விலங்குகள் அனைத்தும் சிங்க ராஜாவின் அரண்மனையில் ஒன்று கூடியதும் நரி புதிர் கணக்கை ஆரம்பித்தது.
“இதோ இரண்டாவது புதிர் கணக்கினைக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள் இந்த இரண்டாவது புதிர் மிகவும் சுலபமானது. இதற்கான பதிலை இன்றே அனைவருமே அறிந்து கொள்ள இயலும். ஆனாலும் விதி முறைப்படி நாளை மாலைப் பொழுதில் தான் விடையைக் கூற வேண்டும்”, என்று பீடிகை போட்டது நரி.
“இப்பொழுதே விடையை சொன்னால் கேட்டு விட்டு சரி அல்லது தவறு என்று கூறி விடுவது தானே. நாளை வரும் வரைக்கும் காத்திருப்பதால் என்ன பயன்?”, என்று துணிச்சலுடன் அணில் அன்னாச்சாமி தனது இனிய குரலில் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் கேட்டது.
“அணில் அன்னாசாமியின் கேள்வி நியாயமானது தான் ஆனால் புதிருக்கான விடையை அனைவராலும் உடனடியாக கண்டுபிடிக்க இயலாதல்லவா? போட்டி என்றால் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பது தானே முறை. ஏன் முதல் புதிருக்கான விடையை எலிக்கண்ணன் என்னிடம் உடனே கூறியது.
ஆனாலும் மற்ற அனைவரும் யோசித்து விடையைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று தானே இன்று விடையைக் கூறச் செய்தேன். அது தானே சரியான முறை” என்று நரியார் விளக்கம் கூறியது.
“ஆமாம், ஆமாம் மந்திரியார் செய்ததுதான் மெத்தச் சரி” என அனைத்து விலங்குகளும் ஒப்புக் கொண்டன.
“சரி, சரி சீக்கிரமாக புதிரைச் சொல்லுங்கள். நான் விளையாடப் போக வேண்டும்”, என்று கரிச்சான் குருவி கூறியது.
“எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். இரண்டாவது புதிரைச் சொல்லுகிறேன்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு நம் காட்டு வழியே ஒரு பொம்மை விற்கும் மனிதன் கூடை நிறைய மண் பொம்மைகளை கொண்டு சென்றான். அப்போது எதிரில் வந்த மற்றொரு மனிதன் பொம்மை வியாபாரியிடம் பொம்மைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே விலை கேட்டான். அதற்கு பொம்மை வியாபாரி “என்னிடம் மொத்தம் நூறு பொம்மைகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், பிள்ளையார் பொம்மைகள் மற்றும் குரங்கு பொம்மைகள் உள்ளன. இதில் ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் விலை 5¼ ரூபாய், ஒரு பிள்ளையார் பொம்மையின் விலை 2½ ரூபாய், ஒரு குரங்கு பொம்மையின் விலை ¼ ரூபாய் என்று விலை கூறினான். அவற்றின் மொத்த மதிப்பு 100 ரூபாய் என்றும் கூறினான். இதை நான் மறைந்து இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இன்றைய கேள்வி இதுதான். பொம்மை விற்பவனிடம் உள்ள 100 பொம்மைகளின் மொத்த மதிப்பு 100 ரூபாய் என்றால் மேற்கொண்டவாறு விலையுடைய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், பிள்ளையார் பொம்மைகள், குரங்கு பொம்மைகள் ஒவ்வொன்றிலும் எத்தனை எத்தனை இருந்திருக்கும்?” என்று புதிரைக் கூறிவிட்டு இதற்கான விடையை நாளை இங்கு கூறலாம். இப்போது அனைவரும் கலைந்து செல்லலாம்”, என்று கூறிவிட்டு நரியார் அரண்மனையின் உட்பக்கம் சென்றுவிட்டார். |
நேராக அரண்மனையின் உட்பக்கம் சென்ற மந்திரி நரியார் மகாராசா சிங்கத்தை கண்டது.
“வணக்கம் மகாராசா”
“வாரும் மந்திரியாரே உங்களது திட்டம் எவ்வாறு செயல்படுகிறது” என்று சிங்கமகாராசா கேட்டார்.
“மகாராசா நாம் எதிர்பார்த்த அளவு அதிகமாக கூட்டம் வருகின்றது. முதலாவது புதிருக்கு குட்டி எலிக்கண்ணன் விடை கூறி பத்துமதிப்பெண்ணை பெற்று சென்று விட்டது.
இன்று இரண்டாவது புதிரைக் கூறிவிட்டு வந்துள்ளேன். நாளை மாலை அதற்கான விடையைக் கூறப் போவது யார் எனத் தெரியவில்லை என்று பதில் கூறியது நரி.
“சரி சரி நீங்கள் தொடர்ந்து இதை நன்றாக நடத்தி நமது குழந்தைகளை புத்திசாலிகளாக மாற்றுங்கள் எனது வாழ்த்துக்கள்”, என்று சிங்க மாகாராசா கூறவும் நரி மகாராசாவிடம் விடை பெற்று சென்றது.
அடுத்த நாள் மாலைப் பொழுது வந்த அனைத்து மிருகங்களும் தங்களது குட்டிகளை மட்டுமே அனுப்பி இருந்தன. காக்கை சின்னக் காளியை மட்டும் அங்கு காணவில்லை.
“எங்கே காக்கை சின்ன காளியை மட்டும் காணவில்லை” என்று நரியார் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டது.
“நான் வரும் போது அழைத்தேன் வர மறுத்து விட்டது” என்று குயில் காக்கையின் மீது குற்றப் பத்திரிக்கை வாசித்தது.
“அப்படியா? நீ அழைத்தும் வரவில்லையா? என்று கூறிக் கொண்டே யோசித்தது. பின்னர் தன் அருகில் நின்ற சேவகன் கழுதை காங்கேயனிடம் “நீ சென்று காக்கை காளியை மகாராசாவைப் பார்க்கச் சொல்” என்று கூறிவிட்டு “நேற்றைய புதிருக்கு விடை தெரிந்தவர்கள் கூறுங்கள் என்று கூட்டாத்தாரைப் பார்த்துக் கூறியது.
“எனக்கு விடை தெரியும். ஆனால் வரும் வழியில் திராட்சை தோட்டத்தில் புகுந்து வயிறு முட்ட தின்று விட்டு வந்ததால் விடை மறந்து போயிற்று” என்று கூறியது மந்திரி குமாரனான சின்னநரி சீனியப்பன்.
“உன் வேடிக்கை எல்லாம் இங்க வேண்டாம்” என்று தன் மகனை எச்சரித்தது மந்திரியான நரி.
மிகவும் அமைதியாக ஒற்றைக்காலில் அமர்ந்திருந்த கொண்டை சேவலின் மகன் சங்கு நிறத்தான் எழுந்து நின்று ஏதோ விடையைக் கூறியது.
“இன்னும் யாராவது விடை தெரிந்தவர்கள் உள்ளனரா?” என்று மந்திரி கேட்க யாரும் பதில் கூறவில்லை.
“இன்று எலிக்கண்ணன் வரவில்லையா?” என்று தேடிய பின்பு நரி மீண்டும் பேசத் தொடங்கியது. “கொண்டை சேவலின் மகன் சங்கு நிறத்தான் சொன்ன விடை தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்கின்றனர்.
இம்மாதிரியான செயல் அவர்களது அறிவு வளர்ச்சிக்குத் தான் தடை என்பதனை புரிந்து கொண்டு எதிர்வரும் நாட்களில் பதில் கூறுவார்கள் என நம்புகிறேன்.
மேலும் இன்றைய இரண்டாவது புதிருக்கு சரியான விடையை கூறிய சங்கு நிறத்தான் பத்து மதிப்பெண்கள் பெற்று வெற்றிப்படிகளில் தனது கால்களைப் பதிக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று அறிவித்தது.
“இரண்டாவது புதிரான பொம்மை வியாபாரி கொண்டு வந்த பொம்மைகளில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், பிள்ளையார் பொம்மைகள், குரங்கு பொம்மைகள் நூறு ரூபாய்க்கு நூறு பொம்மைகள் என்றால் எப்படி? என்ற கேள்விக்கு சரியான விடையை கொண்டைச் சேவலின் மகன் சங்கு நிறத்தான் கூறியது” என்று கூறிவிட்டு மந்திரியார் அமர்ந்தார்.
“சங்கு நிறத்தான் அவர்களே வாருங்கள் இங்கே” என்று அழைக்கவும் அது மேடைக்குப் பறந்து வந்தது.
“நிறத்திற்கேற்ப பெயர்தான் சங்கைப் போன்றே வெண்மையாகக் காணப்படுகிறீர்கள்” என்ற பின் “நீங்கள் இரண்டாவது புதிருக்கு எப்படி விடையைக் கண்டுபிடித்தீர்கள்?” என்று வெட்டுக்கிளியார் கேட்டார்.
“ஐயா அந்தப் புதிரில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் விலை 5¼ ரூபாய் என்றும், ஒரு பிள்ளையார் பொம்மையின் விலை 2½ ரூபாய் என்றும்;, ஒரு குரங்கு பொம்மையின் விலை; ¼ ரூபாய் என்றும் மந்திரியார் கூறினார். மொத்த பொம்மைகள் 100 என்றும், அதன் மொத்த மதிப்பும் ரூ100 என்றும் கூறப்பட்டது. நான் ¼ ரூ விலையுள்ள பொம்மைகளை அதிக எண்ணிக்கையில் இருக்குமாறு கணக்கிட்டு குரங்கு பொம்மைகள் 70 என்றும், அதற்கான மதிப்பு 70 x ¼ = ரூ17.50 பின்னர் பிள்iளார் பொம்மைகள் 25 என்றும் அவற்றின் மதிப்பு 25 x 2½ = ரூ56.25. பின்னர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் 5 என்றும், அவற்றின் மதிப்பு 5 x 5¼ = ரூ65.25 என்றும் கணக்கிட்டேன். பொம்மைகளின் எண்ணிக்கை 70 + 25 + 5 = 100 ஆகவும், விலை 17.50 + 56.25 + 26.25 ஸ்ரீ 100 என்று கண்டுபிடித்துக் கூறினேன்” என்று சங்கு நிறத்தான் கூறியதும், “சபாஷ் சரியான பதில்”என வெட்டுக்கிளியார் பாராட்டினார். |
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)