“இப்போது அடுத்த புதிரை கூறுகின்றேன். கவனித்து விடை கூறுபவர்கள் விளக்கம் கேட்கும் முன்பாக விடை கூறுங்கள்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார்.
“நம் காட்டில் உள்ள சேவகன் கழுதை காங்கேயனும் அவன் தம்பி மாங்கேயனும் ஒரு சமயம் அரண்மனையிலிருந்து சில உணவு மூட்டைகளை சுமந்து சென்றனர். அப்போது காங்கேயன் தன் தம்பியிடம் கேட்டது. “தம்பி நீ ஒரு மூட்டையை எனக்கு தந்தால் நாம் இருவரும் சமமான அளவு சுமக்கலாமே!” என்றது. ஆனால் அதை மறுத்த மாங்கேயன் “நீ வேண்டுமானால் ஒன்றை கொடு உன்னைப் போல இரண்டு மடங்காகும் எனக்கு” என்று பதில் கூறியது. அப்படியானால் அவர்கள் இருவரும் சுமந்து சென்ற மூட்டைகள் எத்தனை என்பதுதான் இப்போதைய கேள்வி” என கூறினார். |
விருட்டென எழுந்த காக்கை சின்னக்காளி ஒரு விடையை கூறியது பின்னர் அதைத் தொடர்ந்து சின்ன நரி சீனியப்பனும் விடையை கூறியது.
ஆனால் ஏனோ எலிக்கண்ணன் விடை கூற எழவில்லை.
சிறிது நேரம் காத்திருந்த மந்திரியார் அவர்கள் இருவரிடமும் தனித்தனியே விளக்கம் கேட்டு விட்டு பேசலானார்.
“நண்பர்களான சீனியப்பனும் சின்னக் காளியும் கூறிய விடை சரியான விடையே அவர்களுக்கு தலா 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் அவர்களை அனைவரும் பாராட்டுங்கள்” என்றார் உடனே கைதட்டல் பலமாக இருந்தது.
“இந்த புதிருக்கான விடையை சீனியப்பனும், சின்னக்காளியும் கூறினார்கள்” என்று கூற சின்னக் காளி சீனியப்பனை போகச் சொன்னது. சீனியப்பனும் மேடையேறி பேச ஆரம்பித்தது.
“ஐயா இதில் கழுதைகள் சுமந்த உணவு மூட்டைகளை பற்றி கூறப்பட்டது. முதலாமவர் தன்னிடம் ஒன்றை தந்தால் இருவரும் சமமான மூட்டைகளை சுமக்கலாம் எனவும், இரண்டாமர் தன்னிடம் ஒன்றை தந்தால் உன்னை விட இருமடங்கு நான் சுமப்பேன் எனவும் கூறப்பட்டது. அதன்படி முதலாவது 5 மூட்டைகள் என்றும், இரண்டாவது அதைவிட இரண்டு அதிகமாக 7 மூட்டைகள் என்றும், வைத்தால் நிபந்தனைகளுக்கு சரியாக இருந்தன. எனவே தான் முதல் கழுதை 5 மூட்டைகளும் இரண்டாவது கழுதை 7 மூட்டைகளும் சுமந்தன என நான் கூறினேன்” என்று சீனியப்பன் கூறிவிட்டு கீழே இறங்கிச் சென்றுவிட்டது. |
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)