புதிர் கணக்கு – 27

“என்னப்பா நீ! உன் கூடப் பிறந்த சின்னான் சிறுபயலா இருந்தாலும் எவ்வளவு புத்திசாலியா இருக்கான். எல்லாக் கணக்குக்கும் விடை தெரியுமுன்னு சொல்லுறான். ஆனா அவனோட அண்ணன் நீ ஒன்றுமே தெரியாதுங்கிறியே?” என்று கேட்டது குயில் குப்பம்மாள்.

“சரி மாட்டேன்னு சொன்னாலும் விடமாட்டேங்கிறீங்க. உங்க எல்லோரோட ஆசைப்படி இந்த ஆறாவது புதிரை நானே கேட்கிறேன்” என்று கூறிவிட்டுப் புதிரைக் கூற ஆரம்பித்தது குருவி குறுமணி.

“ஐயா நான் ஒரு சமயம் ஊரைச் சுத்திப் பார்க்க நெனச்சிப் பக்கத்து ஊருக்குள்ள போயிருந்தேன். அந்தச் சமயம் அங்கு எங்க பார்த்தாலும் வாழைப்பழமும் மாம்பழமும் நெறஞ்சி இருந்தன. அத ஒரு வண்டியில வச்சி இரண்டு பழங்களையும் ஒரு ஆளு வித்துகிட்டு இருந்தாரு.”
முதல் நாள் இரவில் அவர் வீட்டுக்குப் போயி அவரோட மனைவிகிட்ட “இன்னக்கு 100 பழம் வித்திருக்கேன். இந்தா 55 ரூபாய்” என்று பணம் கொடுத்தார்.

இரண்டாம் இரவில் வீட்டுக்குப் போனதும் தன் மனைவியை அழைத்து “இன்னக்கு 100 பழம் வித்திருக்கேன். இந்தா 150 ரூபாய்” என்று பணம் கொடுத்தார்.

அந்த வியாபாரியின் மனைவியும் பழங்களை எண்ணிச் சரிபார்த்துவிட்டுப் பழம் விற்ற பணம் சரியாக இருக்கிறது என்று ஒத்துக் கொண்டாள்.

அப்படியானால் முதல் நாள் எத்தனை மாம்பழம் விற்றிருந்தார்? எத்தனை வாழைப்பழம் விற்றிருந்தார்?

இரண்டாம் நாள் எத்தனை மாம்பழம் எத்தனை வாழைப்பழம் விற்பனை செய்திருந்தார்? என்று கண்டுபிடித்துக் கூறுங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்தது.

 

உள்ளுர்ப் பறவைகளின் பார்வை முழுவதும் உறங்கிக் கொண்டிருந்த சுவர்க்கப்பறவையை நோக்கியே இருந்தது. ஆனால் அது எப்போதும் போல தூங்கிக் கொண்டிருந்தது.

சற்று தூரத்தில் தனது இறக்கைகளை விரித்தவாறு விநோதமாக அமர்ந்திருந்த கொக்கு குமரன் சரியான விடையைக் கூறிவிட்டுத் தலையை தனது இறக்கைகளினுள் நுழைத்துக் கொண்டது.

“அட குமரன் கொக்கு பதில் சொல்லிவிட்டதே” என்று ஆச்சரியமாகக் குறுமணி கூறியது.

“பரவாயில்லை. நீங்க தப்பிச்சிகிட்டே வர்றீங்க” என்றது காக்கை கருப்பன், வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்து.

 

ஆறாவது புதிருக்கான விடையைக் கொக்கு குமரன் கூறியது.

“பழ வியாபாரி முதல் நாள் 100 பழங்களை 55 ரூபாய்க்கு விற்பனை செய்தாராம்; இரண்டாவது நாள் 100 பழங்களை 150 ரூபாய்க்கு விற்பனை செய்தாராம். என்றால் பழங்களின் விலை என்ன என்பது தான் கேள்வி.”

 

அந்த வியாபரி முதல் நாளில்:

0.50 பைசா வீதம் 99 வாழைபழங்களை 49.50 ரூபாய்க்கும்

ரூ.5.50 வீதம் 1 மாம்பழத்தை 5.50 ரூபாய்க்கும்

ஆக மொத்தம் 100 பழங்களை 55 ரூபாய்க்கு விற்பனை செய்தாராம்.

 

இரண்டாவது நாளில்:

0.50 பைசா வீதம் 80 வாழைபழங்களை 40 ரூபாய்க்கும்

ரூ.5.50 வீதம் 20 மாம்பழத்தை 110 ரூபாய்க்கும்

ஆக மொத்தம் 100 பழங்களை 150 ரூபாய்க்கு விற்பனை செய்தாராம்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)