புதிர் கணக்கு – 22

“நண்பர்களே, இப்போது இரண்டாவது புதிரை நமது காக்கை கருப்பன் கேட்கப்போகிறது. நீங்களும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். பதில்களை அவர்கள் கூறாவிட்டால் நீங்களும் கூறலாம். உங்களுக்கும் அந்த அடிப்படையில் பரிசுகள் கிடைக்கும்” என்று கூறிவிட்டு கழுகு கரிகாலன் அமர்ந்தது.

“இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியது பருந்து பாப்பாத்தி.

“எதை? ஏன்” கழுகு கரிகாலன் திருப்பிக் கேட்டது.

“இரண்டாவதாகக் கேள்விக்கேட்கும் உரிமை எனக்குத்தான் வேண்டும்! இரண்டாவது புதிர் போடுவதற்குக் காக்கை கருப்பனுக்கு என்ன தகுதி இருக்கிறது? நான்தானே கழுகுக்கு அடுத்த தகுதியான நபராக இருக்க முடியும்? என்னைத்தானே பரமாத்மா என்று மக்களால் போற்றப்படும் கிருஷ்ணர் வாகன மாக்கிக் கொண்டுள்ளார். அதைப்பற்றி யாருமே சிந்திக்கவில்லையா? ஆனால் எல்லோராலும் வெறுக்கப்படும் சனிக்கு வாகனமான காக்கைக்கு இரண்டாவது இடம் தருவதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது?” என்று பருந்து பாப்பம்மாள் ஆவேசமாகக் கத்தியது.

“ஏன் என்னைக் கூடத்தான் முருகப் பெருமான் வாகனமாக்கி கொண்டுள்ளார். அதனால் எனக்கு தான் முன் உரிமை என்று நானும் கேட்கட்டுமா?” என்று மயில் மாதவி கேட்டது.

“அனைவரும் சற்று அமைதியாக இருங்கள் அதாவது பருந்து பாப்பாத்தி கூறுவது ஒருவகையில் நியாயமானதுதான். ஆனால் காடுகளில் உள்ள நிலைமைப்படி புத்திசாலித்தனத்தில் நம் எல்லோரையும் விட காக்கைதான் சிறந்தது! அதனால் அதற்கு இரண்டாவது புதிரைக் கூற வாய்ப்பளித்தேன். அது தவிர காக்கை கருப்பனைத்தானே நாம் மந்திரியாகவும் வைத்துள்ளோம்?. அதனால்தான் அவனுக்கு அந்த வாய்ப்பளிக்கப்பட்டது. இது சரிதானா?” என்று மற்ற பறவைகளை பார்த்து கேட்டது.

“ஆமாம் கழுகு கரிகாலன் கூறுவது சரியானதுதான். இரண்டாவது வாய்ப்பைக் காக்கை கருப்பனுக்கு அளிப்பதே முறையானது” எனச் சில பறவைகள் ஒத்துக்கொண்டன.

“சரி அப்படியானால் காக்கை கருப்பன் இப்போது இன்றைய இரண்டாவது புதிரை கூறுவார்” என்று கழுகு அறிவித்தது.

 

காக்கை கருப்பன் எழுந்து வெளிநாட்டுப் பறவைகளை நோக்கிப் புதிரைக் கூற ஆரம்பித்தது.

“இங்கு வாழும் 3 பறவையினங்களில் மொத்தமுள்ளவர்களைக் கணக்கிட்டோம். அதன்படி எங்கள் இனமும் குயில் இனமும் மயில் இனமும் ஒரு விதமான புதிரான அமைப்பில் இருந்தன.

அதாவது எல்லோருமே எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் 24 பேரைத் தவிர.

எல்லோருமே மயில் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் 24 பேரைத் தவிர என்று கூறலாம்.

எல்லோருமே குயில் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் 24 பேரைத் தவிர என்று கூறலாம்.

அப்படியானால் ஒவ்வொரு வகையிலும் எத்தனை பேர்கள் இருந்திருப்போம் என்று கணக்கிட்டுக் கூறுங்கள். இது தான் இரண்டாவது புதிர் என்று காக்கை கருப்பன் கூறியது.

“ஆகா இதுதான் சரியான கேள்வி” என்று மாடப்புறா மாணிக்கம் கூறியது.

வெளிநாட்டுப் பறவைகள் விழித்தன. பின்னர் தங்களுக்குள் கூடிப் பேசின. பின்னர் அந்தக் கூட்டத்தில் தலைமையாக இருந்த செஞ்சிவப்புக்கிளி, “ஐயா இந்தப் புதிர் சற்று சிரமமானதுதான். எங்களுக்கு நாளை காலை வரை வாய்ப்பு கொடுத்தால் இரவில் யோசித்து நாளை விடையைச் சொல்லிவிடுவோம்” என்று கேட்டது.

“அப்படியே இருக்கட்டும். உங்களுக்கும் யோசிக்க நேரம் வேண்டுமல்லவா? எனவே நாளை காலையில் நீங்கள் இதற்கான விடை கூறினால் போதுமானது.

சரி நண்பர்களே இன்று இரு புதிர்கள் கேட்கப்பட்டு விட்டபடியால் நாம் நாளை சந்திப்போம். அனைவரும் அவரவர் வேலைகளுக்குச் செல்லுங்கள்” எனக் கழுகு கரிகாலன் கூறிவிட்டு பறந்து சென்றதுவிட்டது.

மற்ற பறவைகளும் தமது கூடுகளை நோக்கி பறந்து சென்றுவிட்டன. பருந்து பாப்பாத்தி மட்டும் அங்கேயே சற்று யோசித்தவாறு நின்று கொண்டிருந்தது. அதனைக் கண்ட குயில் குப்பம்மா, “என்ன தீவிரமான யோசனை?” என்றது. “யாரு குப்பம்மா குயிலா? எல்லாம் இந்தக் கழுகு காகமும் செய்யும் வேலைகளைப் பற்றிதான் யோசிக்கிறேன்” என்றது பருந்து.

“சரி நாளை சந்திப்போம்” என்று கூறிவிட்டு பறந்தது பருந்து பாப்பாத்தி.

மறுநாள் பொழுது விடிந்தது. வெளிநாட்டு பறவைகள் ஒன்றுகூடிப் பேசின. “விடியவிடிய யோசித்தும் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லையே?” என்றது செஞ்சிவப்பு கிளி.

“இவங்க மனுசங்க மாதிரியே புதிர் போட்டா நமக்கு எப்படிப் புரியும் நமக்கு ஏத்தமாதிரி போட்டா யோசிச்சிச் சொல்லலாம்” என்றது எகிப்திய கழுகு.

“இங்கு வர்றதே நிம்மதியாத் தூங்கி நல்லா ஓய்வு எடுக்கலாமேன்னுதான். ஆனா இவங்க என்னடான்னா புதிர் போட்டு நம்ம மண்டையை உடைக்கிறாங்க” என்றது வெளிநாட்டுப் பருந்து பஞ்சுருட்டான்.

“நேத்து மாதிரி தூங்கிகிட்டு இருக்கிற சுவர்க்கப் பறவை எந்திரிச்சு ஏதாவது சொன்னாத்தான் உண்டு இல்லையென்றால் தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டியது தான்” என்று வருத்தத்துடன் கூறியது செஞ்சிவப்புக் கிளி.

உள்ளுர்ப் பறவைகள் தமது தலைவரான கரிகாலன் கழுகின் பின்னே அணிவகுத்து வந்தன. எல்லாப் பறவைகளும் மரக்கிளைகளில் அமர்ந்தன.

“என்ன இரண்டாவது புதிருக்கு விடை கூறலாமா?” என்று கழுகு கரிகாலன் கேட்டது.

வெளிநாட்டுப் பறவைகள் திருதிருவென விழிக்க ஆரம்பித்தன.
அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த சிட்டுக் குருவி சின்னான் இரண்டாவது புதிருக்கான விடையைக் கூறிவிட்டு மற்றவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் பறந்து சென்றுவிட்டது.

“விடையைக் கூறவேண்டியவர் அவர்கள், இவனை யார் கேட்பார்கள்?” என்று கோபப்பட்டன சில பறவைகள்.

“சரிவிடுங்கள், நமது வெளியூர் விருந்தனர்களை இன்று சின்னான் காப்பாற்றிவிட்டான். எனவே இப்போது அடுத்து என்ன செய்வது என்பதை யோசிப்போம்” என்றது கழுகு கரிகாலன்.

வெளிநாட்டுப் பறவைகள் சற்று நிம்மதியாக தங்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றிய சிட்டுக்குருவி சின்னானுக்கு மனதிற்குள்ளாகவே நன்றி கூறின.

“சரிதான் நடந்ததை விடுங்க. இனிமே அடுத்த புதிரை சொல்லி அதற்கான விடைகளையாவது அவங்ககிட்டேயிருந்து வாங்குற வழியை பாருங்க!” என்றது காக்கை கருப்பன்.

“அது சொன்ன விடை என்ன?” என்று மயில் மாதவி கேட்டதும் வாணி பதில் சொன்னது அது கூறிய விடையில்

மயிலும் குயிலும் 24 பேர் என்றும்

குயிலும் காகமும் 24 பேர் என்றும்

மயிலும் காகமும் 24 பேர் என்றும் கூறியதால் ஒவ்வொரு இனமும் சமநிலையில் அதாவது 12+12+12 என்று கணக்கிட்டுப் பதில் கூறியது” என்றது வெளவால் வாணி.

“பரவாயில்லையே. பதிலைக் கூட மறக்காமல் வைத்திருக்கிறீர்களே!” என்று ஆந்தை அருக்காணி பாராட்டியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.