கழுதை

புதிர் கணக்கு – 3

“மூன்றாம் நாளுக்கான மூன்றாவது புதிரைக் கவனமாகக் கேளுங்கள்” என்று கூறி நரி புதிர் கணக்கை ஆரம்பித்தது.

 

நமது காட்டில் வாழும் எறும்பார் தன்னிடமிருந்த அரிசி உணவில் முழுமையானதும், உடைந்ததுமாகச் சேர்த்து மொத்தமாக 105 அரிசிகள் இருந்தன. அவற்றை தனது மக்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்க எண்ணினார்.

உடனே எங்களை அழைத்து எங்கள் முன்பாக மூத்த மகனுக்கு 50 அரிசி மணிகளையும், அவனுக்கு அடுத்தவனுக்கு 30 அரிசி மணிகளையும், மூன்றாமவனுக்கு 25 அரிசி மணிகளையும் பகிர்ந்தளித்தார்.

எண்ணிக்கையில் தான் வேறுபாடு உண்டே ஒழிய அரிசி மணிகள் முழுமையானதும், உடைந்ததுமாக இருந்தபடியால் அவர்கள் மூவரும் ஒரே அளவான அரிசி மணிகளை பெற்று திருப்தி அடைந்தனர்.

அப்படியானால் எறும்பார் ஏழுமலையிடம் இருந்த அரிசி மணிகளில் உடைந்தவை எத்தனை? முழுமையானவை எத்தனை? இது தான் இன்றைய புதிர்” என்று கூறிவிட்டு தனது ஆசனத்தில் அமர்ந்தார் நரியார்.

 

“சரி நாளை மாலை பதிலோடு வருகிறோம்” என்று கூறிவிட்டு ஒவ்வொன்றாக கலைந்து சென்றன.

“மந்திரியாரே நீங்கள் கூறிய புதிர் எறும்பார் ஏழுமலையின் வீட்டில் நடந்தது தானே?” காட்டெருமை கனகன் கேட்டது.

“ஆமாம் உண்மையில் என் கண்முன்னே நடந்தது தான்” பதில் கூறினார் நரியார்.

“அப்படியானால் எறும்பின் குழந்தைகளில் யாராவது பதில் கூறுவது சுலபமாக இருக்குமே. ஏனென்றால் அவர்கள் அதன் விடையை அறிந்திருப்பார்களே” என்று காட்டெருமை கன்று கனகன் மீண்டும் கேட்டது.

“உனது கேள்வி நியாயமானது தான் ஆனால் விடைகளை எறும்பு ஏழுமலையின் புதல்வர்கள் கூற முடியாது. ஏனென்றால் நான் எண்ணிக்கையை மாற்றிக் கூறியுள்ளேன்.” என்று மந்திரியார் கூறுவதைக் கேட்ட காட்டெருமை கனகன் திருப்தியோடு தனது கொம்புகளை ஆட்டியவாறே நகர்ந்து சென்றது.

அனைத்து விலங்குகளும் சென்ற பின்பு நரியார் அரண்மனையினுள் சென்று விட்டார்.

மறுநாள் காலை வேளையில் சிங்கராஜா அரசவை கூடியது. சேவகன் கழுதை காங்கேயனால் அழைத்து வரப்பட்ட காக்கை காளி மன்னரின் முன்பாக நின்று கொண்டிருந்தது.

“மன்னா தங்களது ஆணைப்படி நமது நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் புதிர் போட்டு விடை கேட்பது மூன்று நாளாக நடைபெற்று வருகிறது. அனைத்து மிருகங்களும் தங்களது குழந்தைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என தாங்கள் உத்தரவு கொடுத்துள்ளீர்கள். ஆனால் காக்கை காளி மட்டும் தனது மகன் சின்னகாளியை அங்கு அனுப்பவில்லை. நேற்று வேறு சிலர் சென்று அழைத்தும் சின்னக்காளி வர மறுத்து விட்டதாம். இந்த செயல் தங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது” என்று மந்திரியார் காக்கையின் மீது தனது குற்றச்சாட்டை கூறியது.

“என்ன மந்திரியார் கூறும் குற்றச்சாட்டு உண்மைதானா?” மகாராஜா சிங்கம் காக்கையைப் பார்த்துக் கேட்டது.

“மகாராஜா இந்த மந்திரியாரின் தாத்தா என் தாத்தாவிடம் ஏமாற்றி வடை பறித்த கதை தாங்களும் அறிந்ததுதானே எங்கே இவரும் எங்களை ஏமாற்றுவாரோ என்ற சந்தேகத்தின் விளைவால்தான் நான் எனது மகனை இங்கு அனுப்ப மறுக்கிறேன். வேறொன்றுமில்லை” காக்கை காளி பதில் கூறியது.

“என்ன எனது காட்டில் என் கட்டுப்பாட்டில் என் மந்திரியார் பிறரை ஏமாற்றுவதா? அதெல்லாம் நீங்களும் நம்பலாமா?” என்று மகாராஜா கோபமாகக் கேட்டது. பின்னர் சற்று கோபம் தணிந்த குரலில் காக்கை காளியிடம் கூறியது.

“நீங்கள் நமது மந்திரியார் மீது சந்தேகப்படுவது மிகவும் தவறான செயலாகும். அவர் மிகவும் நல்லவர். அவரது புத்திசாலிதனத்தால் நம் காட்டில் வாழும் அனைவரும் அறிவு வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்றுதான் இந்த திட்டத்தை நானே நடத்தச் சொன்னேன். நாளை முதல் உனது மகன் சின்னக்காளியை தவறாது அனுப்பி வைக்க வேண்டும். இது மகாராஜாவின் உத்தரவு” என்றது.

“சரி மகாராஜா தங்களது ஆணைப்படியே நடக்கிறேன். போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு காக்கை காளி பறந்து சென்றதும் மன்னரும் அரண்மனையின் உள்ளே செல்ல அரசவை கலைந்தது.

நரியாரும் எழுந்து உள்ளே சென்று ஓய்வு எடுத்தவாறே யோசிக்கலானார். “சே இந்த காக்கைகாளி மட்டும் மனிதர்களைப் போலவே நடந்து கொண்டதே. தாத்தா காலத்தில் நடந்த சம்பவத்தை மறக்காமல் பகைமை பாராட்டுவது போல பேசுகிறதே” என்று நினைத்து மனம் சஞ்சலமடைந்தது.

அன்று மாலை அனைத்து மிருகங்களும் வழக்கம் போல கூடின. மந்திரியாரும் தனது ஆசனத்தில் அமர்ந்தார்.

“நேற்று மூன்றாவது புதிருக்கான விடையைத் தெரிந்தவர்கள் கூறலாம்” என்று அறிவிப்பைச் சொன்னவுடன், எலிக்கண்ணன் எழுந்து நின்று “ஐயா, நான் நேற்று இங்கு வர இயலவில்லை அதனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நேற்றைய புதிரை மீண்டும் ஒருமுறை தாங்கள் கூறினால் நான் விடையைக் காண முயற்சிக்கலாம் அல்லவா?” என்று கேட்டது.

“நேற்று வரவில்லை என்றால் உனது நண்பர்களிடம் கேட்டு விடையைத் தெரிந்து கொள்வது தானே” என்றது நரியார்.

“ஐயா, நான் யாரையும் சந்திக்கவில்லை” எலிக்கண்ணன் பதில் கூறியது.

“யாரையும் சந்திக்கவில்லை என்றால் உனக்கு அக்கறை இல்லை என்றுதானே பொருள். அக்கறையுள்ளவர்கள் வலிந்து சென்று புதிரைக் கேட்டு விடையைக் கண்டுபிடித்திருக்கலாமே என்று மந்திரியார் கூறவும் எலிக்கண்ணன் அமைதியாக தலை குனிந்தவாறே அமர்ந்து விட்டது.

சேவகனான கழுதை காங்கேயனே அவசரப்பட்டு விடை கூறியது.

“காங்கேயா விடையை உன்னிடம் கேட்கவில்லை. பதிர் போடப்பட்டது குழந்தைகளுக்குத்தானே நீ செய்தது மாபெரும் தவறு. இனி ஒருமுறை இது போல் தவறு செய்தால் உனக்கு தண்டனை கிடைக்கும்” என்று எச்சரித்துவிட்டு கூட்டத்தைப் பார்த்து

“குழந்தைகளே நமது சேவகன் கழுதை காங்கேயன் கூறிய விடை சரியானதுதான். இதைக் காங்கேயன் கூறியதால் யாருக்கும் மதிப்பெண் கிடையாது” என்று அறிவித்தது.

“யார் இவரா புதிருக்கு விடை கூறினார்” என்று வெட்டுக்கிளியார் மிகவும் ஆச்சரியப்பட்டு கேட்டார்.

“ஆமாம் ஐயா ஆவல் மிகுதியால் நானே அவசரப்பட்டு பதில் கூறினேன். அதனால் மந்திரியின் கோபத்துக்கு ஆளானேன்.” என்றது கழுதை காங்கேயன்.

“சரி எப்படி விடையைக் கண்டு பிடித்தீர்கள்” என்று கேள்வி கேட்டார் வெட்டுக்கிளியார்.

 

“ஐயா, எறும்பார் மூன்று மகன்களுக்கும் சரியான அளவு கொடுத்தாராம். ஆனால் எண்ணிக்கையில் மட்டுமே வேறுபாடு என்று கூறப்பட்டது.

முதல் மகனுக்கு 50 அரிசியும்

இரண்டாம் மகனுக்கு 30-ம்

மூன்றாம் மகனுக்கு 25-ம் ஆக தரப்பட்டது என்று மந்திரியார் கூறினார்.

நான் மூன்றாவது மகனுக்கு தந்த 25-ம் முழுமையான அரிசி மணிகள் என்று கணக்கிட்டு இரண்டாமவனுக்கு 10 உடைந்தவை 20 முழுமையானவை எனவும் முதல் மகனுக்கு 50-ம் உடைந்தவை என்றும் கணக்கிட்டு கூறினேன் ஐயா என்று கழுதை காங்கேயன் கூறியது.

 

“பரவாயில்லை குழந்தைகளை விட பெரியவரும் நன்கு சிந்திக்க முடியும் என நிரூபணம் செய்து விட்டார் நமது சேவகன்” என்று நரி கூறஅனைத்து மிருகங்களும் கைதட்டி சிரித்து ஆரவாரம் செய்தனர்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)