்திரியார்.
“ஒரே நாள்ல காலையிலிருந்து மாலை வரைக்கும் என்றால் மதிய உணவுக்கு என்ன செய்வது” காட்டெருமை கனகன் கேட்டது.
“மதிய உணவும், இடையிடையே சில சிற்றுண்டிகளும் நமது அரண்மனையிலிருந்தே கிடைக்கும்” என்று பதில் கூறினார் மந்திரியார்.
அனைத்து மிருகங்களும் சந்தோசத்தால் சல சலத்தன. ஆனால் சீனியப்பனும் சின்னக்காளியும் மட்டும் ‘உம்”மென அமர்ந்திருந்தனர் எதையோ பறி கொடுத்தவர்போல வாடிய முகத்துடன் இருந்தனர்.
“சற்று அமைதியாக இருங்கள் இப்பொழுது நமது மன்னரின் இன்னொரு உத்தரவினை உங்களுக்கு அறிவிக்கின்றேன்” என்றார் மந்திரி நரியார்.
“நேற்று மாலை போட்டிக்கு வந்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த எலிக்கண்ணனை உங்களில் இருவர் சதி செய்து அவனை தூக்கிச் சென்று விட்டனர். பின்னர் நம் காட்டிலுள்ள தாமரைக் குளத்தில் நீர் நிறைந்த இடத்தில் எறிந்து எலிக்கண்ணனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது தற்செயலாக அங்கு சென்ற நமது ஒற்றர் தலைவர் பஞ்சமன் பருந்து எலிக்கண்ணனை காப்பாற்றி உயிர் பிழைக்கச் செய்து விட்டார்” என்று கூறிய மந்திரி நரியாரை அனைத்து மிருகங்களும் அமைதியாக உற்று நோக்கின.
“பிறகு நடந்ததை அறிந்த நமது மன்னர் இத்தகைய செயலை செய்தவர்கள் யாரென்று கண்டு பிடித்துவிட்டார். தவறு செய்தவர்கள் அவர்களாகவே என் முன் வந்து நின்றால் தரவேண்டிய தண்டனை சற்று குறையும்” என்று தன் பேச்சை நிறுததிய மந்திரியார், தன் மகனையும் சின்னக்காளியையும் பார்த்தார்.
அவர்கள் இருவரும் மிகவும் வெட்கப்பட்டடு வேதனையுடன் தலையை குனிந்தவாறு மெதுவாக எழுந்து வந்து மந்திரியின் முன்பாக நின்றனர்.
“நீங்கள் செய்தது மிகவும் தவறான செயல் என்று உணர்கிறீர்களா?” மந்திரியார் கேட்டார்.
“நாங்கள் விளையாட்டாக செய்தோம் வேண்டுமென்று இதைச் செய்யவில்லை என” சின்னக்காளி சமாதானம் கூறியது.
“அப்படியா சரி விளையாட்டிலும் ஒரு அளவு உண்டல்லவா உங்கள் விளையாட்டுக்கு ஒருவரின் உயிர் விலையாக ஆகிவிடக் கூடாதல்லவா?” என்று மந்திரியார் மீண்டும் கேட்டார்.
“ஏதோ தெரியாமல் செய்து விட்டோம்…..!” சின்ன நரி சீனியப்பன் முனங்கியது.
“சரி நீங்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டாமா?” என்று மந்திரியார் கேட்டார்.
“கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்” என சிலர் சத்தமாக கூறினார்கள்.
“இதை இப்படியே விட்டு விட்டா காட்டில் சுதந்திரமே கெட்டுவிடும்” ஆந்தையார் அலறினார்.
“எலிக்கண்ணனுக்கு இந்தக் கதின்னா எங்க கதி என்னாகும்.” பட்டாம்பூச்சி பட படத்தது.
“தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர். இதுதானே நம் காட்டின் சட்டம்” யானையார் பிளிறினார்.
“உங்கள் அனைவரின் விருப்பப்படியே தவறு செய்வதவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு” என்று மந்திரியார் கூறியதை கேட்ட சின்னநரி சீனியப்பன் நடுங்கியது.
“அடுத்த வகுப்பு இரண்டு நாட்களுக்கு பின்புதான் அதற்குள்ளாக நீங்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு இந்த காட்டைவிட்டு வெளியேறி நாட்டுக்குள் சென்று இருந்துவிட்டு வர வேண்டும் இது தான் உங்களுக்கான தண்டனை; இது அரசரின் உத்தரவு” என்று மந்திரியார் அறிவித்தார்.
அதன்பின் பலரும் பலவிதமாக பேசிக் கொண்டே கலைந்து சென்று விட்டனர்.
“ஏய் உங்கப்பாவுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா! தண்டனைன்னு சொல்லி நாட்டை சுத்தி வரச் சொல்றாறு” என்று சின்னக்காளி சீனியப்பனிடம் கூறியது.
“ஆமா நாட்டுக்கு போகனுமின்னா ரொம்ப ஜாலிதானே!” என்று சீனியப்பனும் மறுமொழி கூறியது.
காக்கை சின்னகாளியும் சீனியப்பனும் சந்தோசமாக பேசிக் கொண்டே காட்டைவிட்டு. வெளியேறினர். காட்டை ஒட்டிய கிராமத்திற்குள் நுழைந்த அவர்கள் “சரி இனிமேல் இரண்டு பேரும் ஒன்றாக அலைவது இயலாது இரண்டு நாளுக்கு பின் நாம் சந்திப்போம்” என்று காக்கை சின்னக்காளி கூறிவிட்டு விருட்டென பறந்து மறைந்து விட்டது.
பறந்து சென்ற காகம் ஒரு வீட்டின் முன்பாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அந்த வீட்டிலிருந்து தூக்கக் கலக்கத்துடன் வெளியே வந்த ஒருவர் சின்னக் காளியை கண்டதும் விருட்டென வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
“நம்மை கண்டவுடன் வீட்டினுள் சென்று விட்டாரே நமக்கு ஏதாவது உணவு கொண்டு வருவதற்காக இருக்குமோ, இங்கெல்லாம் என் போன்றவர்களுக்கு முதலில் உணவு வைத்து நாங்கள் உண்ட பின்புதான் மனிதர்கள் உண்பார்களாமே! தாத்தா சொன்னது சரிதான் வீட்டிற்குள் சென்றவர் உணவுடன் தான் வருவார்” என்று தனக்குள் எண்ணியவாறு நாவில் நீர் சுரக்க சின்னக்காளி காத்துக் கொண்டிருந்தது.
திடீரென தனது ஒரு இறக்கையின் மீது யாரோ கம்பால் அடிப்பதை உணர்ந்து திடக்கிட்டது சின்னக்காளி உடனே பறந்து சென்று சற்று உயரமான இடத்தில் அமர்ந்து “கா கா” வென கரைந்தது.
“காலையில் எழுந்திருச்சவுடனே ஒத்தையா நிக்குற உன் முகத்துல முழிச்சா விளங்குமா சனியனே! நீ நிக்குறத்துக்கு வேற இடமே இல்லையா? என்வீட்டு வாசல்தான் கிடைச்சதா! இனிமே இந்தப்பக்கம் பார்த்தேன் உன்ன அடிச்சே கொன்னு போடுவேன்” என்று சத்தமாக கூறிய மனிதன் தான் கொண்டு வந்த தடியை சுவரில் வைத்துவிட்டு உள்ளே சென்று விட்டான்.
வந்ததுமே அடி வாங்கியதால் அங்கு நடந்த எதுவுமே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது சின்னக்காளி.
“இவ்வளவு பழகியும் நம்மை தனியே விட்டுட்டுப் போயிட்டானே இந்த காக்காப்பாய” என்று தனக்குள் முனுமுனுத்துக் கொண்டே நடந்து கென்ற நரியார் அங்கு மெதுவாக மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளை கண்டது.
மிகவும் அருகில் அவற்றை பார்த்ததும் நாவில் நீர் ஊறியது மெதுவாக நடந்து சென்று ஒரு கோழி குஞ்சை பிடிக்க அருகில் சென்றபோது “கொக்கரக்கோ” என்று சத்தமிட்டவாறு பறந்து வந்து தாக்கிய கோழியை சமாளிக்க சற்று திரும்பியது கோழியும் இதனுடன் பறந்து பறந்து தாக்கியது.
“கீச்கீச்”சென கத்திய கோழிக்குஞ்சுகள் கூண்டினுற் சென்று ஒளிந்து கொண்டதையும் ஓரக் கண்ணால் பார்த்தது சின்ன நரி சீனியப்பன்.
கோழிகளும் குஞ்சுகளும் அலறும் சத்தம் கேட்டு கையில் கம்புடன் வந்த கோழிக்கு சொந்தக்காரன் சின்னநரி ஒன்று தனது கோழியுடன் சண்டையிடுவதை கண்டவுடன் வேகமாக வந்து நரியின் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்.
அடியை வாங்கிய நரியும் தான் உயிர் பிழைத்தால் போதும் என வந்த பாதையை நோக்கி ஓடியது.காற்றின் வேகத்தில் ஓடி வந்து பின்னால் யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட சின்னநரி சீனியப்பன் மெதுவாக அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தது.
“இனி இருட்டும் வரை இந்த இடத்தை விட்டு எங்கும் போகக்கூடாது” என்ற முடிவுடன் அங்கேயே தங்கிவிட்டது.
மாலைப் பொழுதில் அந்த வழியே ஊரை நோக்கி நடந்து வந்து மாடுகளின் ஆடுகளின் கூட்டத்தை கண்டதும் சீனியப்பனின் மனதில் வேறொரு திட்டம் உருவானது.
அதன்படி இரவில் மெதுவாக சென்று ஆடுகள் அடைந்திருக்கும் கெட்டிலை அடைந்தது பின்னர் மெதுவாக அதனை ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.
அந்த ஆடுகளில் அழகான குட்டி ஒன்று சீனியப்பனின் வயிற்றில் பசியை அதிகப்படுத்தியது.
மெதுவாக கெட்டிலின் முன் வேலியை தாண்டி உள்ளே சென்றது. தன்னை யாரும் கவனிக்கிறார்களா? என்று பார்த்துக் கொண்டே மெதுவாக முன்னேறியது அந்த அழகான குட்டியை நெருங்கும் சமயத்தில் சீனியப்பனை கண்ட பயத்தில் குட்டி ஆடு “மேமே….!” என்று கத்திக் கொண்டு அங்கு மிங்கும் ஓடியது மற்ற ஆடுகளும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் அங்குமிங்கும் ஓடின.
கெட்டிலில் ஆடுகளின் அலறலைக் கேட்ட ஆட்டுக்காரர்கள் 5, 6 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு கம்புடன் ஓடி வந்து கெட்டிலில் ஆடுகளுடன் செய்வதறியாது திகைத்து நிற்கும் சீனியப்பனை ஆளுக்கொன்றாக அடித்து விரட்டினர்.
வேலியின் முன் உடலில் கீறியது கூட தெரியாமல் ஒரே ஓட்டமாக ஓடி நாட்டில் தான் பகலில் இருந்த இடத்தை அடைந்து பசியுடன் படுத்து வேதனையுடன் முனங்கியது சின்ன நரி சீனியப்பன்.
“சே என்ன நாட்டு வாழ்க்கை யாருமே சாப்பாடு தரமாட்டேங்கிறாங்க நாம் முயற்சி செய்தாலும் அடிதான் கிடைக்குது! இனிமேல் நாளைக்கு முழுவதும் வெளியே போகாம இருந்தாத்தான் நம்ம உயிர் தப்பும் போல இருக்கு.”
“பட்டினியா கிடந்தாலும் உயிர் பொழைச்சுக்கலாம். அடிவாங்கினா சாக வேண்டியதுதான்” என்று முடிவு செய்த சீனியப்ன் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்ற முடிவுடன் அங்கேயே சோர்வுடன் படுக்கத் தொடங்கியது.
வந்ததும் அடிவாங்கிய சின்னக்காளி சிறிது நேரம் கழித்து மெதுவாக பறந்து சற்று தூரம் தள்ளி சென்றது ஓரிடத்தில் அவித்த நெல் மணிகளை யாரோ நிறைய போட்டு வைத்திருந்தனர்.
“ஆஹா இதுவல்லவா நாட்டு வாழ்வு இவ்வளவு உணவு சும்மா கிடக்கு திங்க யாருமேயில்லை. இதத் தின்னாலே போதுமே” என்று எண்ணியவாறே மெதுவாக கீழிறங்கி ஒரு நெல்லை கொத்தி தின்றது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் தனது தலையில் விழுந்தது. உடனே படாரென பறந்து அருகிலிருந்த மரத்தையடைந்து கல்லெறிந்தது யார் என கீழே பார்த்தது சின்னக்காளி.
கையில் கல்லுடன் ஒரு சிறு பையன் நின்று கொண்டிருந்தான், சின்னக்காளியை நோக்கி மீண்டும் கல்லெரிய முயற்சித்தான் சின்னக்காளியும் பயந்து கொண்டே அந்த இடத்தை விட்டு பறந்து சீனயப்பனை தேடி அது மறைந்திருந்த இடத்திற்கே வந்தது. இருவரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“இனிமேல் நாட்டுப்க்கம் தலைவச்சுக்கூட படுக்கக்கூடாதாப்பா சே மனுசங்க சுத்த மோசம்பா நம்ம மிருகங்க எவ்வளோ தங்கமில்லே” என்று காக்கை சின்னக்காளி கூறியது.
“ஆமாம் இனிமே அந்தப்பக்கம் போனால் என்னை அடிச்சே கொல்லுவாங்க; பட்டினி கிடந்தாலும் அங்க போகக்கூடாது. இங்கேயே இருந்துவிட்டு காட்டுக்குள்ளே ஓடி போயிரனும்”
“நம்ம காட்டுல ஒருத்தருக்கொருத்தரு எவ்வளவு ஒத்தாசையா ஒத்துமையா சந்தோசமா இருப்போம் இங்க என்னடான்னா எங்க போனாலும் அடிக்கிறாங்க” என்று வருத்தத்துடன் கூறினான் சீனியப்பன்.
இவ்வாறாக இருவரும் பயங்கரமான அனுபவங்களை பெற்றதால் நாட்டைவிட காடே மேல் என்ற உணர்வுடன் பசி மயக்கத்தில் அங்கே முடிங்கி கிடந்தனர்.
இரண்டு நாட்கள் கடந்த பின்னர் பசியால் மெலிந்து கண்கள் பஞ்சடைக்க பசியால் காதடைக்க மெதுவாக தள்ளாடியவாறு இருவரும் காட்டிற்குள் வந்தனர்.
மீண்டும் அனைத்து மிருகங்களும் கூட சபை காலையில் துவங்கியது. வழக்கம் போல நரியார் வந்து தனது ஆசனத்தில் அமர்ந்தார். சிறிது ரேநங்கழித்து மெதுவாக வந்த சீனியப்பனும் சின்னக்காளியும் தள்ளாடியபடியே வந்து மந்திரியாரின் கால்களில் விழுந்தனர்.
“எங்களை மன்னிச்சிருங்க காட்டோட அருமை தெரியாம இருந்துட்டோம் இனிமே யாருக்கும் தொந்தரவு தரமாட்டோம்” என்று சீனியப்பன் கூறியது.
இனிமே நாங்கதான் இந்த காட்டில் மிகவும் நல்லவர்கள் என்ற பெயரெடுக்கும் அளவுக்கு ஒழுக்கமா இருப்போம்” என்றது சின்னக்காளி.
“தயவு செய்து இனிமே யாரையும் நாட்டுப்பக்கம் அனுப்பாதிங்க அங்க உயிரினங்களே வாழ முடியாது” என்றார் இருவரும்.
“ஐயோ பாவம் இரண்டு நாள்ல எப்படி ஆயிட்டாங்க பாத்தியா? என்றது அணில் அன்னாச்சாமி.
“நாடு என்ன அவ்வளவு மோசமா? மனுசங்க என்ன அரசக்கர்களாக ஆயிட்டாங்களா? என்று கேட்டது பூனை கருப்பண்ணன்.
“சரி நீங்க ரொம்ப கஷ்டப்பட்டதால திருந்திட்டீங்கன்னு நெனக்கிறேன். அரண்மனைக் குள்ளே போயி நல்லா சாப்பிட்டு வாங்க நீங்களும் வந்த பிறகுதான் வகுப்பு ஆரம்பமாகும்” என்று அவர்களை அனுப்பிவிட்டு கூடியிருந்தவர்களை பார்த்து பேச ஆரம்பித்தார் மந்திரியார்.
சிறிது நேரத்தில் இருவரும் உணவு உண்டு சற்று களைப்பு நீங்கி தெம்புடன் அங்கு வந்து அமர்ந்தனர்.
‘இரண்டு பேரும் வந்திட்டீங்களா? எல்லோரும் கவனமா கேளுங்க இப்ப நான் ஒவ்வொரு புதிரா போடுவேன். உடனேயே விடை தெரிந்தவர்கள் சொல்லலாம் பத்து நிமிடங்களுக்குள் பதில் கூறும் அனைவருக்கும் மதிப்பெண் உண்டு.
பத்து நிமிடங்களுக்கு பின் இன்னொரு புதிர் கேட்கப்படும் யாருமே விடை சொல்லவில்லையென்றால் யாருக்கும் மதிப்பெண் கிடையாது? என்று விதிமுறைகளை கூறிவிட்டு புதிர்களை கூற ஆரம்பித்தார் மந்திரி நரியார்.
10வது புதிருக்கான விடை
“பத்தாவது புதிருக்கான விடையை அணில் அண்ணாச்சாமி கூறியது” என்று மந்திரியார் கூற அண்ணாச்சாமி மேடையேறியது.
“ஐயா, குரங்கார் பழங்கள் பறித்துவிட்டு தோட்டக்காரனை கண்டு பயந்து ஓடி வரும்போது முதலில் வேலியிரும் வாய்க்காலிலும் குட்டையிலுமாக பாதிபாதி போட்டுவிட்டு தப்பி வந்தபின் கைகளில் இரண்டு பழங்கள் இருக்கிறது என அறிந்ததும், கைகளில் 2 வேலியில் பாதி 2 ஆக 4, வேலிக்கு வரும் முன் கைகளில் 4 குட்டையில் பாதி 4 ஆக 8. குட்டைக்கு வரும் முன் கைகளில் 8 வாய்க்காலில் 8 ஆக 16 என அறிந்து மொத்தம் 16 பழங்கள் என்று சொன்னேன்” என்று அணில் விளக்கமளித்தது கண்டு வெட்டுக்கிளி பாராட்டியது. |
“அணிலின் விளக்கம் அருமை அனைவரும் பாராட்டுங்கள்” என்றதும்
கைதட்டல் ஓய சற்று நேரமானது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)