புதிர் கணக்கு – 16

 

“சென்ற மாதம் சில விநோதமான பறவைகள் நமது காடுகளை சுற்றி பார்க்க வந்தன.

அவர்கள் எத்தனை பேர்கள் வந்துள்ளார்கள் என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர்களில் ஒரு பறவை நாங்களும் எங்களில் பாதியும் அதில் பாதியும் என்னையும் சேர்த்தால் மொத்தம் 71 என்று கூறிவிட்டு நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்றது.

இப்போது உங்களுக்கான கேள்வியும் இதுதான் அன்று சுற்றிப் பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர்?” என்று கேட்டார் நரியார்.

அனைவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். பின்னர் எலிக்கண்ணன் ஒரு விடையை கூறியது. அதை தொடர்ந்து அணில் அன்னாச்சாமியும் அதே விடையை கூறியது.

மந்திரி நரியாரோ இருவரிடமும் தனித்தனியே விளக்கம் கேட்டார். அதன் பின்னர் எழுந்த சின்னக் காளியை “அவர்கள் இருவரும் விளக்கமளித்த பின்னர் நீ விடை கூறுவது தவறு” என்று கூறி காக்கை சின்னக் காளியை அமரச் செய்தார்.

“எலிக் கண்ணனும் அன்னாச்சாமியும் கூறிய விடை சரியானது தான் அவர்கள் இருவரும் தலா பத்து மதிப் பெண்கள் பெறுகின்றார்கள்” என்று அறிவித்தது.

 

“இந்த புதிருக்கு அணிலும் எலியும் பதில்களை மிகவும் சரியாக கூறின” என்று மந்திரியாரே அணிலை பதில் கூற அழைத்தார்.

மேடைக்கு வந்த அணில் அன்னாச்சாமி பேச ஆரம்பித்தது.

“ஐயா இந்த புதிரில் காட்டை சுற்றி பார்க்க வந்தவர்கள் நாங்களும் எங்களில் பாதியும் அதில் பாதியும் நானும் மொத்தம் 71 என்று கூறுவதாக புதிர் இருந்தது.”

மொத்தம் வந்தவர்கள் எண்ணிக்கை X எனலாம்

அதில் பாதி X/2 எனலாம்

பாதியில் பாதி X/4 எனலாம்

கூட ஒன்று சேர்ந்து 71 ஆகிறது. அதாவது

            X + X/2 + X/4 + 1 = 71

           X + X/2 + X/4 = 71 – 1

          X + X/ 2 + x/4 = 70

இதையே இப்படி எழுதலாம்

         X + 0.5X + 0.25 X = 70

         1.75 X = 70

               X = 70 / 1.75

               X = 40

“ஆக வந்த பறவைகளின் எண்ணிக்கை 40 ஆகும்” என்று அணில் கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.