மறுநாள் பொழுது புலர்ந்தது. அந்தக் குளத்தங்கரையில் நின்றிருந்த குட்டையான மரங்களின் மீது வெளிநாட்டு உள்நாட்டுப் பறவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நின்று கொண்டிருந்தன.
“இன்று புதிர் போட்டியைத் தொடக்கி வைக்க வேண்டுமல்லவா? நமது தலைவரான கழுகு கரிகாலன் தனது புதிரை முதலாவதாகச் சொல்லி இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க வேண்டுமென உங்கள் அனைவரின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றது காக்கை கருப்பன்.
“தலைவர்தானே ஆரம்பிக்க வேண்டும்? அதுதானே சரியான வழிமுறையும்கூட” என்றது குயில் குப்பம்மாள்.
உள்ளுர் தலைவனான கழுகு கரிகாலன் எழுந்து பேச ஆரம்பித்தது. “அன்பானவர்களே இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தும் இந்த முயற்சிக்கு அனைவரும் நல்ல ஒத்துழைப்புத் தர வேண்டுமென உங்களைக் கேட்டுக்கொண்டு முதலாவது புதிரை நானே ஆரம்பித்துவைக்கிறேன்!” என்று கூறியபின் மேலும் தொடர்ந்தது.
“இந்தப் புதிர் நகர்ப்புறத்திலே பழம் விற்கும் ஒருவன் மற்றொருவனுக்குக் கூறியது. அதை அப்படியே சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.
ஒரு பழ வியாபாரி வண்டியில் பழங்களை வைத்து வீதிவீதியாக விற்றுக் கொண்டிருந்தான். அவன் கொய்யாப்பழம் மற்றும் எலுமிச்சம்பழம் ஆகிய இரண்டையும் விற்றுக் கொண்டிருந்தான்.
ஒரு வீதியில் 20 ரூபாய்க்கு இருபது பழங்கள் என்றும், இன்னொரு வீதியில் 20 ரூபாய்க்கு 30 பழங்கள் என்றும், மற்றொரு வீதியில் 20 ரூபாய்க்கு 40 பழங்கள் என்றும், அதற்கடுத்த வீதியில் 20 ரூபாய்க்கு 50 பழங்கள் என்றும் விற்பனை செய்தான்.
அவ்வாறாக விற்பனை செய்தாலும் தான் நேர்மையாக நடந்து கொண்டதாகவும் யாரையும் ஏமாற்றவில்லையென்றும் அவன் கூறினான்.
அப்படியானால் அவன் விற்பனை செய்த கொய்யா மற்றும் எலுமிச்சைப் பழங்களின் விலை எவ்வளவு?
ஒவ்வொரு வீதியிலும் அவன் விற்ற பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இதுவே எனது முதல் கேள்வியாகும்” என்று கூறியது.
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பறவைகள் ‘திருதிரு’ வென விழித்தன. அதனைக் கண்ட உள்ளுர்ப் பறவைகள் சந்தோசமடைந்தன.
“என்ன பதில் தெரியவில்லையா? உடனே எடத்த காலி பண்ணுங்க” எனக்கூறிக் கேலி செய்தன.
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பறவைகளில் சுவர்க்க பறவை ஒன்றும் இருந்தது. சதா உறங்கிக் கொண்டே இருக்கும். ஆனால் பட்டென முழித்து படாரெனப் பறக்க ஆரம்பிக்கும். அது அப்போது தூங்கிக் கொண்டேயிருந்தது.
திடீரென எழுந்த சுவர்க்கப் பறவை ஏதோ ஒரு பதிலைக் கூறிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டது.
சுவர்க்கப் பறவையின் பதிலைக் கேட்ட கழுகு கரிகாலன் அது மிகவும் சரியான பதில்தான் என ஒத்துக் கொண்டது. வெளிநாட்டுப் பறவைகள் நிம்மதியடைந்தன.
“ஆமாம். தூங்குமூஞ்சிச் சுவர்க்கப் பறவை சரியான பதில்தான் சொன்னது”, செஞ்சிவப்புக் கிளி ஆமோதித்தது.
“அது என்ன பதில் சொன்னது? கிளி கீதம்மாள் கேட்டது.
“அதற்கு விடையாகச் சுவர்க்கப் பறவை என்னதான் சொன்னது?” பருந்து பாப்பாத்தி கேட்டது.
“அவர் எலுமிச்சை ரூ.1க்கு 2 என்றும் கொய்யாப்பழம் ரூ 11க்கு 2 என்றும் விற்பனை செய்தாராம்.
முதல் தெருவில் 9 ரூபாய்க்கு எலுமிச்சை 18ம்
11 ரூபாய்க்குக் கொய்யா 2ம் ஆக
20 ரூபாய்க்குப் பழம் 20 என்றும்
இரண்டாவது தெருவில் 8 ரூபாய்க்கு எலுமிச்சை 16ம்
22 ரூபாய்க்குக் கொய்யா 4ம் ஆக
30 ரூபாய்க்குப் பழம் 20 என்றும்
மூன்றாவது தெருவில் 7 ரூபாய்க்கு எலுமிச்சை 14ம்
33 ரூபாய்க்குக் கொய்யா 6ம் ஆக
40 ரூபாய்க்குப் பழம் 20 என்றும்
நான்காவது தெருவில் 6 ரூபாய்க்கு எலுமிச்சை 12ம்
44 ரூபாய்க்குக் கொய்யா 8ம் ஆக
50 ரூபாய்க்குப் பழம் 20 என்றும்
விற்பனை செய்ததால் நஷ்டமின்றி வியாபாரம் செய்தார் என்று சுவர்க்கப்பறவை கூறியது” என்று வெளவால் வாணி கூறியது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)