Yanai

புதிர் கணக்கு – 20

“சூரியன் மறையும் வேளை வந்து விட்டது. எனவே இந்தப் புதிரையே கடைசிப் புதிராக்கி இத்துடன் இந்த வகுப்பினை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்” என்று அறிவித்து விட்டு புதிரை கூற ஆரம்பித்தார் மந்திரியார்.

“இறுதிப் புதிராக இருப்பதால் மிகவும் சுலபமான ஒன்றே கேள்வியாக கேட்கிறேன். இதனை ஏறக்குறைய அனைவருமே பதில் கூற முயற்சிக்கலாம்.

ஒரு எண்ணை இரண்டால் வகுத்தால் ஒன்று மீதியாகிறது.

அவ்வெண்ணை மூன்றால் வகுத்தால் இரண்டு மீதியாகிறது.

நான்கால் வகுத்தால் மூன்று மீதியாகிறது.

ஐந்தால் வகுத்தால் ஒன்றும் மீதமில்லை என்றால் அந்த எண் எது? என்பது தான் இறுதியான கேள்வி” என்று கூறியவுடனே அங்கு இருந்தவர்கள் அனைவருமே கலகலவென பேசிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் எழுந்த யானையார் ஒரு விடையை கூறினார். காக்கை சின்னக் காளியும் அதே விடையைக் கூறியது. சீனியப்பனும் எலிக் கண்ணனும் கூட விடைகள் கூறினர். இறுதியாக மெதுவாக எழுந்த சங்கு நிறத்தானும் விடையைக் கூறியது.

“இன்னும் யாராவது இருக்கின்றீர்களா? என்று கேட்ட நரியார் யாரிடமும் விளக்கம் கேட்காமலே “நீங்கள் அனைவரும் கூறிய விடை சரியானது தான் அனைவருக்கும் தலா 10 மதிப்பெண்கள் கிடைக்கும்” என்று கூறியது.

அந்த நேரம் சூரியன் மறையத் தொடங்கியது. “குழந்தைகளே உங்களில் பரிசுக்குரியவர் யார் அவர் பெற்ற மதிப்பெண்கள் எத்தனை என நாளை நடைபெறும் விழாவில் நமது அரசர் அறிவிப்பார். அனைவரும் வந்து விழாவினை சிறப்புச் செய்யுங்கள்” என்று கூறிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று அரண்மனையினுள் சென்று விட்டனர்.

மறுநாள் காடெங்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன. ஆங்காங்கு தோரணங்கள் அலங்கார வளைவுகள் கட்டப்பட்டிருந்தன.

அனைவரும் சந்தோசமாக மாலையில் நடைபெற இருக்கும் விழாவிற்கு தயாராகி நின்றனர்.

காட்டிலிருந்து வெளியாகும் “தினவிடியல்” காலை பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் வெட்டுக்கிளியார் விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு மறுநாள் பத்திரிக்கையில் செய்தி வெளியிடுவதற்காக வந்திருந்தார்.

அவர் அங்கு நடைபெற்ற புதிர் போட்டியை பற்றி யாரோ கூறவும் நேராக மந்திரியான நரியை சந்தித்தார்.

“வணக்கம் மந்திரியார்! தாங்கள் நடத்திய புதிர் போட்டியை பற்றியும், அதற்கு விடை கூறியவர்கள் எவ்வாறு கூறினார்கள் என்பதை பற்றியும் விவரமாக தெரிந்தால் நாளை காலையில் செய்தியாக வெளியிடலாம் என நினைக்கிறேன்” என்றது.

“அதற்கென்ன தாராளமாக செய்யலாம். புதிர்களைப் பற்றி நான் கூறுகின்றேன். ஆனால் விடை கூறியவர்களை பேட்டி கண்டால்தான் அவர்கள் கண்டுபிடித்த விபரம் கிடைக்கும்” என்றார் மந்திரியார்.

“அப்படியானால் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து தாருங்கள்” என்றார் வெட்டுக்கிளியார்.

“இன்று மாலை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அனைவரும் இங்கு வருவார்கள் அப்போது நாம் இருவருமே அவர்களை சந்தித்து விடைகளை கண்டு பிடித்த விதங்களை குறித்து கேட்டு விளக்கம் பெறலாம் அல்லவா? என்று மந்திரி நரியார் கேட்டார்.

“மாலை விழா இருப்பதாக அறிவித்து உள்ளீர்களே! பிறகு எப்படி அவர்களை பேட்டி காண்பது?” என்று வெட்டுக்கிளியார் கேட்டார்.

“விழா இன்று மாலையில் கிடையாது”

“என்ன விழா இன்று இல்லையா ஏன் ஏதாவது தடங்கல் உள்ளதா?”

வெட்டுக்கிளியார் கேட்டார்.

“இதுபற்றிய விளக்கம் மாலையில் அறிவிக்கப்படும்” என்று பேச்சை முடித்தார் நரியார்.

இருவரும் மாலைப் பொழுதில் அனைத்து மிருகங்களையும் சந்திக்க காத்திருந்தனர். மாலை வேளை வந்தது அனைவரும் தங்கள் பெற்றோருடன் வந்து அமர்ந்தனர்.

சிறிது நேரத்தில் விழா மேடையில் வந்து நின்ற மந்திரியார் கூட்டத்தை பார்த்து பேசலானார். “அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே இன்று நடைபெறும் விழாவிற்கு நமது அரசர் அழைத்த தலைமை விருந்தினர் வரவியலாது என சற்று முன்னர்தான் தகுந்த நபரின் மூலம் செய்தியை அனுப்பியுள்ளார்.”

எனவே வேறொரு தலைமை விருந்தினரை நாம் அனைவரும் மதிக்கக் கூடிய ஒரு நபரை தேர்வு செய்து அவரை அழைத்து வர ஏற்பாடுகள் செய்துவிட்டு அதன்பின் நாளை மாலை விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று நமது அரசர் நினைக்கின்றார்.

எனவே நீங்கள் அனைவரும் சென்று நாளை மாலை வாருங்கள் கண்டிப்பாக விழா நடைபெறும்” என்று கூறினார்.

“ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இப்போது நம் காட்டில் காலையில் வெளியாகும் தினவிடியல் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் புதிர்களுக்கு விடைகூறிய குழந்தைகளிடம் சில கேள்விகளை கேட்டு தமது பத்திரிக்கையில் வெளியிட விரும்புகிறார்.

எனவே குழந்தைகள் மட்டும் இங்கேயே இருக்கவும், பெரியவர்கள் இன்று போய்விட்டு நாளை வரலாம்” என்று நரியார் கூறவும்.
ஒவ்வொருவராக அங்கிருந்து எழுந்து சென்று விட குழந்தைகள் மட்டுமே பத்திரிக்கை ஆசிரியரை காண ஆவலுடன் அமர்ந்திருந்தனர்.

“எங்க போட்டோவல்லாம் வருமா?”
சின்னநரி சீனியப்பன் கேட்டதும்,
“கண்டிப்பாக உங்கள் புகைப்படம் உண்டு” என்று கூறியவாறே எழுந்தார் தின விடியலின் துணை ஆசிரியர் வெட்டுக்கிளியார்.

“வணக்கம் குழந்தைகளே! உங்களுக்கு நல்ல அறிவு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இங்கு நடைபெற்ற புதிர் போட்டிகளை பற்றி நான் கேள்விப்பட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

ஏனெனில் நாடுகளில்தான் மனிதர்கள் “வினாடி-வினா” என்ற ஒரு போட்டியையும், “விடுகதை” என்ற புதிர்களையும் உருவாக்கி தமது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக நடத்துவது வழக்கம்.

ஆனால் காட்டில் அதுவும் பலவகையான மிருகங்கள் வாழும் காட்டில் இந்த மாதிரி ஒரு போட்டி வைப்பதே மிகவும் ஆச்சர்யமான அதிசயமான ஒன்று தான் இதை செயலாக்கி வெற்றிக் கண்ட நமது மந்திரியார் நரியாரை நாம் பாராட்ட வேண்டும்” என்று கூறியதும் கைத்தட்டல் பலமாக எழுந்தது.

“மேலும் இதில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு பதில் கூறினீர்கள் என்றால் அதுவும் அதிசயமான ஒன்றுதான்” என்று அவர்களையும் பாராட்டிவிட்டு குழந்தைகளிடம்  விளக்கம் கேட்டு நான் குறிப்பெடுத்துக் கொள்வேன்” என்றார்.

“சரி அப்படியே செய்வோம்” என்று மந்திரியார் கூறலானார்.
“இந்த புதிருக்கான விடையை பலர் சரியாக கூறினார்கள். இதுவரை மேடைக்கு வராத யானையார் வந்து விளக்கமளிக்க வேண்டும்” என்ற மந்திரியின் அறிவிப்பை கேட்டது.

யானை மெதுவாக எழுந்து கீழே நின்று கொண்டே விளக்கமளித்தது. “மேடைக்கு வரலாமே” எனவெட்டுக்கிளியார் கூறினார்.

“மேடை உடைந்துவிடும் தாங்காது அது உங்களுக்காகத்தான்” என்றார் யானையார்.

“ஐயா, இந்த இருபதாம் புதிருக்கு சில நிபந்தனைகள் விதித்து ஒரு எண்ணை கண்டு பிடிக்கச் சொன்னார்கள்.

5ஆல் வகுத்தால் மீதிமில்லை என்றும், நான்கால் வகுக்க 3 மீதி என்றும், மூன்றால் வகுக்க 2 மீதி என்றும், இரண்டால் வகுக்க 1 மீதி என்றும், கூற அது 5 ஆல் வகுபடும் எண் என்று அறிந்து ஒவ்வொன்றாக வகுத்து பார்த்து 35 என்று கண்டுபிடித்தேன். அதுவே சரியாகவும் இருந்தது” என்று கூறிவிட்டு தன் இருப்பிடம் நோக்கிச் சென்றார் யானையார்.

அனைவரின் விடைகளுக்கான விளக்கங்களையும் குறித்துக் கொண்ட வெட்டுக்கிளியார் பேச ஆரம்பித்தார்.

“குழந்தைகளே இன்று நீங்கள் கூறிய விடைகளை எமது தின விடியலில் பிரசுரம் செய்போம். உங்களது பெயர்களும் அதில் இடம் பெறும்” என்று கூறவும் அனைவரும் கைதட்டி ஆரவராரம் செய்தனர்.

பின்னர் மந்திரியார் எழுந்தார் “குழந்தைகளே இப்போது முதல் பரிசை பெறுபவர் யார் என்று கூறும் நேரம் வந்துவிட்டது” என்று கூற அனைவரும் அமைதியாக கேட்டனர்.

முதல் பரிசினை எலிக்கண்ணன் பெற்தால் அவருக்கு “கணக்கு புலி” என்ற விருதினையும் நமது அரசரால் ஏற்பாடு செய்யப்படும் விழாவில் வழங்கப்படும் என்று கூறினார்.

“ஓஹோ எலி இப்போ புலியாகி விட்டதா” என்று யானையார் கிண்டல் செய்தார்.

“விழா எப்போது” அணில் அன்னாச்சாமி கேட்டது.

“குழந்தைகளே விழா இன்று நடைபெறுவதாக இருந்தது. விழாவிற்காக ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்திருந்தோம். அவர் வர இயலாத நிலையில் விழா தடைபட்டு விட்டது அடுத்து யாரை அழைப்பது என்று விளங்கவில்லை” என்றார் மந்திரியான நரியார்.

நாங்கள் குழந்தைகள் தானே எங்களுக்கு பரிசு கொடுக்க நாட்டில் பள்ளியில் படிக்கும் ஒரு அறிவாற்றல் மிக்க மாணவனை அழைக்கலாமே!” சின்ன நரி சீனியப்பன் தனது கருத்தை கூறியது.

“சபாஷ் சீனியப்பா நல்ல ஆலோசனை சொன்னாய் இப்போது தான் என் மகன் என்று நிரூபணம் ஆகிறது” என்று மந்திரியார் பாராட்டிவிட்டு தொடர்ந்தார்.

“குழந்தைகளே, உங்களுக்கு பரிசு கொடுக்க அறிவுள்ள மாணவனை அழைத்து வருமாறு நீலனுக்கு மகாராசாவின் கட்டளையை நாங்கள் முறைப்படி தெரிவித்து அதன்பின் விருந்தினர் வருவதை உறுதி செய்து விழா நடத்தலாம். நீங்கள் சென்று வாருங்கள்” என்று சொன்னார் மந்திரியார்.

வெட்டுக்கிளியாரைப் பார்த்து “நீங்கள்தான் நீலனுக்கு தகவல் சொல்லியனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
சரியென ஒப்புக் கொண்ட வெட்டுக்கிளியார் ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

என்ன குழந்தைகளே! நீங்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்தானே நீலன் வந்து உங்களைகூட அழைக்கலாம் அல்லவா புறப்பட தயாராகுங்கள்.
காட்டில் நடைபெறும் விழாவில் சந்திப்போம்.
வாருங்கள் விழாவிற்கு!
வாழ்த்துங்கள் குழந்தைகளே!

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)