விஜயதசமி

புனித புரட்டாசி

கடவுளர்கள் மற்றும் முன்னோர்களை புரட்டாசி மாதத்தில் வழிபட புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவதால் இம்மாதம் புனித புரட்டாசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

தமிழ் ஆண்டின் ஆறாவது மாதமாகவும், தட்சியாண காலத்தின் மூன்றாவது மாதமாகவும் புரட்டாசி வருகிறது.

புரட்டாசியும், மார்கழியும் எமனின் கோரை பற்கள் என்று இந்து மதத்தில் கருதப்படுகிறது. எனவே இம்மாதத்தில் தெய்வங்களின் வழிபாடுகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும் என்பது பழமொழி. புரட்டாசியில் தண்ணீர் இன்றி வளரும் பிரண்டை செடிகூட காயும். அந்தளவுக்கு இம்மாதத்தில் காற்றானது ஈரப்பதம் இன்றி வறண்டு காணப்படும்.

புரட்டாசி மாதத்தில் பகல் முழுவதும் வெயில் நன்றாக அடிக்கும். இரவு நேரத்தில் மழையும், குளிரும் இருக்கும். பகல் மற்றும் இரவில் மாறுபட்ட காலநிலை காணப்படும். எனவேதான் இம்மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திருப்பதியில் புரட்டாசியில் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பு வாய்ந்தது.

புரட்டாசியில் நவராத்திரி, விஜயதசமி, புரட்டாசி சனி, மகாளய அமாவாசை, கேதார கௌரி விரதம், நடராஜர் வழிபாடு, புரட்டாசி பௌர்ணமி, நிறைமணி விழா, பத்மநாபா ஏகாதசி, அஜா ஏகாதசி போன்ற வழிபாட்டு முறைகளும், விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

 

நவராத்திரி

நவராத்திரி கொலு
நவராத்திரி கொலு

 

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இவ்விழா ஒன்பது இரவு மற்றும் பத்து பகல்கள் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தின் வளர் பிறை பிரதமை முதல் தசமி பகல் வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி இந்தியா முழுவதும் கோலாகலமாக‌க் கொண்டாடப்படுகிறது.

இவ்விழா மைசூரில் தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜை என்றும், தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை, விஜய தசமி என்ற பெயர்களிலும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரிக் கொண்டாடத்தின்போது அம்மனின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. இவ்விழாவின்போது அம்பிகையை முதல் மூன்று நாட்கள் ஆற்றலின் வடிவமாக துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தின் வடிவமாக திருமகளாகவும், கடைசி மூன்று நாட்கள் ஞானத்தின் வடிவமாக கலைமகளாகவும் வழிபடுகின்றனர்.

தமிழ்நாட்டில் நவராத்திரி வழிபாட்டின்போது களிமண்ணால் செய்த பொம்மைகளை கொலு வைத்து பெண்கள் இரவில் பாடல்கள் பாடி பயிறு வகைகளை படைத்து கூட்டு வழிபாடு செய்கின்றனர்.

நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. அன்றைய தினத்தில் புத்தகங்கள், இசைக்கருவிகள், தொழில் சம்பந்தமான கருவிகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி வழிபாட்டினால் அம்பிகை வாழ்க்கைக்குத் தேவையான வளங்களை வழங்குகிறாள்.

 

விஜயதசமி

விஜயதசமி
விஜயதசமி

 

விஜயதசமி என்பது புரட்டாசி மாதத்தில் வளர்பிறை தசமியில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி முழுவதும் மகிசனுடன் போர் புரிந்த அம்பிகையான துர்காதேவி விஜயதசமி அன்று அசுரனை வெற்றி கொண்டாள் என புராணங்கள் கூறுகின்றன.

இராமாணயத்தில் இராமன், இராவணனுடன் போர் புரிந்து அவனை வெற்றி கொண்டதும் விஜயதசமி நாளில் தான். மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்களின் அஞ்ஞான வாசத்தை முடித்து ஆயுதங்களை புதுப்பித்துக் கொண்டதும் விஜயதசமியில் தான்.

விஜயதசமி நாளில் தொடங்கும் எச்செயலும் வெற்றியைக் கொடுக்கும். எனவேதான் புதிய தொழில்கள் ஆரம்பிப்பதும், முதன் முதலில் குழந்தைகளுக்கு கல்வியைக் கற்றுக் கொடுக்கத் தொடங்குவதும் விஜயதசமியில் செயல்படுத்தப்படுகின்றன.

ஒன்பது இரவுகளில் அம்மனை வழிபட்டு தங்களிடம் உள்ள குற்றங்குறைகளை நீக்கி நன்னடத்தை பெற்று உயர்ந்த ஞானத்தை அடைந்து இறுதியில் பத்தாவது நாள் பகலில் மேற்கூறியவற்றை பெற்றதன் அடையாளமாக வெற்றியைக் கொண்டாடி அம்பிகைக்கு மக்கள் நன்றி செலுத்துகின்றனர்.

 

புரட்டாசி சனி

திருப்பதி
திருப்பதி

 

புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் சனீஸ்வரன் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் மேற்கொள்கின்றனர்.

ஏதேனும் ஒரு புரட்டாசி சனிக்கிழமையில் மாவினை மலைபோல் குவித்து பெருமாளாக‌ப் பாவித்தும், மாவினால் விளக்கு செய்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எள்சாதம், உளுந்த வடை ஆகியவற்றை இவ்வழிபாட்டில் படையலிடுகின்றனர்.

சிலர் திருமண் கொண்டு நாமமிட்டு கோவிந்தா கோவிந்தா எனக் கூறிக்கொண்டு பணத்தையும், அரிசியையும் பிச்சைப் பொருளாக ஏற்கின்றனர். பணத்தினை திருப்பதியில் செலுத்துகின்றனர். அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு எல்லோரும் தானம் அளிக்கின்றனர்.

பெரும்பாலான பெருமாள் கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு அன்னதானம் நடத்தப்படுகிறது. புரட்டாசியில் செய்யும் அன்னதானம் மோட்சத்தைக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமையில் சனி பகவான் தோன்றினார். ஆதலால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு விரதமிருந்து வழிபாடுகள் நடத்துகின்றனர்.

 

மகாளய அமாவாசை

நீத்தார் கடன்
நீத்தார் கடன்

 

புரட்டாசியில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்றழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களை மகாளய பட்சம் என்றழைக்கின்றனர்.

இந்த நாட்களில் விரதமுறையைக் கடைபிடித்து நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு எள், நீர் இறைத்து சிரார்த்தம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆன்மீகரீதியாக நம் முன்னோர்கள் மகாளய பட்சத்தில் தம் சந்ததியினரைத் தேடி பூமிக்கு வருகின்றனர் என்று கருதப்படுகிறது. ஆதலால் மகாளய பட்ச பதினைந்து நாட்களும் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்து, அவர்களின் நினைவாக அன்னதானமும் செய்யப்படுகிறது.

மகாளய பட்சத்தில் சிரார்த்தம் செய்வதால் முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் நல்ல வாழ்க்கைத்துணை, நன்மக்கட்பேறு, வளமான வாழ்வு, நீடித்த ஆயுள் ஆகியவை கிடைக்கும். மகாளய அமாவாசையில் செய்யப்படும் ஏழை எளியவர்களுக்கான தானதர்மங்கள் பல மடங்கு பெருகி புண்ணியங்களைத் தரும்.

 

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம்

 

இவ்விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரதமுறையைப் பின்பற்றியே உமையம்மை சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். இதனால் இறைவன் மாதொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.

இவ்விரத முறையில் அதிரசம் என்ற பொருள் பிரசாதமாக‌ப் படைக்கப்படுகிறது. இவ்வழிபாட்டில் நோன்பு கயிறு வைத்து வழிபடப்பட்டு இறுதியில் எல்லோர் கையிலும் அணிவிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என எல்லோரும் இவ்விரதமுறையைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஒரு சிலர் இவ்விரதத்தை கடைசி ஒன்பது,ஏழு, ஐந்து, மூன்று நாட்களும், ஒரு சிலர் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கின்றனர். கோவில்களிலும், வீடுகளிலும் கேதார கௌரி வழிபாடு நடத்தப்படுகிறது.

இவ்விரதமுறையை மேற்கொள்வதால் நீண்ட நாட்கள் தம்பதியர் ஒற்றுமையாக வாழ்தல், நல்ல வாழ்கைத்துணை, நற்புத்திரர், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை கிடைக்கும்.

 

நடராஜர் வழிபாடு

நடராஜர்
நடராஜர்

 

வருடத்தில் ஆறுமுறை நடராஜருக்கு அபிசேகங்கள், ஆராதனைகள் செய்யது வழிபாடு சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. அதில் புரட்டாசி சதுர்த்தியும் ஒன்று. அன்றைய தினம் மாலை வேளையில் சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிசேகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறும்.

 

புரட்டாசி பௌர்ணமி நிறைமணி விழா

நிறைமணி
நிறைமணி

 

புரட்டாசி பௌர்ணமி அன்று சிவன் கோவில்களில் நிறைமணி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சிவன், அம்பாள், விநாயகர் சந்நிதிகளில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் உண்ணப்படும் பொருட்கள் தோரணங்களாகக் கட்டி அலங்கரிக்கப்படுகிறது.

ஒரு சமயம் வறட்சிக்கு காரணமான துர்முகன் என்ற கொடிய அரக்கனை வெற்றி கொண்டு, அம்மை சதாட்சி என்ற பெயரில் மழைவளத்தைப் பெருக்கினாள். மேலும் பச்சை காய்கறிகளுடன் சாகம்பரி என்ற பெயரில் தோன்றி பூவுலகை பசுமையாக்கி உலக உயிர்களுக்கு உணவளித்தாள். இதனைப் போற்றும் விதமாக புரட்டாசி பௌர்ணமியில் சிவாலயங்களில் உண்ணக்கூடிய பொருட்களைக் கொண்டு தோரணங்கள் அமைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வழிபாடானது வறட்சியின்றி நீர்வளத்துடன் தங்கு தடையின்றி உண்ண உணவுகள் கிடைக்கும் என்று கருதப்பட்டு காலங்காலமாக மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் நல்ல நீர்வளத்துடன் தங்குதடையின்றி உணவு கொடுத்தற்காக அம்மனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. புரட்டாசி பௌர்ணமிக்கு மறுநாள் படைக்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 

பத்மநாபா ஏகாதசி

புரட்டாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி பத்மநாபா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபாடு செய்ய நீர்வளம் பெருகி பஞ்சம் ஏற்பாடமல் தடுக்கும்.

 

அஜா ஏகாதசி

புரட்டாசி தேய்பிறையில் வரும் ஏகாதசி அஜா ஏகாதசி ஆகும். இந்நாளில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபாடு செய்ய இழந்தது திரும்பக் கிடைக்கும். சுபிட்சமான ஒற்றுமையான குடும்ப வாழ்வு கிடைக்கும்.

அரிசந்திரன் இந்நாளில் விரதம் மேற்கொண்டு மனைவி, மக்கள், அரசாட்சி ஆகிய அனைத்தையும் திரும்பப் பெற்றான். இவ்விரத நாளில் தயிர் உபயோகிக்கக் கூடாது.

புண்ணியங்கள் தரும் புனித புரட்டாசி மாதத்தில் தெய்வங்களையும், முன்னோர்களையும் வழிபட்டு ஆத்மநலத்தைப் பெருக்கி நல்வாழ்வு வாழ்வோம்.

-வ.முனீஸ்வரன்

 


Comments

“புனித புரட்டாசி” மீது ஒரு மறுமொழி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.