புதிர் கணக்கு – 36

நண்பர்களே! இப்போது நான் புதிரைக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்.

ஒரு தந்தையார் தனது 4 மகன்களுக்கும் தான் சம்பாதித்த தோப்புகளைப் பிரித்துக் கொடுத்தார். அவருடைய தோப்பில் மாமரங்களும் தென்னை மரங்களும் இருந்தன. மொத்தம் 260 மரங்கள் இருந்தன.

ஆனால் நால்வருக்கும் மரத்தின் மதிப்பைப் பொறுத்து சமமான மதிப்பு வருமாறு பிரித்துக் கொடுத்தார். முதல் மகனுக்கு 80 மரங்களும், இரண்டாவது மகனுக்கு 70 மரங்களும், மூன்றாவது மகனுக்கு 60 மரங்களும், நான்காவது மகனுக்கு 50 மரங்களுமாக பிரித்தார் என்றால் மாமரத்தின் விலை என்ன? தென்னை மரத்தின் விலை என்ன? என்பது தான் முதலாவது புதிர்” என்று கூறிவிட்டுப் பாப்பாத்தி அமர்ந்தது.

பருந்து பாப்பாத்தியின் புதிரைக் கவனமாகக் கேட்ட பறவைகள் யோசித்தன. அதனால் அங்கு அமைதி நிலவியது. சிறிது நேரத்தில் அங்கு ஒரு மூலையில் இருந்து ஒரு சத்தம் கேட்டது.

“என்ன சத்தம்?” என்று அனைத்துப் பறவைகளும் பார்த்தன. எலியைப் போன்று தோற்றமுள்ள ஏதோ ஒன்று அடர்ந்த மரக்கிளையிலிருந்து விழுந்த வேகத்தில் உயரே பறந்து சென்று மறைந்துவிட்டது.

“யார் அது?” கரிகாலன் கழுகு கேட்டது. “ஏதோ ஒரு பறவை போலத் தெரிகிறதே!” என்று காக்கை கருப்பன் கூறியது.

“பறவையில்லையினா அது மரத்தில வந்து தங்குமா?” கருப்பன் மீண்டும் கேட்டது.

“பறவைதான்னு சொன்னா அதுக்கு தங்குறதுக்குக் கூடுன்னு ஒன்று இருக்கணுமில்ல அதெங்கே?” குயில் வாதாடியது.

“அது பறந்து தான் போனது. ஆனாலும் பறவை மாதிரி தெரியலையே” குருவி குறுமணி சந்தேகத்துடன் கூறியது.

“சரி. நாளைக்கு அது யாரென்று பார்த்துவிடுவோம். அதுவரை நீங்கள் யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம்” எனத் தலைவனான கரிகாலன் கழுகு கூறிவிட்டுப் “புதிருக்கான விடையைச் சொல்லுங்கள்” என்று அனைவரையும் திசை திருப்பியது. யாருமே விடை சொல்ல இயலாத நிலையில் பருந்து பாப்பாத்தியே விடையைக் கூறியது.

“அனைவருமே புதிய ஒருவரைக் கண்டவுடன் யோசிக்கும் சக்தியை இழந்து விட்டவர்களைப் போலக் காணப்படுகிறீர்கள்” என்றது கழுகு கரிகாலன்.

“ஆமாம் நமது தலைவர் கூறுவதும் சரிதான்” காகம் கருப்பன் ஒத்துக் கொண்டது.

“சிட்டுக் குருவி சின்னான் கூடப் பதில் கூற இயலவில்லையோ?” ஆந்தை அருக்காணி பொந்துக்குள் இருந்து கொண்டே கேட்டது,

“ஏன் நீங்களும் சொல்லலாமே!” சிட்டுக் குருவி சின்னான் பதில் கூறியது.

“மரத்தில் இருந்து திடீரென்று விழுந்து படாரென்று ஒன்று மறைந்துவிட்டதே. அது பற்றி அருக்காணிக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டது குருவி குறுமணி.

“அது எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா?” பொந்திலிருந்த ஆந்தை பேசியது.

“நாங்க யாருமே சரியாக பார்க்கல” கிளி கீதம்மா கூறியது.
“அது ஒரு எலி மாதிரி இருந்ததுக்கா” என்று குயில் குப்பம்மாள் கூறியது.

“ஆனா நம்மள மாதிரி இரண்டு இறக்கைகள் இருந்தன; அவற்றை நான் பார்த்தேன்” குறுமணி மீண்டும் கூறியது.

“ரெக்கையில்லாம பறக்க முடியுமா?” என்றது கிளி கீதம்மா.

“நேற்று இரவுதான் நானும் பார்த்தேன். அதோட பேரு வெளவால் வாணியாம். அதுவும் நம்ம இனம் தானாம். ஆனாலும் நம்மள மாதிரி முட்டையிடாம குஞ்சு பொரிக்காம இருக்குமாம்” என்று ஆந்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே காக்கை கருப்பன் குறுக்கிட்டது.

“முட்டையிடாம குஞ்சு பொரிக்காம பிறகு எப்படி நம்ம இனம்ன்னு சொல்ல முடியும்?”

“அருக்காணி சொல்லுறது முழுசா கேளேன். அதுக்கப்புறம் நீ சொல்லேன்” என்று கழுகு கரிகாலன் கருப்பனை கண்டித்தது.

கரிகாலன் சற்று கடுமையாகக் காக்கை கருப்பனைக் கண்டித்ததும் தனது முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டது. ஆனாலும் அருக்காணி என்ன சொல்கிறது என்பதை ஆவலுடன் கேட்டது.

“ஆந்தை அருக்காணி மீண்டும் தொடர்ந்தது. அது முட்டை போடாம, குஞ்சும் பொரிக்காம விலங்குகள் மாதிரி குட்டி போடுமாம்” என்று சொல்லிச் சற்று நிறுத்தியது.

ஒவ்வொரு பறவையும் அதிசயத்துடன் ஆந்தை அருக்காணி கூறிய செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தன.

“அதோட குட்டிகளுக்கு விலங்குகள் மாதிரியே பாலும் தருமாம்”

“அப்ப கண்டிப்பா அரு ஒரு விலங்கினம் தான்” என்று கிளி கீதம்மா கூறியது.

“இல்ல அது நம்ம இனம் தானாம். அதுவே சொன்னது. அதோட இன்னொரு முக்கியமான விசயமும் சொன்னது” ஆந்தை அருக்காணி புதிர் போட்டது.

“முக்கியமான விசயமா அது என்ன?” குறுமணி கேட்டது.

“இவ்வளவு விசயங்கள சொன்ன அந்தப் பறவை ஏன் நம்ம தலைவருக்கு முன்னால வந்து நம்மளோட பழகி நம்மள மாதிரியே தைரியமா இல்லாம ஏன் மறைஞ்சு வாழணும்”? என்று தலைவனான கரிகாலன் கழுகு கேட்டது.

“அது தான் தலைவரே அது சொன்ன முக்கியமான விசயம். அத நான் சொல்லுறத விட அதோட வாயாலேயே சொல்ல வச்சா ரொம்ப நல்லாயிருக்குமில்லையா?” ஆந்தை அருக்காணி கூறியது.

“ஆமாம்; அதுவும் சரிதான். அதன் வாயாலேயே அதுவே சொன்னாத்தான் சரியா இருக்கும்” என்று கரிகாலன் கழுகு ஒத்துக் கொண்டது.

“அத நாம எப்ப சந்திக்கிறது? எப்படிச் சந்திக்கிறது? அத நம்மள பார்த்து பயந்து ஓடிருச்சே! அது எப்ப திரும்பி வரும்! அல்லது அப்படியே போயிருமா?” குயில் குப்பம்மாள் அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுத்தது.

“ஒவ்வொன்னா கேட்க வேண்டியதுதான!” கிளி கீதம்மா குயிலைத் திட்டியது.

“அந்தப் புதுமையான பறவையான வெளவால் வாணியை நாம எல்லாரும் கண்டிப்பா சந்திக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை ஆந்தை அருக்காணி செய்து தரும்” கழுகு கரிகாலன் அனைவருக்கும் பதில் கூறியது.

ஆந்தையும் சரி என்று ஒத்துக் கொண்டதோடு சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு பின்னர் கூறியது. “இப்படிச் செய்யலாம்” என்று சற்று சத்தமாக அருக்காணி கூறியதை கேட்ட தலைவனான கரிகாலன் எப்படி என்று மீண்டும் கேட்டது.

“ஐயா தலைவரே! நான் அந்த வாணியை நேற்று இரவுல தான் சந்திச்சேன். நாம எல்லோரும் அத பார்க்கணுமின்னா இன்று இரவு இங்கு வந்து கூடுங்கள். அந்த வெளவாலை நானே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று ஆந்தை அருக்காணி ஒத்துக் கொண்டது.

சரியென அனைவரும் ஏற்றுக் கொள்ள இரவில் மீண்டும் கூடுவதென்ற முடிவுடன் அனைவரும் அவரவர் கூடுகளை நோக்கிப் பறந்தனர்.

அன்று இரவுப் பொழுது வந்தது. வானத்தில் வண்ண நிலவு மிதந்து கொண்டிருந்தது. பறவைகள் அனைவரும் புதிய விருந்தாளியைச் சந்திக்கும் ஆவலில் அங்கு கூடின.

வெளிநாட்டுப் பறவைகளும் ஆவலுடன் கூடியிருந்தன. செஞ்சிவப்புக் கிளி தனது நண்பர்கள் யாரும் இன்று இரவு தூங்கக் கூடாது என்றும் உள்ளுர் பறவைகளுடன் நாமும் உற்சாகமாக இருந்து புதிய பறவையைப் பற்றி அறியவேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தது.

ஆந்தை அன்று தனது கூட்டைவிட்டு வெளியே வந்து அனைவரையும் வரவேற்றது. அதுவரை ஆந்தையின் முகத்தைக் காணாமல் காக்கை கருப்பன் அதைக் கண்டு பயந்தாலும் தலைவன் கழுகு கரிகாலன் இருப்பதால் சற்றுத் தெம்பாக இருந்தது.

“சரி உன் தோழியை வரச் சொல் அருக்காணி” என்று கரிகாலன் கழுகு கூறியதும் ஆந்தை பறந்து உச்சி மரத்தையடைந்தது. சற்று நேரத்தில் அதனுடன் வித்தியாசமான ஒன்றும் பறந்து வந்து அனைவரும் காத்திருந்த வெளியில் வந்து அமர்ந்தது.

“நீதான் வெளவால் வாணியா?” கழுகு கரிகாலன் கேட்டது.

“ஆமாம் தலைவரே. என் பெயர் தான் வாணி” வெளவால் பதில் கூறியது.

“நான் தான் தலைவன் என்று எப்படி அறிந்தாய்?” கரிகாலன் மீண்டும் கேட்டது.

“உங்களைத் தான் தினமும் நான் பார்க்கிறேனே! பிறகு உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன?” வெளவால் பதில் கூறியது.

“நீ ஏதோ ஒரு செய்தியை எங்களுக்குக் கூறவேண்டும் என்று ஆசைப்படுவதாக அருக்காணி கூறியது. அது என்ன செய்தியோ?” என்று கிளி கீதம்மா கேட்டது.

கிளி கீதம்மா “ஆமாம்” உங்கள் அனைவரையும் அதாவது வெளிநாட்டுக்காரர்களையும் வைத்துக் கொண்டு தான் சொல்லவேண்டும் என நான் ஆசைப்பட்டேன்” என்றது வெளவால் வாணி

“வெளிநாட்டு பறவைகளா? இதோ செஞ்சிவப்பு கிளியும் அதனைச் சேர்ந்த உறவினர்களும் உற்சாகமாகவே இருக்கின்றனரே” என்றது குருவி குறுமணி.

“நீ சொல்ல வந்த செய்தியைச் சொல்லேன்” என்று கழுகு கரிகாலன் கேட்டது.

“அனைவரும் நான் சொல்வதைக் கவனமாக கேளுங்கள். நான் சொல்வது சரியானது தானா அல்லது தவறானதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். தவறானது என்று கருதினால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பீடிகையிட்டது வெளவால் வாணி.

“எதற்குப் பயப்படுகிறாய்? இங்கு வாழும் யாவரும் சமமானவர்களே. யாரும் யாருக்காகவும் பயப்படத் தேவையில்லை. எது குறித்தும் நீ சந்தேகம் கொள்ளவும் அவசியமில்லை!” என்று கழுகு கரிகாலன் வெளவால் வாணியைத் தைரியப்படுத்தியது.

“ஐயா! நாட்டில் வாழும் மனிதர்கள்தான் நம்மைவிட அதிக அறிவு பெற்றிருந்த போதிலும் ஜாதி என்றும், மதம் என்றும், பணக்காரன் என்றும், ஏழை என்றும், வலிமையுள்ளவன் என்றும் வலிமையில்லாதவன் என்றும், பலவாறு பிரிந்து ஒருக்கொருவர் தீங்குகள் செய்தும், ஊறுகள் விளைவித்தும், கொடுமைகள் செய்தும், குழப்பங்கள் விளைவித்தும், அமைதியை மறந்து அன்பினை மறந்து, அடிப்படைக் குணங்களை மறந்து ஒற்றுமையின்றிப் பிரிவுபட்டு வாழ்கின்றனர்” என்று கூறிய வெளவால் வாணி தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டது.

“ஆமாம் அவர்கள் மனிதர்கள்! அப்படித்தான் இருப்பார்கள். அதற்கென்ன இப்போது?” எனக் கேட்டது குருவி குறுமணி.

“அந்த மனிதர்களைப் போலவே நாமும் குணம் கெட்டு அலையலாமா? ஒற்றுமை இன்றி வாழலாமா? ஒருவருக்கொருவர் பேதம் பாராட்டலாமா? வாணி கேட்டது.

“நாங்க இங்க ஒற்றுமையாத்தானே இருக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்புடன் தானே வாழ்கிறோம்” என்று கழுகு கரிகாலன் கூறியது.

“நீங்கள் செய்வதுதான் ஒற்றுமையான செயலா?” வெளவால் வாணி தலைவனான கரிகாலனை மீண்டும் கேட்டது.

“அப்படியென்ன ஒற்றுமைக் குறைவான செயலை நாம் செய்துவிட்டோம்?” என்று மற்ற பறவைகளைப் பார்த்துக் கரிகாலன் கழுகு கேட்டது.

“வெளியூரிலிருந்து வந்தவர்களை விருந்தினராகப் பாவிப்பது தானே நமது பண்பாடு? ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களை விரட்டிவிட அல்லவா நினைத்தீர்கள். உங்களின் இந்தச் செயலைக் கண்டு பயந்து விட்டதால் தான் நான் கூட உங்களின் கண்களில் படாமல் மறைந்தே வாழ்ந்தேன்” என்றது வெளவால் வாணி.

வாணியின் பேச்சைக் கேட்ட உள்ளுர்ப் பறவைகள் அவமானத்துடன் தலையை குனிந்து கொண்டன. வெளிநாட்டுப் பறவைகள் தங்களுக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டன.

“ஆனால் உங்களில் கூட ஒரு நல்லவன் இருக்கின்றான். நீங்கள் திருந்த வேண்டும் என்றும் மனம் புண்பட்டு வெளிநாட்டுக்காரர்கள் வெளியேறக் கூடாது என்றும் அவன் நினைத்தான்” என்று பொடி வைத்து பேசியது வாணி வெளவால்.

“என்னது எங்களிலிருந்து மட்டும் ஒரு வித்தியாசமானவனா? அது யாரோ?” என்று கேட்டது கிளி கீதம்மா.

“ஆமாம் அது வேறு யாருமி;ல்லை. உங்களில் சிறுவனான சின்னான் தான்” என்றது வெளவால் வாணி.

“அவன் என்ன செய்தான் அப்படி” என்றது குருவி குறுமணி.

“அவன் தான் நீங்கள் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பறவைகள் வெளியேற வேண்டும் என்று நினைத்துப் புதிர் கேள்விகைளக் கேட்ட போது தானே பதில் கூறி அவர்களைத் தப்பிக்க வைத்தான்” என்று வெளவால் வாணி கூறியது.

“அவனைக் கூடப் பதில் சொல்லக் கூடாதுன்னு நாங்க சொன்னோமே” என்றது பருந்து பாப்பாத்தி

“அதுதான் நீங்க புரிச்சிக்காம செய்த காரியம். இதுக்கு உங்க மனசுல இருக்கிற பொறாமைக் குணம் தான் காரணம்” என்றது வெளவால் வாணி.

“இது வரைக்கும் கேட்ட புதிர்களில் நாங்களும் தான் பதில் சொல்லியிருக்கோம்” குருவி குறுமணி ஆத்திரப்பட்டது.

“ஆனாலும் சின்னான்தான் யாருக்கும் யாரலயும் துன்பம் நேரக் கூடாதுன்னு நெனச்சி அதச் செய்தான்” வெளவால் வாணி பதில் கூறியது.

“சரி இதை இதோட விடுங்க. அடுத்த என்ன செய்யுறதுன்னு பாருங்க. நாம எல்லாம் ஒற்றுமையாக இருக்கணும். எல்லோரோடையும் அன்பா இருக்கணும். அதுக்கு என்ன வழின்னு சொல்லுங்க” என்றது ஆந்தை அருக்காணி.

“முதல்ல இது வரைக்கும் இங்க என்ன நடந்தது? ஒவ்வொருத்தரும் கேட்ட புதிருக்கு யாரு விடை சொன்னதுதான்னு நான் கவனமா பாத்துகிட்டே நான் இருக்கிறேன். அது பற்றி முதல்ல உங்களுக்குச் சொல்றேன்” என்றது வெளவால் வாணி.

“சரிதான்; இதுவரைக்கும் நாம செஞ்சது சரியா தவறான்னு கண்டு பிடிக்க நல்ல வழிதான்” என்று தலைவன் கழுகு கரிகாலன் ஒத்துக் கொண்டது.

“முதல் புதிர் கணக்குலயிருந்து சொல்லணும்” கிளி கீதம்மா தன்பங்குக்குப் பேசியது.

“சரி அப்படியே செய்றேன்” என்று ஒத்துக் கொண்டது வெளவால் வாணி.

 புதிருக்கான விடை

“அடுத்த புதிரைப் பருந்து பாப்பாத்தி கூறியது. அதன்படி, அது 260 மரங்களைக் கொண்ட மாந்தோப்பில் மூன்று மலர்கள் சம மதிப்பில் பங்கிட்ட கதையைப் புதிராகக் கேட்டது.

அதன்படி முதல் மகனுக்கு

11 மரம் 10,000 என 77 மாமரமும் -70000

1 மரம் 10000 என 3 தென்னை மரமும் -30000

80 மரங்கள் -1லட்சம்

இரண்டாவது மகனுக்கு

66 மாமரமும் -60000

4 தென்னை மரமும் -40000

70 மரங்களும் – 1லட்சம்
எனவும்,

மூன்றாவது மகன்

55 மாமரமும் – 50000

5 தென்னையும் -50000

60 மரமும் 1லட்சம் என்றும்

நான்காவது மகன்

44 மாமரமும் – 40000

6 தென்னையும் -60000

50 மரமும் 1லட்சம் என்றும்

வரும். அதை யாருமே கூறவில்லை” என்றது வெளவால் வாணி.

“சரி. நான் இன்று வரை நடந்த அனைத்து விஷயங்களையும் நன்கு கவனித்து வெளவால் வாணி நமக்கு விளக்கிவிட்டது. வந்தவரை வரவேற்கும் நற்குணத்தை நாம் மறந்ததை நினைவூட்டியது. அதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்று தலைவன் தனது ஆசையை வெளியிட்டது.

“ஆமாம் தலைவர் கூறுவதும் சரிதான்” என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

“சரி நம்மில் ஒருவன் அதிக அறிவுள்ளவனாக இருக்கின்றான். அவனைப் பாராட்ட வேண்டாமா?” கிளி கீதம்மா கேட்டது.

“நிச்சயமாகப் பாராட்டத்தான் வேண்டும். உயரே உயரே பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது” என்று மாமனிதர்கள் கூறுவார்கள். ஆனால் இங்கோ பருந்து செய்யக் கூடாத குற்றத்தைச் செய்ததால் தண்டனை அடைந்தது. ஆனால் சிறுவனான சின்னான் அனைவரிடமிருந்தும் பாராட்டும் பெறும் படி உயர்ந்திருக்கிறது” என்றது குயில் குப்பம்மாள்.

“எனவே சிறுகுருவி ஆனாலும் பருந்தும் எட்ட முடியாத உயரத்தில் அறிவின் உச்சியில் இருக்கின்றான் நமது சிட்டுக்குருவி சின்னான். எனவே உயரே பறக்காமலேயே ஊர்க்குருவி பருந்தைவிடப் பன்மடங்கு உயர்ந்து விட்டது. என்ன நான் கூறுவது சரிதானே!” என்றது ஆந்தை அருக்காணி.

“அருக்காணியின் பேச்சு அருமையாக இருக்கிறது. அது கூறியது முற்றிலும் உண்மை” என்று கழுகு கூறும்போது பொழுது விடியத் தொடங்கியது.

அனைவரும் இரவை இனிமையாகக் கழித்த இன்பத்துடன் இரைதேட பறந்தனர். வெளி நாட்டுப் பறவைகளும் தாங்க இயலாத இன்பத்துடன் தங்களது வாழ்க்கையை நகர்த்தத் தொடங்கின. அன்றிலிருந்து பறவைகள் ஒற்றுமையுடன் வாழத் தொடங்கின.

  • இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)