புத்திமதி

முத்துக்குமரன், தம்முடைய அடுக்கு மாடி வீட்டு கூடத்தில் சோபாவில் அமர்ந்து மொபைலில் மூழ்கியிருந்தார்.

பக்கத்து வீட்டு முதிய பெண்மணி வசந்தா வாசலில் வந்து நின்றார்.

முத்துக்குமரனின் மனைவி வெண்ணிலா அறையிலிருந்து வெளிப்பட்டு “வாங்க அம்மா!” என்று வரவேற்றாள்.

“என்னங்க!” என்று முத்துக்குமரனின் தோளை உலுக்கினாள்.

முத்துக்குமரன் தலை நிமிர்ந்து “வாங்க அம்மா! உட்காருங்க!” என்றார்.

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த வசந்தா, “என்னவோ போங்க, என் பொண்ணும் மாப்பிள்ளையும் இரட்டை பேரப் பசங்கள என்கிட்ட கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டாங்க.

விக்னேஷும் ஜகதீஷும் சதா சர்வ காலமும் இந்த மொபைல்லையே மூழ்கி கிடக்காறங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கறது கூட மெசேஜ்ல தான்.

நீங்க பெரிய மனுஷர். சார் தான் மொபைலை தாண்டி உலகம் இருக்குனு அவங்களுக்கு சொல்லணும். சொல்வீங்களா சார்?”” என்று நிறுத்தினார் வசந்தா.

முத்துக்குமரன் “சொல்றேன் அம்மா!” என்றார்.

வசந்தா “சரி நான் வரேன்!”‘என்றபடியே மெதுவாக நடந்து வெளியேறினார்.

வெண்ணிலா சிரித்தாள்.

முத்துக்குமரன் சிடுசிடுப்பு காட்டினார்.

“என்னை பெரிய மனுஷர்னு அவங்க சொன்னதுக்கு சிரிக்கறியா?” என்றார்.

வெண்ணிலா சொன்னாள் “நான் அதுக்கு சிரிக்கல.

இராம கிருஷ்ண பரமஹம்சர்கிட்ட ஒரு அம்மா, பையனைக் கூட்டிகிட்டு வந்து, ‘சாமி இவன் இனிப்பு நிறைய சாப்பிடறான். சாப்பிடாதேன்னு சொல்லுங்க. நீங்க சொன்னால் கேட்பான்’னு சொன்னாங்க.

‘சரி ரெண்டு நாள் கழிச்சு வாங்க’ன்னு சாமி சொன்னாராம்.

அந்த அம்மா போன பிறகு சிஷ்யர் கேட்டாராம்; ‘தம்பி ரொம்ப இனிப்பு சாப்பிடாதே! உடம்புக்கு ஆகாதுன்னு இப்பவே சொல்ல வேண்டியதுதானே! அது எதுக்கு ரெண்டு நாள் நேரம்?

சாமி சொன்னாராம், ‘முதல்ல நான் இனிப்பு சாப்பிடறதை நிறுத்தணும்; அப்புறம்தான் புத்தி சொல்லணும். அதுக்குத்தான் ரெண்டு நாள்.’

நீங்க ஒங்க மொபைல் ஸ்க்ரீன் டைமை குறைக்கப் பாருங்க அப்புறம் பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு புத்தி சொல்லுங்க. நான் என் வேலையை பார்க்கறேன்!” என்றபடி அவள் சமையலறையை நோக்கி நடந்தாள்.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“புத்திமதி” மீது ஒரு மறுமொழி

  1. […] புத்திமதி அத்தை மடி மெத்தையடி […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.