புதிர் கணக்கு – 31

சிட்டுக்குருவி சின்னான் எழுந்து பேசியது “நண்பர்களே இப்போது நான் கூறுவது ஒரு சுலபமான கணக்குதான். ஆனால் அதற்கு விடை காண்பது எளிதன்று” என்று பயமுறுத்திவிட்டுக் கணக்கைக் கூற ஆரம்பித்தது.

“நாற்பத்தைந்து என்ற எண்ணை நான்காகப் பிரித்துக் கொள்ளுங்கள். அதாவது பிரித்த எண்களைக் கூட்ட நாற்பத்தைந்து வரவேண்டும்.

அதில் ஒரு எண்ணை இரண்டால் கூட்ட வேண்டும்.

பின்னர் ஒரு எண்ணில் இரண்டைக் கழிக்க வேண்டும்.

மற்றொரு எண்ணை இரண்டால் பெருக்க வேண்டும்.

மீதமிருக்கின்ற இன்னொரு எண்ணை இரண்டால் வகுக்க வேண்டும்.

ஆனால் விடைகளோ ஒன்று போல அனைத்தும் சமமான அளவில் வரவேண்டும். இதுதான் கணக்கு. சரியான விடையைக் கூறுங்கள் பார்ப்போம்” என்ற கூறிவிட்டுச் சின்னான் அமர்ந்தது.

 

 

உள்ளுர் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் அனைத்தும் விடையைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக யோசனை செய்து கொண்டிருந்தன.
“இந்த பொடியனோட கணக்கை எப்படியாவது விடை கண்டுபிடிச்சிச் சொல்லி அவன மட்டம் தட்டணும்” என்று குருவி குறுமணி தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டது.

“என்ன விடையைக் கண்டுபிடிச்சவங்க யாருமே இல்லையா?” என்று கரிகாலன் கழுகு கேட்டது.

“கணக்கு நல்லாப் புரியுது. ஆனால் விடைத்தான் வரமாட்டேங்குது” என்று குறுமணி பதில் கூறியது.

அப்படியா? அப்ப சிட்டுக் குருவி சின்னான் கூறிய இந்தப் புதிருக்குச் சரியான விடையை குருவி குறுமணி நாளைக்குச் சொல்வான்” என்று கழுகு அறிவித்ததும் மனதில் பயம் நுழைந்தால் பரிதாபமாகப் பார்த்தது குருவி குறுமணி.

எல்லாப் பறவைகளும் அவரவர் கூடுகளை நோக்கிக் கலைந்து சென்றன.

“குறுமணி பரவாயில்லையே. நீ கூடப் பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டே; நீயும் உன் தம்பி சின்னான் மாதிரி கெட்டிக்காரன்னு பேர் வாங்கிடு!”என்றது பருந்து பாப்பாத்தி.

“இந்தப் பொடியனை மட்டம் தட்டனுமுன்னு நெனச்சி நான் விளையாட்டா ஏதோ சொல்ல நம்ம தலைவரு திடீருனு நாளைக்குப் பதிலை நான் தான் சொல்லணுமுன்னு சொல்லிட்டாரு. இப்ப என்ன செய்யிறது? எப்படி விடையைக் கண்டுபிடிக்கிறது? ஒன்னுமே புரியலே!” என்று புலம்பியது குருவி குறுமணி.

என்ன செய்வது என்று தெரியாத குருவி குறுமணி அங்குமிங்குமாகப் பறந்த வண்ணம் வெகுதூரம் சென்றுவிட்டது. அங்கு ஒரு பெரிய மலையைக் கண்டதும்,

“மலையே மலையே இந்த
மண்ணில் பெரியவன் நீயே
தலையில் நுழையாக் கணக்குப் புதிரைத்
தம்பி சின்னான் கேட்டான்
தலைவன் கழுகு கரிகாலன் அதனைத்
தந்தான் எனக்கே! நேற்று
விடையை அறிய நானும்
வழிதெரியாமல் தவிக்கின்றேன்
விடையை நீதான் எனக்கு
விளக்கிட வேண்டும் இன்று” என்றது.

குருவி குறுமணியின் பேச்சைக் கேட்ட மலையோ சிறிதுநேரம் யோசித்துப் பின்னர் குறுமணியிடம் பதில் கூறியது.

 

“குருவித் தம்பி குறுமணியே உன்
குட்டித் தம்பி சொன்ன புதிரை
அருவியண்ணன் அருகில் போய்
அன்பாய்ப் பேசி கேட்டுப்பார்”

என்று அருவி இருக்கும் இடத்திற்கு வழிகாட்டியது.
அருவியிடம் சென்று கேட்டால் கண்டிப்பாக விடை கிடைக்கும் என்ற ஆசையுடன் “சோ” வென்று கொட்டிக் கொண்டிருக்கும் அருவியை அடைந்த குறுமணி

 

“அருவி அண்ணா அன்பானவரே
அழைத்தது குருவி குறுமணி நான்
தலையில் நுழையாக் கணக்குப் புதிரைத்
தம்பி சின்னான் கேட்டிடவே
தலைவன் கழுகு கரிகாலன் அதனைத்
தந்தான் எனக்கே நேற்று!
விடையை அறிய நானும்
வழிதெரியாமல் அலைகின்றேன்!
விடையை நீதான் எனக்கு
விளக்க வேண்டும் இன்று” என்றது.

 

குறுமணியின் பேச்சைக் காதில் வாங்கிய அருவியும்

“குட்டித்தம்பி குறுமணியே!
குறும்போ உனக்கு மிக அதிகம்
எட்டி நானும் வெகுதூரம்
எந்த நாளும் ஓடுவதால்
விட்டுவிட எந்தனையே
வீசும் காற்றைக் கேட்டுப்பார்” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் ஓடிவிட்டது.

 

அருவி அண்ணனின் பதிலைக் கேட்ட குறுமணிக்கு மனதில் சிறிது வருத்தம் உண்டானது. ஆனாலும் காற்று இந்தக் கணக்குக்குக் கண்டிப்பாக விடை சொல்லும் என்று நம்பிக்கை ஏற்பட்டதால் சற்று வேகமாக வீசிக்கொண்டிருக்கும் காற்றை நோக்கிப் பேச ஆரம்பித்தது.

“மெல்லிய தென்றல் காற்றே!
மென்மையில் பிறந்தவன் நீயே
தலையில் நுழையாக் கணக்குப் புதிரைத்
தம்பி சின்னான் கேட்டிடவே
தலைவன் கழுகு கரிகாலன் அதனைத்
தந்தான் என்னிடமே
விடை அறிந்திட நானும்
வழிதெரியாமல் தவிக்கின்றேன்!
விடையைச் சொல்லி நீ எனக்கு
விளக்கிட வேண்டும் விரைவாக” என்று கேட்டது.

 

குருவி குறுமணியின் பேச்சைக் காதில் வாங்கிய காற்று அதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்தது.

“குருவித் தம்பி குறுமணியே!
குறும்பு உனக்கு அதிகம் தான்
விரும்பியவர்க் கெல்லாம் நானே
விடைகளைச் சொன்னால் என்னாகும்
கரும்பாய்க் கணக்கும் இனித்திடுமே
காலம் முழுவதும் திகட்டிடுமே! அதனால்
அருமைத் தம்பி குறுமணியே
அங்கு எரியும் நெருப்பைக் கேட்டுப் பார்.
அது சொல்லும் பதிலை உனக்காக” என்று காற்று பதில் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக ஓடியது.

 

குறுமணி மனம் நொந்துவிட்டது. சரி கடைசியாக நெருப்பிடமும் ஒருமுறை முயற்சி செய்வோம் என்ற முடிவுடன் நெருப்பிடம் சென்றது.

“சிகப்பாய் எரியும் நெருப்பண்ணா!
சிறிது என்னைப் பாரண்ணா
தலையில் நுழையாக் கணக்குப் புதிரைத்
தம்பி சின்னான் கேட்டான்!
தலைவன் கழுகு கரிகாலன் அதனைத்
தந்தான் எனக்கே! நேற்று
விடை தெரியாமல் தவித்ததால் நான்
மலையைக் கேட்டேன்; மலையில் ஓடும்
அருவியைக் கேட்டேன்; அதனைக் கடக்கும்
காற்றைக் கேட்டேன்; பதில் கிடைக்காததால்
உன்னைக் கண்டேன்
உதவி செய்யேன்” என்று கேட்டது.

 

குறுமணியின் கேள்வியை விவரமாக அறிந்து கொண்ட நெருப்பு அதற்கான பதிலை வெகு சுலபமாகச் சொல்லியது. பின்னர் குறுமணியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தது.

“குருவித்தம்பி குறுமணியே
விரைவில் பலரும் போற்றிடவும்
பருந்திலும் நீயே பெரியவன் என்று
பெயர் பெற்றிடவேண்டும்
போய் வா” என்று கூறி விடை கொடுத்தது.

 

தம்பி சிட்டுக் குருவி சின்னானின் புதிருக்கு விடையை அறிந்த மகிழ்ச்சியில் தனது வீடு நோக்கிப் பறந்து சென்றது குருவி குறுமணி.

மறுநாள் பொழுது விடிந்தது. பல பறவைகளும் அந்த மரக்கிளைகளில் தமது வழக்கமான இடங்களில் அமர்ந்தன. தலைவன் கரிகாலன் வந்து அமர்ந்தபின் அது குறுமணியை அழைத்து “என்ன குறுமணி பதிலைக் கூறலாமா”? என்று கேட்டது.

“ஓ…. நான் தயார்” என்று குறுமணி அறிவித்துவிட்டு விடையைக் கூற ஆரம்பித்ததும்

“சிகப்பாய் எரியும் நெருப்பு
சரியாய்ச் சொன்ன விடையிதுவாம்
அகத்தில் கணக்கை அறியாத
அண்ணன் குறுமணி சொன்னதல்ல” என்று சின்னான் கூறவும் மற்ற பறவைகள் அனைத்தும் குறுமணியைச் சந்தேகத்துடன் பார்த்தன.

“என்ன குறுமணி! சின்னான் கூறுவது உண்மைதானா? என்று கரிகாலன் கழுகு அதட்டியது. குறுமணி பதில் சொல்லாது மௌனம் சாதித்தது. அதனைக் கண்ட பருந்து பாப்பாத்தியும் மயில் மாதவியும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தன.

“பறவைகள் உலகம் புனிதமானது. இது மனிதர்கள் வாழும் பொய்யும் புரட்டும் நிறைந்த உலகமன்று. இதன் புனிதத்தன்மைக்கு மாறாக நடந்து கொண்ட குறுமணியைத் தண்டிக்க வேண்டும்” என்றது மயில் மாதவி.

“ஆமாம்; குறுமணிக்குத் தண்டனை அளிக்க வேண்டும்!”என்று பருந்து பாப்பாத்தியும் கத்தியது.

“அமைதியாக இருங்கள் நண்பர்களே! தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டுமா என்பதை குயில் குப்பம்மாள் முடிவு செய்யட்டும்” என்று கரிகாலன் கூறியது.

அமைதியாக இருந்த குயில் குப்பம்மாள் கலவரமடைந்தது. ஒரு பொய்யைச் சொன்ன குருவி குறுமணி தண்டிக்கப்பட வேண்டுமென்றால் நாம் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுப்பது?

இந்தப் பருந்து பாப்பாத்திக்கு அறிவே இல்லையா? காக்கையின் கூட்டில் முட்டைகளை அவன்தானே உடைத்தான். அதை மறந்து இப்போது குருவியைத் தண்டிக்க வேண்டும் என்று அதுவே கத்துகிறதே! தண்டனையைக் குருவிக்கு அளித்தால் நமக்கல்லவா தண்டனை கிடைக்கும்” என்று யோசித்தது.

“ஐயா எங்காவது தேடிக் கணக்குகளைக் கொண்டு வாருங்கள் என்று நீங்கள் தானே அறிவித்தீர்கள்” என்று கழுகைப் பார்த்து குயில் குப்பம்மாள் கேட்டது.

“ஆமாம். அனைவருக்கும் சேர்த்துதான் அறிவித்தேன்!” தலைவனான கரிகாலன் கூறியது.

“அப்படியானால் நீதான் கண்டிப்பாக பதில் கூறவேண்டும் என்று நீங்கள் கட்டளையிடும்போது விடையைத் தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து அதனைக் கூறுவது தவறில்லையே”! என்று குயில் குப்பம்மாள் கூறியது.

“அதுவும் சரிதான்” கரிகாலன் கழுகு பின்னர் அனைத்து பறவைகளையும் பார்த்துப் பின்வருமாறு கூறியது.

“அன்புப்பறவைகளே! யார் வேண்டுமானாலும் விடையைக் கூறலாம் என்ற போது ஒருவராவது சரியான விடையைக் கூறியிருக்கலாம். அது இயலாத நிலையில் தான் குறுமணிக்குக் கட்டளையிடப்பட்டது. அதுவும் விடையைப் பலரிடம் கேட்டு அறிந்து வந்திருக்கிறது. எனவே அதனை நாம் பாராட்ட வேண்டும்” என்று கூறிவிட்டுக் குறுமணியின் முதுகில் தட்டிக் கொடுத்தது.

“அப்பாடா தப்பினோம்” என்று குயில் குப்பம்மாள் பெருமூச்சுவிட்டது.

“இந்தக் குயில் வந்து காலை வாரிவிட்டதே!” என்று மயில் மாதவி புலம்பியது.

“சரி இன்னொரு சந்தர்ப்பம் வரட்டும் கவனித்துக் கொள்வோம்” என்று பருந்து பாப்பாத்தி மாதவியைச் சமாதானம் செய்தது.

 

“தீயிடம் கேட்டு விடை சொன்னான்” சின்னான் குறுமணியை குற்றம் சாட்டியது. “அவன் கூறிய பதில் என்ன என்று கரிகாலன் கழுகு கேட்டதும் வாணி விடையைக் கூறியது. 45 என்ற எண்ணைப் பிரித்து இரண்டால் கூட்டி இரண்டால் கழித்து இரண்டால் வகுத்து இரண்டால் பெருக்கி விடை ஒன்று போல வருமாறு செய்யச் சொன்னது. சின்னான் அதன்படி

45ஐ 8, 12, 5, 20 என்று பிரித்து

8 + 2 = 10 என்றும்

12 – 2 = 10 என்றும்

5 X 2 = 10 என்றும்

20 / 2 = 10 என்றும் விடையைச் சொன்னது குறுமணி

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)