“நண்பர்களே! கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இங்கு பறவைகளான நாங்கள் ஒரு சமயம் கடவுளை வழிபாடு செய்ய முடிவு செய்து விழா எடுத்தோம். அதில் பிரசாதமாகத் திராட்சை பழங்கள் அளிக்கப்பட்டன.”
பறவைகள் தரத்தைப் பொறுத்து சிலருக்கு 5 பழங்களும் சிலருக்கு 10 பழங்களும் சிலருக்கு 20 பழங்களும் சிலருக்கு 25 பழங்களும் சிலருக்கு 50 பழங்களும் என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
மொத்தம் 500 பழங்கள் இருந்தன என்றால்
5 பழங்கள் பெற்றவர்கள் எத்தனை பேர்?
10 பழங்கள் பெற்றவர்கள் எத்தனை பேர்?
20 பழங்கள் பெற்றவர்கள் எத்தனை பேர்?
25 பழங்கள் பெற்றவர்கள் எத்தனை பேர்?
50 பழங்கள் பெற்றவர்கள் எத்தனை பேர்?
என்று கண்டுபிடித்து விடை கூறுங்கள்” என்றது மயில் மாதவி.
வெளிநாட்டுப் பறவைகள் திருதிருவென விழித்து கொண்டிருந்த வேளையில் காகம் கருப்பன். “எங்கே அந்தப் பொடியன் சின்னானைக் காணோம்”, என்றது.
“அவனைக் காலையில் பார்த்தேனே. இங்கு தானே இருந்தான்” என்றது குருவி குறுமணி.
திடீரெனத் தூங்கிக் கொண்டிருந்த சுவர்க்கப் பறவையிடமிருந்து ஒரு விடை வெளிவந்தது. ஆனால் அதுவோ தூங்கிக் கொண்டிருந்தது.
“என்ன விடை சரியானது தானே?” என்று புல்புல் பறவை கேட்டதும் அனைத்து உள்ளுர்ப் பறவைகளும் ஆச்சரியப்பட்டன.
“தூங்கிக் கொண்டே பேசுபவனை இப்போது தான் பார்க்கிறோம்” என்றது குருவி குறுமணி.
“நாங்க வெளிநாட்டுல இருந்து இங்க வரதுக்குப் பல பகல் பல இரவுகள் ஆகுமில்லே? அப்பல்லாம் நாங்க பறக்கும் போதே தூங்கிப் பழகினவங்க. ஆனா உங்களுக்கு இது புதுமையா தெரியும்” என்று சமாளித்தது செஞ்சிவப்புக்கிளி.
“அப்படியா?” என வாயைப் பிளந்தன மற்ற உள்ளுர்ப் பறவைகள்.
“உங்க விடை சரியானதுதான்” என்று மாதவி மயில் ஒத்துக் கொண்டதும் வெளிநாட்டுப் பறவைகள் சற்று நிம்மதியடைந்தன.
“திராட்சைப் பழங்களை ஆளுக்கு தக்கபடி பிரித்தனராம். மொத்தம் 500 பழங்களாம். அவற்றை எவ்வாறு பிரித்தனர் என்பதே அதனுடைய கேள்வியாக இருந்தது. அதற்கான விடையையும் சிட்டுக்குருவி சின்னான்தான் சரியாகக் கூறியது” என்றது வெளவால் வாணி.
“இல்லையே. சுவர்க்கப் பறவையல்லவா கூறியது?” என்று குருவி குறுமணி கேட்டது.
“சுவர்க்கப் பறவையா? அது தூங்கிக் கொண்டல்லவா இருந்தது? இவன்தான் அது மாதிரி குரலில் விடையைச் சொல்லிவிட்டு ஓடினான்” வெளவால் வாணி விளக்கமளித்தது.
“அப்படியா அதானே? தூங்கிய அது எப்படி விடை சொன்னதுன்னு நாங்க அப்பவே நெனச்சோம்” குயில் குப்பம்மாள் ஒத்துக் கொண்டது.
அவனது விடையின்படி
5 பழங்கள் வீதம் 20 பேர் 100ம்
10 பழங்கள் வீதம் 10 பேர் 100ம்
20 பழங்கள் வீதம் 5 பேர் 100ம்
25 பழங்கள் வீதம் 4 பேர் 100ம்
50 பழங்கள் வீதம் 2 பேர் 100ம்
என்று மொத்தமுள்ள 100 பழங்களை 41 பேர் பகிர்ந்து கொண்டனர்”, என்று விடையைக் கூறியது வாணி.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)