ஓதிடும் தமிழின் கீழே
ஓரணி நின்று வென்று
ஆதியின் மொழி இனத்தை
அகிலமே போற்றச் செய்த
நீதியின் வடிவே
நெஞ்சம் நிறைந்திட்ட
நெடும் மறவே
போதையின் மடிக்கிடந்து
புசிப்பதா நஞ்சை நீயும்!
இளம்தளிர் மேனி பாழாய்
இற்று தான் போகுதேடா
வளமான வாழ்வும்
வீணாய் வக்கிரத்தில் வீழுதேடா
குளம்நிறை கண்ணீர் விட்டு
குமுறுதே உந்தன் சொந்தம்
இளங்கன்றே மீண்டு வாடா
இழிசெயல் எடுத்துப் போட்டு!
அரக்கனாய் கைகள் நீட்டி
அணைக்குதே போதை
மெல்ல மறந்திடா
உந்தன் நெஞ்சை
மௌனியாய் தின்று செல்ல
உறுத்திடும் தூசி தன்னை
உமிழுமே கண்ணீர்கூட
வெறுத்து நீ வாழ்ந்து காட்ட
வேள்வியா நடத்த வேண்டும்?
நல்லதை நெசவு செய்து
நாளெல்லாம் உடுத்திக் கொண்டால்
இல்லத்தில் இனிமை பொங்கும்
இருப்போரை சுவைக்கச் செய்யும்
கள்ளிப்பால் விட்ட கண்ணும்
காணுமே நல்ல காட்சி
கொள்ளியை எடுத்து நீயும்
கோதுதல் தலைக்கும் நன்றா?
எத்திசை நோக்கினாலும்
எங்கிலும் போதை ஆட்டம்
பத்தினி பெண்ணை கூட
பரத்தையாய் பார்வை காட்டும்
பித்தமும் தலைக்கு ஏறும்
பிழை குழி வீழ நேரம்
புத்தானாய் வாழ வேண்டாம்
புத்தியில் மனிதனாகு…
பிழைசெய்தார் யார் தான்?
நாடா? பெற்றோரா? இல்லை
மற்றோர் உழைக்காமல்
வாழும் போக்கா?
உனையணைத்த தீய நட்பா?
பழுதென்று ஆனதற்கு
பங்கு உண்டு யாவருக்கும்
விழிப்போடு இருந்து பாரு
விடியலே உந்தன் பக்கம்!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250