புத்தாண்டு தீர்மானம் என்பது ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நல்ல விசயங்களை தீர்மானித்து செயல்படுத்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எனக் கூறலாம்.
புத்தாண்டு தீர்மானத்தை தனிப்பட்ட நபரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களோ எடுக்கலாம். இந்த தீர்மானம் தங்களைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ இருக்கலாம்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை பாடுபட்டு அடைவதே புத்தாண்டு தீர்மானத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
புத்தாண்டில் தீர்மானம் எடுக்கும் வழக்கமானது பழங்கால நாகரீகமான பாபிலோனிய நாகரீகத்தில் தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தற்போது ஆண் பெண் வேறுபாடின்றி எல்லா வயதினரும் புத்தாண்டு தீர்மானத்தை நிர்ணயிக்கின்றனர்.
ஆண்டின் தொடக்க நாளில் செய்யப்படும் நல்ல செயலானது அந்த ஆண்டு முழுவதும் தொடரும் என்ற நம்பிக்கை பரவலாக எல்லோரிடமும் காணப்படுகிறது. அதனாலே புத்தாண்டின் தொடக்க நாள் முதல் இத்தீர்மானங்கள் பின்பற்றப்படுகின்றன.
ஒவ்வொருவரும் பல்வேறு விதங்களில் புத்தாண்டில் தீர்மானங்களை எடுக்கின்றனர். ஆனால் அவற்றை எவ்விதம் சரியாக கடைப்பிடிக்கின்றனர் என்பதே கேள்வி.
பெரும்பாலானோரின் பதில் வெறும் கொள்கை அளவிலே நிற்கின்றது; செயல்படுத்த முடியவில்லை என்பதும், தீர்மானங்களைச் செயல்படுத்தினாலும், தொடர்ந்து செய்ய முடியவில்லை என்பதுமே ஆகும்.
எந்த விதமான புத்தாண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். எவ்விதம் அதனைச் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.
புத்தாண்டு தீர்மானங்களின் தன்மைகள்
முதலில் புத்தாண்டில் தீர்மானம் மேற்கொள்வோர் ஓரளவு முயற்சியோடு செயல்படுத்தக் கூடிய தீர்மானங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தீர்மானங்கள் பெரியவையாகவோ சிறியவையாகவோ இருக்கக் கூடாது.
கற்னையில் செய்யக் கூடியவையாக உள்ள தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடாது.
எண்ணிக்கையில் அதிகமான தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடாது.
நாம் நம்முடைய சூழ்நிலை மற்றும் வாழ்க்கைக்கு ஏற்ற இலக்குகளை மட்டுமே தீர்மானங்களாகக் கொள்ள வேண்டும்.
தீர்மானங்களை செயல்படுத்த செய்ய வேண்டிய முயற்சிகள்,
புத்தாண்டில் செயல்படுத்த வேண்டிய தீர்மானங்களை குறித்து நிர்ணயித்தபின் அவற்றைப் பற்றி குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் செயல்படுத்த வேண்டிய தீர்மானங்கள் குறித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இதனால் இலக்குகளை நிறைவேற்ற அவர்களின் நினைவூட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புகளைப் பெறலாம்.
நாம் தீர்மானித்த இலக்குகளை செயல்படுத்த அவற்றிக்கான செயல்திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் தீர்மானித்த இலக்குகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியதும் அதனை தொடர்ந்து ஆர்வமுடன் செயல்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும்.
எந்த செயலையும் பொதுவாக தொடர்ந்து 21 நாட்கள் செயல்படுத்துகின்ற போது தொடர்ந்து அந்த செயலை செயல்படுத்த உடலும் மனமும் தயார் ஆகிவிடும் என்பது பொதுவான விதி. எனவே தொடர்ந்து 21 நாட்கள் தீர்மானித்த இலக்குகளை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
புத்தாண்டில் மேற்கொள்ள வேண்டிய சமுதாய தீர்மானங்கள்
பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைப் படிப்படியாக குறைத்து அதனை முற்றிலும் சமுதாயப் பயன்பாட்டில் இருந்து நீக்க உறுதி கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு மாசுபடுத்தும் பொருட்களைப் பயன்படுத்துவதையும், செயல்களைச் செய்வதையும் அறவே தவிர்க்க உறுதி கொள்ள வேண்டும்.
மின்சாரத்தை அளவோடு பயன்படுத்த உறுதி கொள்ள வேண்டும். தேவையில்லாத இடங்களில் மின் விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை தனிநபர் வாகன பயன்பாட்டைத் தவிர்த்து பொது வாகனப் பயன்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு மழைநீரினை வளமையாக பயன்படுத்துவதை (நிலத்தடி நீரை சேமிக்கும் முறை) அறிந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதனைக் கடைப்பிடிப்பதோடு ஏற்கனவே உள்ள மரங்கள் உள்ளிட்ட தாவரங்களைப் பாதுகாக்க வேண்டும்.
புத்தாண்டில் தீர்மானங்கள் மேற்கொண்டு அதனை செயலாக்குவது தன்னம்பிக்கை வளர்க்கும்.
மேலும் தோல்வியைக் கண்டு துவளாது வாழ்க்கையில் முன்னேற தைரியத்தையும், துணிந்து செயலாற்றும் தன்மையையும் கொடுக்கும்.
எனவே ஒவ்வோர் ஆண்டும் புதிதான நல்ல புத்தாண்டு தீர்மானம் மேற்கொண்டு அதனை செயல்படுத்தி நம்முடைய வாழ்க்கையை மேம்படச் செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நாட்டையும் வளமாக்குவோம்.
– வ.முனீஸ்வரன்