புதிர் கணக்கு – 24

“வெளிநாட்டுலேயிருந்து வந்திருக்கிற நண்பர்களே? கவனமாகக் கேளுங்கள்.”

இந்தக் காட்டில் பூத்துக் குலுங்கும் மலர்களையுடைய பலவகையான மரங்கள் உள்ளன‌. அவற்றிற்கிடையே மல்லிகை மலர்களையுடைய செடிகளும் உள்ளன.

சில மல்லிகைச் செடிகளில் நான்கு பூக்கள் பூத்துள்ளன.

சில மல்லிகைச் செடிகள் இரண்டு பூக்களை மட்டுமே பூத்துள்ளன.

ஆனால் மொத்த மலர்களை எண்ணிப் பார்த்தால் நூறு மலர்கள் வருகின்றன.

அப்படியானால் இருமலர்களுடையவை எத்தனை செடிகள்? நான்கு மலர்களுடையவை எத்தனை செடிகள்? இதுவே எனது கேள்வி” என்று கூறிவிட்டு அமர்ந்தது.

 

“குயிலுக்குப் பாடத்தான் தெரியும்னு நெனச்சேன். இங்க என்னன்னா அது கூடப் புதிர் போடுது?” என்று ஆச்சரியப்பட்டது ஒரு புல்புல்பறவை.

“சரிவிடை தெரிந்தவர்கள் உடனே கூறினால் நன்றாக இருக்கும்” என்று கழுகு கூறிது.

“நாங்கள் நாளைக்குப் பதில் கூறுகிறோம்” எனச் செஞ்சிவப்புக் கிளி கோரிக்கை விடுக்க அதனை ஏற்றுக் கொண்ட உள்ளுர் பறவைகள் கலைந்து சென்றன.

சிட்டுக்குருவி சின்னான் மட்டும் சற்று தயங்கித் தயங்கிப் பறப்பதுப் போலப் பாசாங்கு செய்தது. பின்னர் அனைவரும் சென்ற பின்னர் வெளிநாட்டுப் பறவைகள் இருந்த இடத்திற்கு வந்தது.

“என்னப்பா நீங்கள் இவ்வளவு மோசமா இருக்கீங்க. வெளிநாட்டுல இருந்து பலமைல் தூரம் பறந்து வாறீங்க. பல ஊர்களைக் கடந்து வாறீங்க. பல காடுகளை மேடுகளைக் கடந்து வாறீங்க ஆனால் எளிதான கணக்குகளுக்குப் பதில் தெரியலியே என்று ஆரம்பித்தது சின்னான்.

“தம்பி நாங்க வருசத்துக்கு ஒரு தரம் இங்க வந்து எங்க ஊருக்குப் போவதற்கே பல மாதம் ஆயிரும் பிறகு எங்களுக்கு உணவு சேகரிக்கனுமில்லே இதுக்கு மீதி நாளைக் கழிச்சிடுவோம். இதுல போயி நாங்க கணக்கக் கண்டமோ? ஆமணக்க கண்டமோ?” என்று பதில் கூறியது வெளிநாட்டிலிருந்து வந்த சூலக் கொண்டை புறா.

“ஆமா உங்க ஊர்ல ஒரு பறவையை எரிச்சி சாம்பலாக்கிப் போட்டாலும் கூட உயிர் பொழைச்சி எழுந்து பறக்குமுன்னு சொல்றாங்களே இது உண்மையா?” என்று கேட்டது சிட்டுக்குருவி சின்னான்.

“ஆமா . . . ஆமா எங்க தாத்தா எங்களுக்குக் கதைகள் சொல்லும்போது இந்தப் பறவையைப் பத்திச் சொல்லியிருக்காரு” என்று கூறியது புல்புல்.

“என்ன கதைகள் கேட்டீங்க” சின்னான் மீண்டும் கேட்டது.

“அந்தப் பறவைக்குப் பீனிக்ஸ் பறவைன்னு பேராம். அத தீயிலப் போட்டு எரிச்சாலும் சாம்பலாகிக் கெடக்குமாம். திடீருனு எழுந்து பறந்து போயிருமாம்” அதக் கொன்னவன் ஏமாந்து போவானாம்” என்று விளக்கமளித்தது புல்புல்.

“இதோ மாதிரி எங்க ஊர்லயும் நடக்கும். செத்தது மாதிரி நடிச்சி பிறகு தப்பிக்கிறதில்லே. சாவதற்கு முன்னாலேயே தப்பிச்சிடுவோம்” என்றது சின்னான் குருவி.

“அது எப்படி மனுசங்க யாரு கையிலாவது கிடைச்ச பிறகு தப்பிக்க முடியுமா?” செஞ்சிவப்புக் கிளி சந்தேகம் கேட்டது.

“ஆமா. மனுசங்க கிட்டயிருந்தும் நாங்க தப்பிச்சிருக்கோம்னா பாத்துக் கோங்களேன். ஒரு சமயம் ஒரு வேடன் வலையைவிரிச்சி அதற்குள்ள நெல்மணிகளைத் தூவி வச்சான். அங்க போன எங்க புறாக்கூட்டம் ஒன்னு அதுல மாட்டிக்கிச்சு எவ்வளவோ முயற்சி செஞ்சி பாத்தாங்க் முடியலே.

தூரத்துல வேடன் வர்றது தெரிஞ்சதும் எல்லோரும் செத்தது மாதிரி கிடந்தாங்களாம். அவன் வந்து பாத்திட்டு இன்னக்கி நல்ல வேட்டைதான்னு எடுத்துப் போக நெனக்கிம்போது எல்லோரும் ஒன்னா சேர்ந்து பறந்து தப்பிச்சாங்களாம்” என்று சிட்டுக் குருவி சின்னான் தான் அறிந்த கதைகளை கூறியது.

“அந்த வலையிலயிருந்து எப்படி வெளியே வந்தாங்க”

செஞ்சிவப்புக்கிளி கேட்டது.

“வலையை எலிக அறுத்திருக்கும்” என்று சின்னான் பதில் கூறியது.

“சரி தம்பி, உங்க ஆளுங்க என்ன இவ்வளவு மோசமான புதிர்களைக் கேட்டு எங்களத் தொந்தரவு பன்றாங்க!” என்றது புல்புல் பறவை.

“வெளியூர்லயிருந்து யாராவது வந்தா அவங்க விருந்தினரா நெனச்சி வரவேற்று விருந்து வச்சி அனுப்புறதான் எங்களோட பரம்பரை குணம்”, இவ்வாறு சின்னான் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சூலக் கொண்டைப் புறா குறுக்கிட்டு

“எங்கள் கேள்விக்குப் பதில் தெரியலேனா இங்க இருந்து போயிடனுமுன்னு சொல்லிக் கட்டாயப்படுத்துறது கூட உங்க பரம்பரைக் குணமோ?” என்று கேட்டது.

“சரி ஏதோ அவங்க புரியாம யாரோ ஒருத்தரு சொன்ன யோசனையில இந்த மாதிரி செய்யிறாங்க. அது சரியில்லாததால்தான் உங்களுக்கு நான் விடைகளைச் சொல்லித்தாரேன்” என்று கூறியது சிட்டுக் குருவி சின்னான்.

“சரி ரொம்ப நேரமாயிட்டது. நான் கிளம்புறேன்” என்று புறப்பட்ட சின்னான் அவர்களிடம் நான்காவது புதிருக்கான விடையைக் கூறிவிட்டுப் பறந்து சென்று மறைந்தது.

மறுநாள் உள்ளுர்ப் பறவைகள் வழக்கம் போலக் கூடின. குருவி குறுமணியும் சிட்டுக் குருவி சின்னானும் அருகருகே அமர்ந்திருந்தன. பருந்து பாப்பாத்தியை அங்கு காண இயலாததால் கழுகு கரிகாலன் கேட்டது. “என்ன பாப்பாத்தி வரவில்லையா?”

“அதுக்கு உடல்நிலை சரியில்லையாம்” பதில் கூறியது குயில் குப்பு.
“சரி நண்பர்களே! நேற்றைய நான்காவது புதிருக்கான விடையை இப்போது கூறலாமே!” என்று வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்து கரிகாலன் கேட்டது.

மெதுவாக எழுந்த வெளிநாட்டு பறவைகள் ஒன்றான கொக்கு குமரன் ஏதோ ஒரு பதிலைக் கூறியது.

“கொக்கு குமரனின் பதில் சரியானது தானே?” என்று கரிகாலன் கழுகு, குயில் குப்புவைக் கேட்டது.

“மிகவும் சரியான பதில்தான்” குயில் குப்பம்மாள் பதில் கூறியது.
இவ்வாறு வெளிநாட்டுப் பறவைகளும் உள்ளுர் பறவைகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த அதே வேளையில், காக்கை கருப்பனின் மீது பொறாமை கொண்ட பருந்து பாப்பாத்தி அன்றைய கூட்டத்திற்கு வராமல் இருந்தது. சிறிது தொலைவில் இருந்த உயரமான அசோக மரத்தின் மீது யாரும் அறியாதவாறு இங்கு நடப்பதைக் கண்காணித்தது.

வெகு சுவையாக விவாதத்தில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்து கொண்டு மெதுவாகச் சத்தமின்றி அந்த மறைவிடத்தை விட்டு வெளியே வந்தது.

நேராகக் காக்கை கருப்பனின் கூட்டை நோக்கிப் பறந்து சென்று அங்கு பாதுகாப்பாக இருந்த அதன் முட்டைகளைக் கண்டது. கருப்பன் மீது உள்ள கோபத்தில் முட்டைகளை எடுத்துத் தரையில் எறிந்து உடைத்துவிட்டு மீண்டும் பறந்து வந்து கூட்டத்துடன் கலந்து கொண்டது.

 

புதிருக்கான விடை:

“நான்காவது புதிரைக் குயில் குப்பு கேட்டது. இருமலர்களையும் நான்கு மலர்களையும் கொண்ட மரங்களில் மொத்த மலர்களின் எண்ணிக்கை நூறு என்று வந்தால் ஒவ்வொரு மரங்களிலும் எத்தனை மலர்கள் இருக்கும் என்பதே அது கேட்ட கேள்வி.

“ஆமாம். அதற்கான விடையைக் கொக்கு குமரன் சொல்லிவிட்டதே!” என்றது குயில் குப்பம்மாள்.

“அதுதான் இல்லை. அந்த விடை கூடச் சின்னான் சொல்லிக் குமரன் கொக்கு சொன்னது தான்” என நடந்ததை வெட்ட வெளிச்சமாக்கியது வெளவால் வாணி.

“அதற்கான விடை என்ன? மயில் கேட்டது,

“அதற்கு இரு மலர்களுடைய மரங்கள் 10 என்றால் 20 மலர்களும் நான்கு மலர்களுடைய மரம் 20 என்றால் 80 மலர்கள் என்றும் ஆக

10 மரங்களில் 2 வீதம் 20 மலர்கள்

20 மரங்களில் 4 வீதம் 80 மலர்கள் ஆக

30 மரங்களில் 100 மலர்கள்

என்று விடை சொன்னது குமரன் கொக்கு” என்றது வெளவால் வாணி.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.