இளம் தலைமுறையினரை புத்தகங்களை வாசிக்க வைப்பது எப்படி?

இந்தக் காலத்தில் புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கம் இளம் தலைமுறையினரிடம் குறைந்து கொண்டே வருகிறது.

ஏன் குறைந்து கொண்டே வருகிறது என்ற கேள்வி நமக்குள் எழலாம்.

அதற்கு முழு காரணமே சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவைகளாகும்.

இன்றைய இளம் தலைமுறையினர் இதில் அதிக நேரத்தை செலவு செய்கின்றார்கள். படிக்கும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் மட்டுமே புத்தகங்களை வாசிக்கிறார்கள்.

மற்ற நேரங்களில் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினரிடம் புத்தகங்களை வாசிக்க வைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றை இக்கட்டுரையில் இனி விரிவாய் காண்போம்.

ஆசிரியரின் அறிவுரைகள்

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முதலில் தினம் தோறும் செய்தித்தாள் வாசிக்கின்ற பழக்கத்தை பழக வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்தித்தாளை வாசிப்பதன் மூலம் மாணவர்கள் அவர்கள் நாட்டில் நடக்கக்கூடிய பல செய்திகளை தெரிந்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு கிடைக்கும்.

செய்தித்தாள்களைப் படித்து விட்டு வந்த மாணவர்களிடம் இன்றைய முக்கிய செய்தி என்ன? என்று மற்ற மாணவர்களிடம் கூறவேண்டும்.

இன்றைய இளம் தலைமுறையினர் விளையாட்டுச் செய்திகளை வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

இவ்வாறாக மாணவர்களுக்குச் செய்தித்தாள் மூலம் வாசிக்கின்ற பழக்கத்தை கொண்டு வந்து படிப்படியாக சில நல்ல புத்தகங்களை வாசிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுரை கூறினால் அதனை கட்டாயம் இன்றைய தலைமுறையினர் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நூலகங்களில் பல புத்தகங்கள்!

ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் நூலகங்கள் இருக்கின்றன. அங்கே பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.

பள்ளி, கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மாணவர்களுக்கு தங்களின் பாடப்புத்தகங்களை வாசிக்க வைப்பதுடன், அதற்கு இணையாக மேற்கோள் காட்டப்படும் புத்தகங்களையும் நூலகத்திற்குச் சென்று அதைப் படித்து அதில் உள்ள தகவல்களைச் சேகரித்து வகுப்பறையில் மற்ற மாணவர்களிடம் கூற வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு அந்தப் பாடத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை!

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.” குறள் எண் – 396

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

வாசிப்பு என்பது படிப்பின் ஒரு பகுதியாகும். நாம் எந்த அளவிற்கு அதிக புத்தகங்களை வாசிக்கின்றோமோ, அதற்கு ஏற்றார் போல நமக்கு அறிவு வளரும் என்பது மெய்யாகும்.

வாரந்தோறும் வாசகர் வட்டம்

இன்று ஒவ்வொரு ஊர்களிலும் பொது நூலகம் இருக்கிறது. அங்கேயும் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசிப்பாரற்று கிடைக்கின்றது.

அதனை ஒரு சில முதியவர்களும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இளம் தலைமுறைகளின் எண்ணிக்கை அங்கே சற்று குறைவாகவே இருக்கிறது.

நூலகப் பணியாளர்கள் அந்த ஊர்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்குப் பொது நூலகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அங்கு உள்ள ஒவ்வொரு மாணவரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

பிறகு வாரந்தோறும் ஒருநாள் வாசகர் வட்டம் என்ற ஒரு நிகழ்வை நிகழ்த்தி ஏதாவது ஒரு சிறுகதை, இலக்கியங்கள், புதினம் போன்றவற்றில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்து அதனைப் பற்றி கலந்துரையாடினால் அவர்களுக்கு வாசிப்பு என்பது பழகிப் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பை நேசிப்போம்!

மூளையின் தூண்டுகோல்களாக புத்தகங்களே இருக்கின்றன. வாசிக்கத் தெரிந்தவனுக்குத்தான் சக மனிதனை நேசிக்கத் தெரியும்.

“பத்து பறவைகளோடு பழகினால் நீங்கள் ஒரு பறவையாகிவிட முடியாது!

பத்து நதிகளோடு பழகினால் நீங்கள் ஒரு நதியாகிவிட முடியாது!

பத்து புத்தகங்களோடு நீங்கள் பழகினால் பதினொராவது புத்தகமாக நீங்கள் வாசிக்கப்படுவீர்கள்!” என்று ஈரோடு தமிழன்பன் வாசிப்பின் முக்கியத்துவத்தை பற்றி கூறுகிறார்.

“இன்று நீ தலைகுனிந்து வாசித்தால் நாளை தலை நிமிர்ந்து நடக்கலாம்!” என்பது நிதர்சனமான உண்மையாகும்.

வல்லமை படைத்த வாசிப்பாளர்கள்!

வாழ்க்கையில் புத்தகங்களை வாசிப்பதே ஒரு பழக்கமாக வைத்து வாழ்ந்து காட்டிய பெரியோர்கள் பலர் உள்ளனர்.

காலையில் நூலகம் திறக்கும் போது முதல் மாணவனாக உள்ளே சென்று நூலகம் அடைக்கும் போது இறுதி மாணவராக வெளியே வந்தவர் தான் சட்டமேதை அண்ணல் டாக்டர். அம்பேத்கர் ஆவார்.

கன்னிமாரா நூலகத்தை நேசித்து வாசித்தவர் அறிஞர் அண்ணா ஆவார். தனக்கு அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில் கூட “கொஞ்ச நேரம் பொறுங்கள்! இந்த புத்தகத்தை முழுமையாக வாசித்து விட்டு நான் வருகிறேன்!” என்று அறுவை சிகிச்சைக்கு முன்பு கூட வாசித்துக் கொண்டே இருந்தார் அறிஞர் அண்ணா.

“நான் இறந்த பிறகு மலர்களைக் கொண்டு அலங்கரிப்பதை விட என் மடியில் புத்தகங்களை கொண்டு அலங்கரியுங்கள்” என்று கூறியவர் ஆசிய ஜோதி நேரு.

“வாசிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை!” என்று கூறுவதை விட நேரம் ஒதுக்கி வாசிப்பதே சிறந்தது. அதற்கு உதாரணங்களே இந்த வல்லமை படைத்த வாசிப்பாளர்கள்.

பரிசாக புத்தகங்களை ஈதல் வேண்டும்!

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு குடியரசு தினம்,சுதந்திர தினம், விளையாட்டு விழா, கலை விழா போன்ற நாட்களில் பல போட்டிகளை நடத்தி அவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம், உணவு பாத்திரங்கள் போன்றவற்றை பரிசாக வழங்குவதற்கு பதிலாக நல்ல சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை பரிசாக கொடுத்தால் அவர்கள் அதனை வாசித்து வாழ்க்கையில் வளம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்திலும் இனிதான புத்தகங்கள்!

விரைவாக ஓடிக் கொண்டிருக்கின்ற வாழ்க்கையில் ஒரு சில இளம் தலைமுறை நபர்களுக்கு வாசிக்க நேரமில்லாமல் போகலாம்.

ஆகையால் அவர்களைப் போன்றவர்களுக்கு தன் கையில் உள்ள மொபைல் போன் மூலம் இணையத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.

அவற்றில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களை பதிவிறக்கம் செய்து தினமும் குறைந்தது ஒரு பத்து பக்கங்களாக வாசித்தால் உங்களுக்கு மன நிறைவு ஏற்படும். சில நாட்களிலேயே அந்த புத்தகம் முழுமை அடையும்.

நம் கையில் உள்ள அலைபேசியில் நல்ல புத்தகங்களை வாசித்து நன்மை பெறுவதும் அதை தவிர்த்து தேவையில்லாத விஷயங்களை தேடி தீமை பெறுவதும் நம்மை சார்ந்ததாகும்.

இதனை “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் கூறுகிறார்.

சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்

நமது இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களுக்கான சாகித்ய அகாதமி விருது என்ற ஒரு விருதினை வழங்கி சிறப்பிக்கின்றது. அப்படிப்பட்ட நூல்கள் மக்களுக்கு முக்கியமான கருத்துக்களை கூறக்கூடிய புத்தகங்களாக உள்ளன.

அவற்றை நாம் வாசிப்பதன் மூலம் நமக்கு அதிக அறிவு கிடைக்கும் என்பதில் சிறிதளவு ஐயமில்லை. எனவே சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்களை இளம் தலைமுறையினர் படிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும்.

இது பற்றிய தகவல்களை இளம் தலைமுறையினருக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூற வேண்டும்.

பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும்!

பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர்கள் மாணவர்களை வாசிக்க வைக்க முடியும். ஆனால் வீட்டில் இளம் தலைமுறையினரின் பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளை புத்தகத் திருவிழா, புத்தக கண்காட்சி போன்றவற்றிற்கு அழைத்துச் சென்று அங்கு உள்ள புத்தகங்களை காட்டி அவர்களுக்கு தானாகவே ஆர்வம் உண்டாகும் படி செய்ய வேண்டும்.

அங்குள்ள புத்தகங்களை அவர்கள் வாங்கி படிப்பதன் மூலம் அவர்களை வாசிக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதனுக்கு வாசிப்பு என்பது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். வாசிப்பின் மூலமே ஒரு மனிதன் நிறைய அறிவை பெறுகின்றான்.

ஆசிரியர்களின் அறிவுரைகள், பெற்றோர்களின் ஊக்கம், இணையதளம், பொது நூலகங்கள் இதனால் மட்டுமே நாம் வாசிப்பை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பதற்கு பல நூல்கள் இருக்கின்றன.

புராண நூல்களை படித்தால் ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

அறிவியல் புத்தகங்களை அதிகமாக படித்தால் அறிவியல் ஆராய்ச்சி போன்றவைகளில் நமது அறிவை வளர்த்துக்கொண்டு மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்களான எய்ட்ஸ், கேன்சர், சுகர் போன்ற பல நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்று அறிவியல் விஞ்ஞானி ஆகலாம்.

தமிழ் இலக்கியங்களில் அதிக வாசிப்பே மேற்கொண்டால் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

வரலாற்று நூல்களைப் படித்தால் வரலாறு படைக்கலாம்!

இவ்வாறு வாசிப்பு என்பது ஒரு மனிதனை வளப்படுத்தும் கருவியாக உள்ளது.

“கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்று ஔவையார் தனிப்பாடலில் கூறுகிறார்.

அதைப்போல நாம் வாசித்த புத்தகங்கள் குறைவாகவே இருந்தாலும் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் அதிகமாக உள்ளது. ஆகையால் வாழும் வரை வாசித்துக் கொண்டே இருப்போம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com