புதிர் கணக்கு – 13

நம் நாட்டில் ஒரு சமயம் வெளிக்காட்டிலிருந்து குரங்கார் ஒருவர் நமது அரசரை காண வந்தார். நம் காட்டில் அப்போது ஏழுவகையான பாதுகாப்பு படைகள் காட்டைச் சுற்றி இருந்தன.

முதல் படையை கடந்து உள்ளே வரும்போது அதன் தலைவர் அரசரிடம் பெற்றுக் கொண்டு வரும் சன்மானத்தில் பாதி தனக்கு தருவதாக இருந்தால் தான் உள்ளே அனுமதிப்பேன் என்று கூற அதை ஒப்புக் கொண்டது குரங்கு.

அடுத்த படைத் தலைவரிடம் சென்று அரசரை காண வேண்டும் என அனுமதி கேட்க அவரும் முன்னவர் போன்றே நிபந்தனை விதித்தார். அதே போன்றே மீதமுள்ள ஐந்து படைத் தலைவர்களும் நிபந்தனை விதித்து குரங்காரை மன்னரை பார்க்க அனுமதி அளித்தனர்.

மன்னரைக் கண்ட குரங்கார் நிறைய வெகுமதிகளாக வாழைப்பழங்களை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு படைத் தலைவரிடம் தாம் ஒப்புக் கொண்டவாறே இருந்தததில் பாதிப் பழங்களை தந்து விட்டு எழுவரையும் கடந்து வெளியே வந்து பார்த்தால் குரங்காருக்கு மிஞ்சியதோ ஒரே ஒரு வாழைப் பழம் தான் என்றால் குரங்கார் பெற்ற பழங்கள் எத்தனை என்பதுதான் அடுத்த புதிர்.

விடையை யோசித்து பத்து நிமிடங்களுக்குள் சொல்லுங்கள்” என நரி கூறியது.

 

பத்து நிமிடங்களுக்கு பின்னர் எழுந்த குரங்கு குப்பண்ணன் மகன் குட்டியண்ணன் விடையை கூறியது அதை தொடர்ந்து கொண்டை சேவலின் மகன் சங்கு நிறத்தான் ஒரு விடையை கூறியது.

மந்திரியார் தனித்தனியே அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பின்னர் எழுந்து நின்று “குழந்தைகளே இந்த புதிருக்கு குரங்கு குட்டியண்ணனும் சேவல் சங்கு நிறத்தானும் சரியான விடைகளை கூறியுள்ளனர். அவர்களுக்கும் தலா பத்து மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது” என்று அறிவித்தார்.

மிருகங்களில் கைதட்டல் முன்பைவிட அதிகமாக இருந்தது.
இதற்குள் அரண்மனையிலிருந்து சிற்றுண்டியாக சூடான சுண்டல் வந்து விடவே மந்திரியாரும் அனைவரையும் ‘சுண்டல் தின்று பிறகு வந்து அமருங்கள் தொடர்ந்து புதிரைச் சொல்கிறேன்” என்று கூற அனைவரும் எழுந்து “சலசல”வென பேசிக்கொண்டே சுண்டல்களை தின்றுவிட்டு மீண்டும் தமது இடங்களில் அமர்ந்து கொண்டனர்.

“சற்று எளிதான புதிர்களை கூறினால் நாங்களும் விடை சொல்லுவோம்” என்று குட்டி மான் மீன்விழி கூறியது இதை காதில் கேட்ட மந்திரியார் சற்று புன்முறுவல் பூத்துக்கொண்டார்.
“பதிமூன்றாவது புதிருக்கான விடையை சரியாக கூறியது குரங்கார்” என்றார் மந்திரி.

குரங்கும் மேடையில் தாவி ஏறி பேசியது. “ஐயா, என் மூதாதையார் நமது அரசரைக் காண 7 படை தலைவர்களை தாண்டி வந்ததாகவும் அவர்களில் கிடைத்த வெகுமதியை பாதி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. மீதி ஒன்று மட்டுமே இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதன்படி மீதி 1 கடைசி 7-வது நபருக்கு 1 ஆக முதலில் இருந்தது 2 பங்கு, 6-வது நபருக்கு 2 அதற்கு முதலில் இருந்தது 4 பங்கு, 5-வது நபருக்கு 4 அதற்கு முதலில் இருந்தது 8 பங்கு, 4-வது நபருக்கு 8 அதற்கு முன் இருந்தது 16 பங்கு, 3-வது நபருக்கு 16 அதற்கு முன் இருந்தது 32 பங்கு, 2 நபருக்கு 32 அதற்கு முன் இருந்தது 64 பங்கு, 1-வது நபருக்கு 64 எனில் முதலில் பெற்றது 128 பழங்கள் என்று கணக்கிட்டு விடை கூறினேன்” என்றது குரங்கு.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 




One Reply to “புதிர் கணக்கு – 13”

  1. நாங்கள் சின்ன வயதில் இந்த புதிர் கணக்கை போட்டு விளையாடினோம் மறந்துபோன விளையாட்டை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

Comments are closed.