புத்தியைப் பயன்படுத்து

புத்தியைப் பயன்படுத்து என்பது ஒரு நல்ல சிறுகதை. நம் பிரச்சினைகளை சமாளிக்க, நாம் எப்படிப் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இக்கதை சொல்லிக் கொடுக்கும்.

கதிரும் சந்துருவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கதிர் அமைதியானவர். சந்துரு துடுக்குத்தனம் நிறைந்தவர்.

சந்துரு தனது வீட்டுத் தோட்டத்தில் கோழிகள் நிறைய வளர்த்து வந்தார். தோட்டத்திற்கு வேலிகள் ஏதும் போடவில்லை.

ஆதலால் சந்துருவின் கோழிகள் கதிர் வீட்டிற்குச் சென்று, அருகே இருந்த‌ செடி, கொடிகளை எல்லாம் கிண்டிக் கிளறி பாழாக்கின.

அவருடைய வீட்டு முற்றத்தில் தங்களுடைய கழிவுகளால் அசிங்கப்படுத்தின.

கதிர் சந்துருவிடம் கோழிகள் தன்னுடைய வீட்டு முற்றத்தைப்  பாழ்படுத்துவதாகவும், அதனால் தோட்டத்திற்கு வேலிகள் போடும்படியும் கூறினார்.

ஆனால் சந்துரு கதிரின் வார்த்தைகளை சட்டை செய்யவில்லை. மாறாக கதிரிடம் சண்டை போட்டார்.

கதிர் ஒருநாள் தன்னுடைய மனைவியிடம் சந்துருவின் செயல்களையும், கோழிகளின் அட்டகாசத்தையும் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய மகன் இதனைக் கேட்டுக் கொண்டிருந்தான். “அப்பா, நான் நாளை இந்த கோழிப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுகிறேன்” என்றான்.

“நீ ஏதும் செய்ய வேண்டாம். அந்த சந்துவை உன்னால் சமாளிக்க இயலாது. நீ சிறுவன். நானே இந்த பிரச்சினையைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்றார்.

கதிரின் மகனும் “சரி” என்று ஒப்புக் கொண்டான்.

மறுநாள் கதிரின் மகன் கடைக்குச் சென்று ஐந்து முட்டைகளை வாங்கி வந்தான். பின்னர் தங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த‌ செடிகளுக்கு அடியில் வைத்தான்.

சிறிது நேரத்தில் சந்துரு வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது கதிரின் மகன் செடிக்கு அடியில் இருந்த முட்டையை வெளியே எடுத்து வந்தான். சந்துரு அதனைக் கவனித்தார்.

“அம்மா, கோழி நம் வீட்டில் முட்டை போட்டிருக்கின்றது” என்று சந்துருவுக்குக் கேட்குமாறு கத்திக் கொண்டே முட்டையை வீட்டிற்குள் கொண்டு சென்றான்.

பின்னர் சிறிது நேரம் கழித்து, மற்றொரு செடிக்கு அடியில் இருந்து சந்துருவிற்கு தெரியும்படி மற்றொரு முட்டையை எடுத்து வந்தான். இவ்வாறாக அன்றைக்கு முழுவதும் சந்துருவிற்கு தெரியும்படி முட்டைகளை எடுத்து வந்தான்.

இதனைக் கவனித்த சந்துரு உடனே மறுநாளே தன்னுடைய தோட்டத்திற்கு வேலி போட்டார். சந்துருவின் கோழிகளும் கதிரின் வீட்டிற்கு வரவில்லை.

இதனைக் கண்டதும் “நான் எவ்வளவு சொல்லியும் கேட்டகாத சந்துரு, எதற்காக திடீரென தன்னுடைய தோட்டத்திற்கு வேலி போட்டார்?” என்று கூறி கதிர் ஆச்சர்யம் அடைந்தார்.

உடனே கதிரின் மகன் நடந்தவைகளைக் கூறினான்.

அதனைக் கேட்டதும் கதிர் “கத்தியைப் பயன்படுத்தாதே; புத்தியைப் பயன்படுத்து என்றார்கள் பெரியோர். அது சரிதான்.” என்று கூறினார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.